states

காரணமின்றி சிறையில் வைப்பதை ஏற்க முடியாது

புதுதில்லி, ஜன. 16 - பணமோசடி வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்களை சிறையில் வைத்திருக்கவே அமலாக்கத்துறை விரும்புவதாகவும், இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாது என்றும் உச்சநீதிமன்றம் சாடி யுள்ளது. பண மோசடி வழக்கு ஒன்றில் தொடர்புடைய பெண்ணின் ஜாமீன்  மனு மீது, கடந்த டிசம்பர் 19 அன்று விசாரணை நடைபெற்றது.  அப்போது, ஆஜரான அம லாக்கத்துறை சட்ட அதிகாரி ஒருவர்,  பிஎம்எல்ஏ சட்டப்பிரிவு 45 துணைப்பிரிவு 1-இன் கீழ் உள்ள கடுமையான நிபந்தனைகள் பெண் களுக்கும் பொருந்தும் என கூறி ஜாமீன் தர எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். இந்நிலையில், புதனன்று இந்த வழக்கு மீது மீண்டும் விசாரணை நடை பெற்றது. அப்போது, “உண்மையில் பிஎம்எல்ஏ பிரிவு 45 துணைப்பிரிவு 1-ல் உள்ள ஒரு விதி, சிறப்பு நீதி மன்றம் உத்தரவிட்டால், மேற்கண்ட பிரிவுகளின் கீழ் வரும் ஒரு நபரை விடுவிக்கலாம்” என்று கூறுவதை  குறிப்பிட்டு, அதற்கு மாறாக, அமலாக்கத்துறை அதிகாரி கூறி யிருப்பதை நீதிபதிகள் சுட்டிக்காட்டி னர். இது முற்றிலும் அபத்தமானது என்றும் விமர்சித்தனர். உடனே, இது தகவல் தொடர்பு இடைவெளி காரணமாக ஏற்பட்ட கவனக் குறைவு என்று சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா சமாளித்தார். அதற்காக மன்னிப்பும் கோரினார். தொடர்ந்து பேசிய நீதிபதிகள், குற்றம் சாட்டப்பட்டவர்களை சிறையிலேயே வைத்திருக்க வேண்டும் என்ற ஒன்றிய அரசின் நோக்கத்தையே அமலாக்கத்துறை யின் நடவடிக்கைகள் பிரதிபலிப்பதாக சாடியதுடன், சட்டத்திற்கு முரணான அமலாக்கத்துறையின் இத்தகைய வாதங்களை பொறுத்து கொள்ள முடியாது என்றும் எச்சரித்தனர். “ஒன்றிய அரசுக்காக ஆஜராகும் வழக்கறிஞர்களுக்கு சட்டத்தின் அடிப்படை விதிகள் தெரியாவிட்டால் அவர்கள் ஏன் வழக்கில் ஆஜராக வேண்டும்” என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், பணமோசடி வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட பெண்ணிற்கு ஜாமீன் வழங்கியும் உத்தரவிட்டனர்.