பெயரைக் காணோம்..
பாஜக தலைவராகப் பொறுப்பேற்றுள்ள நிதின் நபின், தனது பெயரை ஊடகவி யலாளர்களிடம் சொல்வதில் பெரும் சிரத்தை எடுத்துக் கொண்டுள்ளார். அவருடைய பெயரை எழுதுகையில் நவின் என்று எழுதாமல், நபின் என்று எழுத வேண்டும் என்கிறார். எப்படி அழைப்பது என்றால், நவின் தான் என்று சொல்லியிருக்கிறார். நாடு முழுக்க இருந்து வந்த கட்சித் தலைவர்க ளின் வாழ்த்துகளை ஊடகவியலாளர்கள் சுட்டிக்காட்டி யிருக்கிறார்கள். நீங்கள் தான் சரி செய்ய வேண்டும் என்று நிதின் நபின் மன்றாடத் தொடங்கி விட்டார். ஏற்கெனவே இருக்குற குழப்பம்லாம் பத்தாதுனு இந்த பெயர்க்குழப்பம் வேறயா என்று பாஜக தேசிய தலைமை அலுவலக ஊழியர்கள் பொரிந்து தள்ளுகிறார்கள். ஏராளமான காகிதம் வீணாய்ப் போய் விட்டதே என்று அவர்கள் வருத்தப்படுகிறார்கள்.
எல்லையக் காணோம்..
தங்கள் ஆட்சி வந்தால் எல்லைப்புறங்கள் பாது காப்பாக இருக்கும் என மேடைகளில் வீரவசனம் பேசினார்கள் பாஜகவினர். எல்லைகளில் வேலிகள் கூட அதிகரித்துள்ளன. ஆனாலும், எல்லைப் புறங்களில் காவலை அதிகப்படுத்தி வருகிறார்கள். அதோடு நிற்கவில்லை. உள்துறையின் கீழ் வரும் மத்திய ஆயுதக் காவல்படைகளான எல்லைப் பாது காப்புப்படை, இந்தோ-திபெத் எல்லைப்படை, எல்லை ஆயுதப்படை, அசாம் ரைபிள்ஸ் ஆகியவற்றின் அதிகாரிகள் ஆண்டுக்குக் குறைந்தது 50 இரவுகளாவது எல்லைப்புறக் கிராமங்களில் தங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்கள். படைகளின் அன்றாடத் தேவைகளை இந்தக் கிராமங்களில் இருந்து விலைக்கு வாங்குங்கள் என்றும் கூறியுள்ளனர். கடந்த பத்தாண்டுகளில் மேலும் பாதுகாப்பற்றதாக எல்லைகள் மாறியுள்ளன என்று கிராமத்தினரே சொல்கிறார்கள்.
அமைதியக் காணோம்..
அசாமின் போடோலாந்து பகுதி மண்டலத்தில் அமைதியைக் கொண்டு வந்துவிட்டோம் என்று ஆளும் பாஜக சொன்னது. சில அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகி விட்டது என்று கூட அறிவித்துவிட்டார்கள். ஆனால் போடோக்களுக்கும், சந்தால் பழங்குடியின மக்களுக்கும் இடையிலான சண்டைகள் தொடர்கின்றன. இரண்டு நாட்களுக்கு முன்பாக ஒரு இளைஞர் கொல்லப்பட்டதை அடுத்து, இருதரப்புக்கும் இடையில் கோக்ரஜார் மாவட்டத்தில் மோதல் நடந்தது. பாதுகாப்புக்காக இருதரப்பையும் சேர்ந்த நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். பாஜக ஆளும் மாநிலங்கள் என்றாலே மக்கள் சொந்த ஊர்களை விட்டு, முகாம்களில் தங்க வைக்கப்படுவது வாடிக்கையாகி விட்டது என்று எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டுகிறார்கள்.
வெற்றியக் காணோம்..
மும்பை மாநகராட்சித் தேர்தல் முடிவுகளில் தில்லு முல்லுகள் தவிர பாஜக வெற்றி பெற்றதற்கு மற்றொரு காரணமும் வெளியில் வந்துள்ளது. பாஜக தலைமையிலான கூட்டணி 22 லட்சத்து 38 ஆயிரம் வாக்குகள், அதாவது 41 விழுக்காடு வாக்குகளைப் பெற்று 118 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. கூட்டணியாக இல்லாமல் போட்டியிட்ட காங்கிரஸ், சிவசேனா (உத்தவ்), தேசியவாத காங்கிரஸ் (சரத்), நவநிர்மாண் சேனா ஆகிய கட்சிகள் இணைந்திருந்தால் மொத்தம் 23 லட்சத்து 6 ஆயிரம் வாக்குகள் கிடைத்திருக்கும். இது 42.01 விழுக்காடாகும். 96 வார்டுகளில் இந்தக்கட்சிகள் வெற்றி பெற்றன. இணைந்து நின்றிருந்தால் மும்பை மாநகராட்சி பாஜகவின் கைகளுக்குப் போயிருக்காது. பாஜக இமாலய வெற்றி என்று முடிவுகள் வருகையில் செய்தி போட்ட ஊடகங்கள் கொஞ்சம், கொஞ்சமாக யதார்த்த நிலவரங்களை வெளியிடுகின்றன.
