சூரத் குஜராத் மாநிலம் அம்ரெலி பகுதியைச் சேர்ந்த 25 வயது பெண், பாஜக எம்எல்ஏ கெளஷிக் என்பவரையும், மாநில பாஜக அரசையும் சமூகவலைத்தளத்தில் விமர்சித்துள்ளார். மக்கள் நலன் பிரச்சனை தொடர்பாகவே அந்த இளம்பெண் விமர்சனம் செய்தார். உடனே குஜராத் காவல்துறை எம்எல்ஏ கெளஷிக்கை அவமதித்ததாகக் கூறி 2024 டிசம்பர் 29ஆம் தேதி இளம்பெண்ணை கைது செய்து ஊர்வலமாக அழைத்துச் சென்றது. நீதிமன்றம் நேரடியாக தலையிட்டு, பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ஜாமீன் வழங்கி விடுவித்தது. இந்நிலையில், இளம்பெண்ணை கைது செய்து ஊர்வலமாக அழைத்துச் சென்றதை கண்டித்து சூரத் நகரில் ஆம் ஆத்மி சார்பாக கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய குஜராத் ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களில் ஒருவரான கோபால் இத்தாலியா, “அப்பாவி பெண்ணிற்கு எங்க ளால் நீதி வாங்கிக் கொடுக்க முடியவில்லை. இதற்காக எங்களை மன்னித்துவிடுங்கள். இதே போன்று மோர்பியில் பாலம் இடிந்து விழுந்தது, வதோதரா படகு விபத்து, கள்ளச்சாராய சாவு, தீ விபத்து, அரசுத் தேர்வு வினாத்தாள் கசிவது என்று எத்தனையோ சம்பவங்கள் நடந்திருக் கின்றன. இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எங்களால் நீதி பெற்றுக்கொடுக்க முடிய வில்லை” என்று பேசிக் கொண்டிருந்த போது திடீரென தான் அணிந்திருந்த பெல்ட்டை கழற்றி தன்னை தானே ஆக்ரோசமாக அடித்துக் கொண்டார். உடனே அருகிலிருந்த ஆம் ஆத்மி நிர்வாகிகள் கோபாலை தடுத்து நிறுத்தினர். பாவம் தமிழ்நாடு அண்ணாமலை... கோபால் இத்தாலியா உண்மையாகவே பெல்ட்டால் ஆக்ரோஷமாக அடித்துக் கொண்டார். உடனே நெட்டிசன்கள் “இதுதான் உண்மையான சாட்டை அடி” என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் “பஞ்சு சாட்டை அடி” வீடியோவை ட்ரோல் செய்தும், கோபால் இத்தாலியாவின் வீடியோவை சேர்த்தும் சமூக வலைத்தளங்களில் அண்ணா மலையை வறுத்தெடுத்து வருகின்றனர்.