states

img

தேர்தல் பிரச்சாரத்திலும் நீடிக்கும் மோதல் - அஜித் பவாரை புறக்கணித்த பிரதமர் மோடி

மும்பை 288 தொகுதிகளைக் கொண்ட மகாராஷ் டிராவில் நவம்பர் 20 அன்று ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. எதிர்க் கட்சிகளின் மகா விகாஸ் அகாதி (எம்விஏ) கூட்டணிக் கட்சிகள் மோதல் இன்றி தொகுதி உடன் பாட்டை முடித்து தீவிர பிரச்சா ரத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் பாஜக தலைமையிலான மகா யுதி கூட்டணிக்குள் தொகுதி உடன் பாடு, வேட்பாளர் அறிவிப்பு, தேர்தல் பிரச்சாரம் என நாள்தோறும் மோதல் சம்பவங்கள் அரங்கேறி வரு கின்றன.  இந்நிலையில், பாரமதி சட்ட மன்ற தொகுதியில் போட்டியிடும் தேசியவாத காங்கிரஸ் தலைவ ரும், மகாராஷ்டிரா துணை முதல்வ ருமான அஜித் பவாருக்கு பிரதமர்  மோடி பிரச்சாரம் செய்யாமல் புறக் கணித்துள்ள சம்பவம் மகாராஷ்டி ரா பாஜக கூட்டணிக்குள் குழப் பத்தை ஏற்படுத்தியுள்ளது. 2019இல் மோடி ஏன் வந்தார்? இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பின் பொழுது பத்திரிகையாளர்கள் பார மதியில் பிரதமர் மோடி பிரச்சாரம் செய்யாமல் புறக்கணித்தது தொ டர்பாக கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அஜித் பவார்,”மாவட்ட அளவில் மட்டுமே பிரதமர் மோடி பிரச்சாரம் மேற்கொள்வார். ஆனால் பாரமதி போன்ற தாலுகா அளவிலான இடங்களில் அவர் பிரச்சாரம் மேற்கொள்ள மாட்டார். இதனை பெரிதாக்க வேண்டாம்” என கூறினார்.  ஆனால் கடந்த 2019இல் நடை பெற்ற சட்டமன்ற தேர்தலின் பொழுது பாரமதி தொகுதியில் ஒருங்கிணைந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் வேட்பாள ராக அஜித் பவார் போட்டியிட்டார். அப்பொழுது பிரதமர் மோடி பாஜக வேட்பாளரை ஆதரித்து அஜித் பவாருக்கு எதிராக பிரச்சாரம் மேற் கொண்டார். அப்பொழுது தாலுகா  அளவிலான பாரமதிக்கு வந்து அஜித் பவாருக்கு எதிராக பிரச்சா ரம் செய்த பிரதமர் மோடி, தற்போது பாஜக கூட்டணியிலேயே இருக்கும் அவரை புறக்கணித்து இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நவாப் மாலிக் மீது பழிபோட்டு தப்பிக்கும் பாஜக

மன்குர்த்- சிவாஜி நகர் தொகு தியின் தேசியவாத காங்கிரஸ் (அஜித்) வேட்பாளரான நவாப் மாலிக்கிற்கு, தாவூத் இப்ராஹிம் உடன் தொடர்பு இருப்பதாகக் குற் றச்சாட்டு உள்ளது. அதனால் நவாப் மாலிக்கிற்கு ஆதரவாக பிரச்சா ரம் செய்ய மாட்டோம் என பாஜக வினர் அறிவித்தனர். அதே போல புனே மாவட்டத்தில் பாஜகவிற்கு ஆதரவாக நாங்கள் பிரச்சாரம் செய்ய மாட்டோம் நவாப் மாலிக் கோஷ்டி போஸ்டர் அடித்து ஒட்டி யது. இந்த பிரச்சனை காரணமா கவே பிரதமர் மோடி, அஜித் பவா ருக்கு பிரச்சாரம் மேற்கொள்ளா மல் புறக்கணித்ததாக பாஜக சாக் குப் போக்கு சொல்லி சமாளித்து வருகிறது.

மோதல் தீவிரமடைய வாய்ப்பு

பாரமதி சட்டமன்ற தொகுதி தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மகாராஷ்டிரா முன்னாள் முதல்வருமான சரத் பவாரின் கோட்டையாகும். 1962 முதல் 1990 வரை 28 ஆண்டுகள் எம்எல்ஏவாக இருந்துள்ளார். அதன்பிறகு அஜித் பவாருக்கு சரத் பவார் பாரமதி தொகுதியை விட்டுக் கொடுத்தார். அஜித் பவார் 33 ஆண்டுகளாக பாரமதி தொகுதி எம்எல்ஏவாக உள்ளார். 50 ஆண்டு களுக்கு மேலாக பாரமதி தொகுதி சரத் பவார் குடும்பத்தின் கட்டுப் பாட்டில் உள்ளது.  இந்நிலையில், “அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியின்  தலைவர் மட்டுமல்ல. மகாராஷ்டிர மாநிலத்தின் தலைவராகவும் உள்ளார். கட்சி, மாநில அரசில் உயர் பொறுப்பில் உள்ள அஜித் பவாரை பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜகவினர் புறக்கணித்தது தவ றானது ஆகும். இதனால் வரும் காலங்களில் பாஜகவிற்கு ஆதர வாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட மாட்டோம்” என பெயர் வெளியிட விரும்பாத தேசியவாத காங்கிரஸ் கட்சியின் புனே மண்டல (6 மாவட் டங்கள்) நிர்வாகி கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எம்விஏ கூட்டணி தேசியவாத காங்கிரஸ் (சரத்) சார்பில் பாரமதி தொகுதி வேட்பாளராக யுகேந்திரா பவார் போட்டியிடுகிறார். 32 வய தான யுகேந்திர பவார், துணை முதல்வர் அஜித் பவாரின் சகோ தரர் ஸ்ரீனிவாஸ் பவாரின் மகனும், சரத் பவாரின் பேரனும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

மத வெறுப்புப் பிரச்சாரத்திற்கு ஷிண்டே, அஜித் பவார் எதிர்ப்பு - கலக்கத்தில் பாஜக

பிரதமர் மோடி, ஒன்றிய உள்துறை அமைச் சர் அமித் ஷா, உத்தரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத் உள்ளிட்ட பாஜக தலை வர்கள், உள்ளூர் நிர்வாகிகள் மக்களவைத் தேர்தல் போலவே மத வெறுப்புப் பிரச்சா ரத்தை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் ஆகியோர் பொது மேடையிலேயே கடும் எதிர்ப்பு தெரி வித்து வருகின்றனர். மகாராஷ்டிரா முதல்வரும், சிவசேனா தலைவருமான ஏக்நாத் ஷிண்டே,”நாங்கள் பின்பற்றும் இந்துத்துவா முற்றிலும் மாறு பட்டது. ஜோதிராவ் பூலே, ஷாகு, அம்பேத் கர் ஆகியோரின் சித்தாந்தத்துக்கு நாங்கள் எதி ரானவர்கள் அல்ல” என அவர் கூறினார். இதே போல துணை முதல்வரும், தேசிய வாத காங்கிரஸ் தலைவருமான அஜித் பவார்,”மகாராஷ்டிரா மத நல்லிணக்க நாடு.  அதனால் மற்ற மாநில அரசியல் தேவை யில்லை. வெளியாட்களின் அறிக்கைகளை மகாராஷ்டிர மக்கள் நிராகரிப்பார்கள். அனை வரையும் ஒன்றாக வைத்திருப்பது மகாராஷ்டி ராவின் பாரம்பரியம்” என உத்தரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத் வாஷிம் மாவட்டத் தில் பேசிய வெறுப்புணர்வைத் தூண்டும் உரைக்கு மறைமுகமாக கண்டனம் தெரிவித் தார். மத வெறுப்புப் பிரச்சாரத்திற்கு ஷிண்டே,  அஜித் பவார் எதிர்ப்பு தெரிவித்து இருப்பது பாஜகவிற்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ள தாக செய்திகள் வெளியாகியுள்ளன.

எதிர்ப்பு நடிப்பு...

மத வெறுப்புப் பிரச்சாரத்திற்கு ஷிண்டே, அஜித் பவார் எதிர்ப்பு தெரிவித்து பேசியது நல்ல விஷயம் தான். ஆனால் தேர்தலுக்காகவும், மதச் சார்பற்ற கட்சிகளின் கூட்டணியான எம்விஏ கூட்டணியின் வாக்குகளை பிரிக்கவுமே ஷிண்டே, அஜித் பவார் மத வெறுப்புப் பிரச்சாரத்திற்கு எதிரான வேஷம் போடு கிறார்களோ என சந்தேகமும் ஒருபக்கம் வலுத்து வருகிறது.