ஜார்கண்ட் மாநிலத்தில் மஹேந்திரா நிதி நிறுவன ஊழியர் ஒருவர் கர்ப்பிணிப் பெண் மீது டிராக்டர் ஏற்றி கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்கண்ட் மாநிலத்தின் ஹசாரிபாக் மாவட்டத்தில் உள்ள இச்சாக்கில், மாற்றுத்திறனாளி நபர் ஒருவர் மஹேந்திரா நிதி நிறுவனத்தில் வாங்கிய கடனை திரும்ப செலுத்தாததால், அந்நிறுவன ஊழியர்கள் இந்த நபரின் வீட்டுக்குச் சென்று டிராக்டரை பறிமுதல் செய்ய முற்பட்டனர். அப்போது, கடுமையான வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், 3 மாத கர்ப்பிணிப் பெண் ஒருவர் டிராக்டர் முன் நின்று டிராக்டரை மறித்திருக்கிறார். ஆனால், அதனை சிறிதும் பொருட்படுத்தாமல், அந்நிறுவன ஊழியர் ஒருவர் டிராக்டரை இயக்கியபோது, கர்ப்பிணிப் பெண் மீது டிராக்டர் ஏறியது. இதனால் அப்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதை அடுத்து, காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்ட நிலையில், மஹேந்திரா நிதி நிறுவனத்தின் ஊழியர்கள் 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.