குஜராத் மாநிலத்தில் அகமதாபாத் நகரில் கடந்த 2008-ம் ஆண்டு ஜூலை 26-ந்தேதி தொடர் குண்டு வெடிப்பு நடைபெற்றது. சுமார் 1 மணி நேரத்திற்குள் 21 இடங்களில் வெடித்த குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இந்த குண்டு வெடிப்பு சம்பவங்களில் சிக்கி, 56 பேர் பலியானார்கள். 200-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
இந்த குண்டு வெடிப்பு சம்பவங்கள் குறித்து காவல்துறையினர் 35 வழக்குகளை பதிவு செய்ததுடன், இந்திய முஜாஹிதீன் அமைப்புடன் தொடர்புடைய 82 பேரையும் கைது செய்தனர்.
இந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது. இந்த நீதிமன்றத்தில் ஒருவர் மட்டுமே குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார். மேலும் 4 பேர் இதுவரை கண்டுபிடிக்க முடியாத நிலையில், அவர்கள் மீதான விசாரணை நடைபெறவில்லை. இதன் காரணமாக மீதமுள்ள 77 பேருக்கு எதிராக வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.
இதையடுத்து, இந்த வழக்கில், அகமதாபாத் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஏ.ஆர்.பட்டேல் இன்று தீர்ப்பு வழங்கினார். அதில், 49 பேர் குற்றவாளிகள் என்றும், 28 பேர் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்படவில்லை என்பதால், அவர்களை விடுதலை செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தண்டனை விபரங்கள் நாளை விசாரணை நடைபெறும் என்று நீதிபதி ஏ.ஆர் பாட்டீல் தெரிவித்துள்ளனர்.