இஸ்ரேல் - ஹமாஸ் போர்நிறுத்த ஒப்பந்தம்
காசா, ஜன. 16 - இஸ்ரேல் ராணுவமும், ஹமாஸ் அமைப்பும் போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டுள்ளன. இந்த ஒப்பந்தம் ஜனவரி 19 ஞாயிற்றுக்கிழமை முதல் அமலாகும் என கத்தார் வெளியுறவுத் துறை அமைச்சர் முகமது பின் அப்துல் ரஹ்மான் அல் தானி அறிவித்துள்ளார். போர்நிறுத்த ஒப்பந்தம் முறையாக அமலாகின்றதா என்பதை கண் காணிக்கவும், விதி மீறல்கள் ஏற்பட்டால் அதற்குத் தீர்வு காணவும் வழிமுறை கள் இருக்கும் என்றும் அல் தானி தெரிவித்துள்ளார். காசாவில் மக்கள் தொகை அதிகம் உள்ள பகுதிகளிலிருந்து கிழக்குப் பகுதி வரை இஸ்ரேல் ராணுவத்தை திரும்பப் பெற வேண்டுமே எனவும் ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது. ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 110 பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடுதலை செய்ய வேண்டும் எனவும் அதற்கு ஈடாக நோய்வாய்ப்பட்ட 9 பேர் உட்பட 33 பணயக்கைதிகளை ஹமாஸ் அமைப்பு விடுவிக்கும் என கூறப்பட்டுள்ளது.
பழைய ஓய்வூதிய திட்டம்தான் தேவை ஆய்வுக்குழு அமைப்பதை கைவிட வலியுறுத்தல்
சென்னை, ஜன. 16 - தேர்தல் வாக்குறுதிபடி பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக சங்கத்தின் தலைவர் நெ.இல.சீதரன், பொதுச்செயலாளர் பி.கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில், கடந்த சட்டமன்ற தேர்தலின்போது முதலமைச்சரால் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியம் அளிக்கப்படும் என்ற வாக்குறுதியை புறக்கணிக்கக் கூடாது. ஓய்வூதியம் குறித்து ஜன.11 அன்று சட்டமன்றத்தில் நிதி அமைச்சர், குழு அமைப்பதாக செய்துள்ள அறிவிப்பு வேதனை அளிக்கிறது. ஒன்றிய அரசின் அடாவடித்தனமான ஓய்வூதிய அறிவிப்பை தமிழக அரசும் பின்பற்ற நினைப்பது ஏற்கத்தக்கதல்ல. ஒவ்வொரு அரசும் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் குழு அமைப்பது காலதாமதம் செய்வதற்கு மட்டுமே பயன்படுகிறது. ஒன்றிய அரசின் ஓய்வூதிய நிலைப்பாடுதான் சரியென்று தமிழக அரசு ஏற்பது நியாயமற்றது. முதலமைச்சரின் வாக்குறுதியை மீறிய செயலாகும். குழு அமைக்கும் நிதி அமைச்சரின் அறிவிப்பை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
ராசிபுரம் முன்னாள் எம்எல்ஏ மறைவு முதல்வர் இரங்கல்
சென்னை,ஜன.16- ராசிபுரம் முன்னாள் எம்எல்ஏ-வும், நாமக்கல் மாவட்ட முன்னாள் எம்.பி.யுமான பி.ஆர். சுந்தரம் உடல்நலக் குறைவு காரணமாக வியாழக்கிழமை (ஜன.16) காலமானார். அவருக்கு வயது 73. அவரது மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் சமூகவலைதளப் பக்கத்தில், “ராசிபுரம் சட்ட மன்றத் தொகுதி மற்றும் நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதி முன்னாள் உறுப்பினர் பி.ஆர். சுந்தரம் மறைந்ததை அறிந்து மிகவும் வருத்தமுற்றேன். மிக நீண்ட அரசியல் அனுபவம் கொண்ட சுந்தரம் சட்டமன்ற உறுப்பினர், நாடாளு மன்ற உறுப்பினர் மட்டுமல்லாது அதற்கு முன்பும் பல்வேறு நிலைகளில் பல பொறுப்பு களில் சிறப்பாக மக்கள் பணி ஆற்றி வந்தவர் ஆவார். 2021-ஆம் ஆண்டு முதல் திமுகவில் இணைந்து, கொள்கை பரப்பு துணைச் செயலாளராகவும் பணியாற்றி வந்தார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், அரசியல் இயக்க நண்பர்கள், நாமக்கல் மாவட்ட மக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை யும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று இரங்கலைப் பதிவு செய்துள்ளார்.
திருவள்ளுவர் மீது காவி ஸ்டிக்கர்; ஆளுநருக்கு கண்டனம்
சென்னை,ஜன.16- தமிழ் சமூகத்தின் முதுபெரும் அடையாளமான திருவள்ளுவர் மீது காவி ஸ்டிக்கர் ஒட்டும் ஆளுநர் ரவிக்கு அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத்தின் தலைவர் ரங்கநாதன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியான அறிக்கையில், ‘சமத்துவ மண்ணான தமிழ்நாட்டின் சமத்துவ சமயக் கோட்பாடுகளைத் தொடர்ந்து திருடி ஸ்டிக்கர் ஒட்டி வருகிறது. அய்யா வைகுண்டர், வள்ளலார் தொடங்கி இன்று திருவள்ளுவர் வரை யில் திருட்டு தொடர்கிறது. ஆர்.எஸ்.எஸ், ஆளுநர் ரவி, அண்ணாமலை இணைந்து நடத்தும் இக்கூத்தினை அறிவார்ந்த சமத்துவ நெறி கொண்ட தமிழ கத்தின் ஆன்மீக மரபு, தமிழ் தமிழகத்தின் சமத்துவ மரபு நிராகரிக்கிறது. ஆளு நரின் செயலை அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. மாபெரும் தமிழ் சமய மரபை களவாடும் இக்கூட்டத்தை மொத்தமாக முறியடிப் போம். திருவள்ளுவர் சனாதன தர்மத்திற்கு ஆதரவாக செயல்பட்டார் என்ற தோற்றத்தை உருவாக்க அவருடைய உருவத்தில் காவி சாயம் பூசி வருகிறார் ஆளுநர் ரவி என்றும் தெரிவித்திருக்கிறார்.
ஆம்ஸ்ட்ராங் நெருங்கிய நண்பர் ரவுடி சரவணன் துப்பாக்கி முனையில் கைது
சென்னை,ஜன.16- பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை வழக்கில் கூலிப்படைத் தலைவன் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, பிரபல ரவுடி நாகேந்திரன், அவரின் மகன் அசுவத்தாமன் உள்ளிட்டோர் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டனர். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழிக்குப்பழி வாங்க அவரின் தீவிர ஆதரவாளரான ஏ பிளஸ் ரவுடியான சரவணன் காத்திருந்தார். இதுதொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு உளவுத்துறை அறிக்கை கொடுத்திருந்தது. இதையடுத்து, ரவுடி சரவணனை சென்னை மாநகர காவல்துறையினர் தேடிவந்தனர். ஆனால் அவர் தலைமறைவாக இருந்தார். இதற்கிடையில் சரவணன் மீதான வழக்கில் அவருக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட்டும் பிறப்பித்திருந்தது. அதனால், சென்னைப் போலீஸார் வடமாநிலங்களில் அவரைத் தேடிவந்தனர். இந்தச் சமயத்தில்தான் சரவணன் சென்னை வியாசர்பாடியில் பதுங்கியிருக்கும் தகவல் தனிப்படை போலீஸாருக்கு கிடைத்தது. அங்குச் சென்ற போலீஸார் அவரை துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்துப் பிடித்தனர். போலீசாரை கண்டதும் சரவணன் தப்பிச் செல்ல முயன்றதால் போலீஸார் சரவணனின் இடது காலில் துப்பாக்கியால் சுட்டனர். இதில் அவர் நிலைகுலைந்து கீழே சரிந்தார். இதையடுத்து சரவணனை மீட்ட போலீஸார், சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவத்தில் காயமடைந்த எஸ்.ஐ மணி, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் சம்பவ இடத்திலிருந்து 4 நாட்டு வெடிகுண்டுகள், இரண்டு கத்திகள், பட்டன் கத்தி ஒன்று, கஞ்சா பொட்டலம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்துள்ளனர். ரவுடி சரவணன் மீது 6 கொலை வழக்குகள், 6 கொலை முயற்சி வழக்குகள் இதர வழக்குகள் 16 ஆகியவை உள்ளன. 5 தடவை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழும் கைது செய்யப்பட்டுள்ளார். ஒரு வழக்கில் ஜாமினில் வெளியில் வந்த சரவணன், நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு ஆஜராமல் தலைமறைவாகவே இருந்து வருகிறார். சரவணன் கைதான தகவலையடுத்து அவரின் மனைவி மகாலட்சுமி, சென்னை காவல் ஆணையருக்கு புகார் மனு ஒன்றைக் கொடுத்தார். அதன்பிறகே பாம் சரவணன் கைது செய்யப்பட்ட தகவல் வெளியில் தெரியவந்தது.
போலீஸ் பக்ருதீனை மதுரைக்கு மாற்றக்கோரும் வழக்கு அதிகாரிகள் பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை,ஜன.16- விசாரணை கைதி போலீஸ் பக்ருதீனை சென்னை புழல் சிறையில் இருந்து மதுரைக்கு மாற்ற கோரி அவரது தாய் அளித்த மனுவை 4 வாரத்தில் பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு அத்வானி ரத யாத்திரையின்போது மதுரை திருமங்கலம் அருகே ஆலம்பட்டி தரைப் பாலத்தில் பைப் வெடி குண்டுகள் வைத்த வழக்கு, கடந்த 2013 ஆம் ஆண்டு பாஜக மாநில பொதுச் செயலாளராக பதவி வகித்த சேலம் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கு உள்ளிட்ட முக்கிய வழக்குகளில் கைதான போலீஸ் பக்ருதீன் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணை கைதியாக சென்னை புழல் சிறையில் உள்ளார். இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் அவரது தாய் செய்யது மீரா தாக்கல் செய்த மனுவில், “புழல் சிறையில் தனிமையில் அடைக்கப்பட்டுள்ள எனது மகனை சிறைத் துறை அதிகாரிகள் தொடர்ந்து சித்ரவதை செய்து வருகின்றனர். சிறைக்குள் முறையாக அவருக்கு சிகிச்சையும் அளிக்கப்படவில்லை. எனவே, தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கும் வகையில் புழல் சிறையில் இருந்து அவரை மதுரை மத்திய சிறைக்கு மாற்ற வேண்டும்” என்று கோரியிருந்தார். நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், எம்.ஜோதிராமன் அமர்வில் இந்த மனு மீதான விசாரணை நடந்தது. அப்போது அரசு தரப்பில், ‘சிறை மாற்றம் தொடர்பான அவரது மனு பரிசீலனையில் உள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், ‘புழல் சிறையில் இருந்து மதுரைக்கு போலீஸ் பக்ருதீனை மாற்றுவது தொடர்பாக அளி்க்கப்பட்ட மனுவை சிறைத் துறை அதிகாரிகள் 4 வாரத்தில் பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’ என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.