உலக நாடுகள் அதிர்ச்சி; காஷ்மீரில் முழு அடைப்பு 28 பேரைப் படுகொலை செய்த பயங்கரவாதிகள்
அவசரமாக திரும்பிய பிரதமர்; சம்பவ இடத்தில் அமித்ஷா ஆய்வு
புதுதில்லி, ஏப். 23 - ஜம்மு - காஷ்மீர் மாநிலம், அனந்த் நாக் மாவட்டம், பஹல்காமிலிருந்து 7.கி.மீ. தொலைவிலுள்ள பைசரன் என்ற சுற்றுலாத் தலத்தில், செவ்வாயன்று பிற்பகல் 2 மணியளவில், பயங்கர வாதிகள் கொடூரத் தாக்குதல் நடத்தினர். இதில், முதற்கட்டமாக 25 பேர் பலியானதாக கூறப்பட்ட நிலையில், இந்த எண்ணிக்கை புதன்கிழமையன்று 28 ஆக உயர்ந்தது. மேலும், 20-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு உள்ளனர். தாக்குதலில் பலியான 26 பேரில் 22 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் 2 பேர் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள். இவர்கள் தவிர, கர்நாடகம் மற்றும் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த தலா இருவர், உத்தரப் பிரதேசம், ஹரியானா, குஜராத்தைச் சேர்ந்த தலா ஒருவர் என தெரியவந்துள்ளது. காயம் அடைந்தவர்களில் 2 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. 2019-ஆம் ஆண்டுக்குப் பிறகு காஷ்மீர் பள்ளத்தாக்கில் பொது மக்களை குறிவைத்து நடத்தப்பட்ட முதல் பெரிய பயங்கரவாதத் தாக்கு தல் இது என்பதால், நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலக நாடுகள் கண்டனம்
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி, ஜம்மு - காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட நாட்டின் முக்கியத் தலைவர்கள், திரைப்பிரபலங்கள், விளையாட்டுத் துறையினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். அமெரிக்கா, ரஷ்யா, இஸ்ரேல், பாகிஸ்தான், ஆப்கா னிஸ்தான் உள்ளிட்ட உலக நாடுகளும் தங்களின் அதிர்ச்சியையும், கண்டனத்தையும் தெரிவித்துள்ளன.
பாகிஸ்தான் மறுப்பு
சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்ட தற்கு பாகிஸ்தான் வெளியுறவு அமைச் சகம் இரங்கல் தெரிவித்துள்ளது. அத்து டன், ‘காஷ்மீர் தாக்குதலில் எங்களுக்கு தொடர்பு இல்லை’ பாகிஸ்தான் பாது காப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் கூறியுள்ளார்.
தேடுதல் பணி தீவிரம்
எனினும், பாகிஸ்தான் பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தின் லஷ்கர்-இ-தொய்பாவின் (LeT) பினாமி அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட் (TRF) அமைப்பு தாக்குத லுக்கு பொறுப்பு ஏற்றுள்ள நிலையில், பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரமடைந்துள்ளது. அவர்கள் வனப்பகுதிகளில் பதுங்கியிருக்கலாம் என்பதால், ஹெலிகாப்டர்கள் மூலம் தேடுதல் பணி நடைபெற்று வருகிறது. ஜம்மு - காஷ்மீர் காவல்துறைக்கு உதவுவதற்காக தேசிய புலனாய்வு முகமை (NIA) குழுவும், தாக்குதல் நடந்த இடத்துக்கு வந்துள்ளது.
எல்லையில் பதற்றம்
பஹல்காம் பயங்கரவாதிகள் தாக்குதலுக்குப் பதிலடியாக, இந்தியா ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ நடத்தலாம் என்ற அடிப்படையில், பாகிஸ்தான் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, போர் விமானங்களை இந்திய எல்லையில் நிறுத்தியுள்ளது. முன்னதாக, தாக்குதல் சம்பவம் நடந்த அடுத்த சில மணிநேரத்திலேயே உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜம்மு - காஷ்மீர் விரைந்து, அங்குள்ள அரசு அலுவலர்களுடன் உயர்மட்ட ஆலோசனை மேற்கொண்டார். அனந்த்நாக் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் சிகிச்சை பெற்று வரு பவர்களையும் சந்தித்து ஆறுதல் கூறினார். பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய பைசரன் புல்வெளிப்பகுதிக்கு சென்ற அமித் ஷா, ஹெலிகாப்டர் மூலம் வான்வெளியில் இருந்து தாக்குதல் நடந்த பகுதிகளை பார்வையிட்டார். பின்னர், ஸ்ரீநகர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு வெளியே சுற்றுலாப் பயணிகள் 26 பேரின் உடல்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.
இந்தியா திரும்பிய மோடி
இந்நிலையில், இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக சவுதி அரேபியா சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி, ஜம்மு - காஷ்மீரின் பயங்கரவாதத் தாக்குதல் சம்ப வத்தைத் தொடர்ந்து பயணத்தைப் பாதியிலேயே முடித்துக் கொண்டு புதனன்று அதிகாலை இந்தியா திரும்பினார். தில்லி விமான நிலையத்தில் வந்திறங்கிய அவர், தேசிய பாது காப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருடன் விமான நிலையத்திலேயே அவசர ஆலோசனை நடத்தினார்.
கொதித்தெழுந்த காஷ்மீரிகள்; 35 ஆண்டுக்குப் பின் முழு அடைப்பு
பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியான பெரும்பாலா னோரும் சுற்றுலா பயணிகள் என்ற நிலையில், இந்த கொடூரத் தாக்குதலை கண்டித்து, காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் புதனன்று (ஏப்ரல் 23) முழு அடைப்புப் போராட்டம் நடை பெற்றது. 35 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக, ஒரு பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக முழு அடைப்பு போராட்டத்தை காஷ்மீரிகள் நடத்தினர். காஷ்மீரின் முன்னணி பத்திரிகைகளும் தங்கள் முன்பக்கங்களை முழுவதுமாக கருப்பு நிறத்தில் அச்சிட்டு, இந்த பயங்கர வாத தாக்குதலுக்கு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தன. ‘கிரேட்டர் காஷ்மீர்’, ‘ரைசிங் காஷ்மீர்’, ‘காஷ்மீர் உஸ்மா’, ‘ஆப்தாப்’, மற்றும் ‘டைமீல் இர்ஷாத்’ உள்ளிட்ட ஆங்கில மற்றும் உருது மொழி பத்திரிகைகள் இந்த போராட்டத்தில் பங்கேற்றன. அதேபோல பயங்கரவாதிகள் தாக்குதலைத் தொடர்ந்து, அச்ச மடைந்த சுற்றுலாப் பயணிகளை, உணவு உள்ளிட்ட வசதிகளுடன் மசூதி களில் தங்கவைத்து, காஷ்மீர் மக்கள் ஆதரவுக்கரம் நீட்டியுள்ளனர்.
காஷ்மீர் அரசு நிவாரணம் அறிவிப்பு
இறந்தவர்களின் குடும்பங் களுக்கு ரூ. 10 லட்சம் நிவாரண நிதியையும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ. 2 லட்சம் உதவித்தொகையையும் ஜம்மு - காஷ்மீர் அரசு அறிவித்துள்ளது. அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக வியாழனன்று பகல் 3 மணிக்கு அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா அழைப்பு விடுத்துள்ளார்.
பயங்கரவாதிகளோடு சண்டையிட்டு பலியான முஸ்லிம் இளைஞர்
மதத்தை கேட்டறிந்து தான், பயங்கரவாதிகள் ஒவ்வொரு சுற்றுலாப் பயணியையும் சுட்டுக் கொன்றதாக ஊடகங்களில் செய்தி பரப்பப்பட்டது. ஆனால், கொல்லப்பட்டவர்கள் 2 பேர் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் என்பதோடு, சுற்றுலாப் பயணிகளைக் காப்பாற்றுவதற்காக, அவர்களின் துப்பாக்கியை பறித்து சண்டையிட்ட அனந்தநாக் பகுதி குதிரை சவாரி தொழிலாளி சையத் உசேன் ஷா என்ற முஸ்லிம் இளைஞரும் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். “எனது குடும்பத்துக்கு மகன் மட்டுமே வருமானம் ஈட்டும் நபராக இருந்தார். இப்போது அவனும் இறந்துவிட்டான்’’ என சைத் உசேன் ஷா-வின் தாயார் கண்கலங்க பேட்டி அளித்துள்ளார். குழந்தைகளையும், பெண்களையும் பயங்கரவாதிகள் ஒன்றும் செய்யவில்லை.
தாக்குதல் நடத்தியவர்கள் நாட்டின் எதிரிகள்!
சிபிஎம் அரசியல் தலைமைக்குழு கடும் கண்டனம்
புதுதில்லி, ஏப். 23 - ஜம்மு - காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் காட்டுமிராண்டித்தனமானது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கூறியுள்ளது. பயங்கரவாதிகளால், அப்பாவிகள் 28 பேர் கொல்லப்பட்டுள்ள துயரமான நேரத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாட்டு மக்களோடு ஒன்றுபட்டு நிற்கிறது என்றும் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. “ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகளால் 28 சுற்றுலாப் பயணிகள் காட்டுமிராண்டித்தனமாகக் கொல்லப்பட்டதற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. தாக்குதலில் உயிரிழந்த அப்பாவி மக்களின் குடும்பங்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
குற்றவாளிகள் நீதிமன்றம் முன்பு நிறுத்தப்பட வேண்டும்
இந்தத் தாக்குதலில் பலர் பலத்த காயமடைந்துள்ளனர். அவர்கள் விரைவில் குணமடைய வேண்டும். இந்தக் கொடூரமான குற்றத்தைச் செய்த கயவர்கள் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினர் ஒன்றிய அரசின் கீழ் உள்ளனர். இந்தக் கொடூரமான தாக்குதலுக்கு காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்துவதில் ஒன்றிய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். குற்றத்தைச் செய்தவர்கள் நாட்டின் எதிரிகள், குறிப்பாக காஷ்மீர் மக்களின் எதிரிகள். பாதுகாப்பின்மை குறித்து விசாரணை நடத்த வேண்டும் நெரிசலான சுற்றுலாத் தலங்களில் பாதுகாப்பு இல்லாதது உட்பட, இந்த தாக்குதலின் அனைத்துக் கோணங்களையும் விசாரிக்க வேண்டியது ஒன்றிய அரசின் கடமையாகும். இந்தத் துயரமான நேரத்தில், அதிதீவிர அடிப்படைவாத சக்திகளுக்கு எதிராக- நாட்டு மக்களுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றுபட்டு நிற்கிறது. இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் கூறியுள்ளது.