சென்னை, ஜன. 17 - அருந்ததியர் மக்களின் நீண்டகால கோரிக்கையின் அடிப்படையிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுத்த மிகப்பெரிய அள விற்கான போராட்டங்களாலும் தமிழ்நாட்டில் கொண்டுவரப்பட்ட சிறப்பு உள்இடஒதுக்கீட்டுச் சட்டம், கடந்த 15 ஆண்டுகளில் அருந்ததியர் மக்களின் கல்வி, வேலைவாய்ப்பில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியிருப்பது தகவல் உரிமைச் சட்ட புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக ‘தி இந்து’ நாளிதழில் (ஜனவரி 17- 2025) தி. ராமகிருஷ்ணன் செய்திக்கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அதில், இதுதொடர்பாக பல்வேறு விவரங்களை அவர் குறிப்பிட்டுள்ளார். பட்டியல் சாதியினருக்கான (SC) 18 சதவிகித இடஒதுக்கீட்டில் அருந்ததி யர்களுக்கு 3 சதவிகித உள் ஒதுக்கீடு (SC-A) அளிக்கும் சிறப்பு இடஒதுக்கீட்டுச் சட்டம், குறிப்பாக மருத்துவம் மற்றும் பொறியியல் கல்வியில் பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் (DTE) மற்றும் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் (DMRE) ஆகியவை தெரிவித்துள்ளன.
82 சதவிகிதம் அதிகரித்த மருத்துவ இடங்கள்
“எம்பிபிஎஸ் (MBBS) மருத்துவப் பட்டப்படிப்பில் மொத்த இடங்கள் 2018-19-ல் 3,600 ஆக இருந்தது. 2023-24-ல் 6,553 ஆக உயர்ந்துள்ளது. இது 82 சதவிகித அதிகரிப்பாகும். இடங்கள் அதிகரிப்புக்கு ஏற்ப, அருந்ததியர் (SC-A) பிரிவினருக்கான இடங்களும் 107-லிருந்து 193 ஆக - 80 சதவிகிதத்திற்கும் மேல் அதிகரித்துள்ளது” என தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. இதேபோல பல் மருத்துவப் படிப்பிலும் (BDS) குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற் பட்டுள்ளது. 2018-19-ல் SC(A) மாண வர்கள் 1.5 சதவிகிதம் மட்டுமே இருந்த நிலையில், மூன்று ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 3 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. 2018-19 இல் மொத்த இடங்கள் 1080-இல் அருந்ததியர் மாண வர்கள் 16 பேருக்கு இடங்கள் கிடைத்தன. தற்போது 2023-24இல் மொத்த இடங்கள் 1,737 ஆக அதிகரித்துள்ள நிலையில், அருந்ததியர் மாணவர்கள் 54 பேருக்கு இடங்கள் கிடைத்துள்ளன. 15 சதவிகித ஆண்டு வளர்ச்சி பொறியியல் கல்வியில் SC(A) மாணவர்களின் எண்ணிக்கை 2009-10-ல் 1,193-லிருந்து 2023-24-ல் 3,944 ஆக உயர்ந்துள்ளது. ஆண்டுக்கு சராசரியாக 15 சதவிகிதம் வளர்ச்சி இருப்பதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நீட் தேர்வால் (NEET) பாதிப்பு
நீட் (NEET) தேர்வின் தாக்கத்தை ஆய்வு செய்ய 2021-இல் அமைக்கப் பட்ட உயர்மட்டக் குழு, தனது அறிக்கை யில் சில கவலை தரும் தகவல்களை வெளியிட்டுள்ளது. அரசு மருத்துவக் கல்லூரிகளில் SC(A) ஒதுக்கீடு 2010-11-ல் 3.26 சதவிகிதமாக இருந்தது. இது 2015-16இல் 2.85 சதவிகிதமாக குறைந்துள்ளது. சுயநிதிக் கல்லூரி களில் 2011-12இல் 2.98 சதவிகிதத்தி லிருந்து 2016-17இல் 2.66 சதவிகிதமாக குறைந்துள்ளதாக குழு சுட்டிக்காட்டியுள்ளது. காவல்துறை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் வழங்கிய தகவலின்படி, துணை ஆய்வாளர் (எஸ்.ஐ - தாலுகா, ஆயுதப்படை மற்றும் சிறப்பு காவல்) பணியிடங்களில் அருந்ததியர் பிரதிநிதித்துவம் 2010-இல் அதிகபட்சமே 38 பேர் என்ற நிலையில் தான் இருந்தது. ஆனால் 2018-இல் தடயவியல் துறை எஸ்.ஐ பணியில் மட்டும் 10 பேர் நியமனம் பெற்றுள்ளனர்.
ஏழு சாதிகளுக்கு பலன்
தமிழ்நாடு அருந்ததியர் சிறப்பு இடஒதுக்கீட்டுச் சட்டம் 2009, அர சியலமைப்பின் 341-ஆவது பிரிவின் கீழ் வரும் ஏழு சாதிகளான - அருந்த தியர், சக்கிலியர், மாதாரி, மாதிகா, பகடை, தோட்டி மற்றும் ஆதி ஆந்திரர் - ஆகி யோருக்கு சிறப்பு உரிமை அளிக்கிறது. பொதுப்பிரிவு இடங்களுக்கும் இந்த சமூகத்தினர் போட்டியிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல அருந்ததியர் உள்ஒதுக்கீட்டு இடங் களுக்கு போதிய அருந்ததியர் விண்ணப்ப தாரர்கள் இல்லாதபட்சத்தில், அந்த இடங்களுக்கு எஸ்.சி. பட்டியலில் உள்ள சாதியினரும் போட்டியிட முடியும். கால் நூற்றாண்டு போராட்டம் உள் ஒதுக்கீட்டு கோரிக்கை என்பது அருந்ததியர் இயக்கங்கள் கால் நூற்றாண்டு கோரிக்கையாகும். இதுதொடர்பாக விருதுநகர், திண்டுக்கல் மற்றும் மேற்கு மாவட்டங்களில் கள ஆய்வு நடத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழகத்தில் அருந்ததியர் மக்கள் கணிசமான எண்ணிக்கையில் இருந்த போதிலும் இவர்களில் ஒருவர் கூட மாவட்ட ஆட்சியராக இல்லை; ஒரு சிலரே மருத்து வராக உள்ளனர்; அரசு ஊழியர்களை யும் கூட விரல் விட்டு எண்ணிவிடலாம்; இவர்களில் பட்டதாரிகளின் எண்ணிக்கை மிகச் சொற்பமாக உள்ளது; என்ற தரவுகளின் அடிப்படையில், அருந்ததியர் மக்களின் கோரிக்கையில் உள்ள நியாயத்தை முன்வைத்து, 2007-ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சிறப்பு உள் ஒதுக்கீட்டிற்கான போராட்டக் களத்தில் இறங்கியது.
கோரிக்கை மாநாடு - பேரணி
2007-ஆம் ஆண்டு விருதுநகர் துவங்கி திண்டுக்கல், ஈரோடு, கோயம்புத்தூர், திருநெல்வேலி என பல மாவட்டங்களில் கோரிக்கை மாநாடு களை நடத்தியது. அருந்ததியர் அமைப்புக் களையும் இணைத்துக் கொண்டு நடத்தப்பட்ட இந்த மாநாடுகளின் முத்தாய்ப்பு நிகழ்வாக 2007-ஆம் ஆண்டு ஜூன் 12 அன்று சென்னையில் 20 ஆயிரம் பேர் பங்கேற்ற மாபெரும் பேரணியும் நடைபெற்றது. கலைஞரின் கனிவு இந்த நீண்ட நெடிய போராட்டங்களின் பின்னணியில், அருந்ததியர் கோரிக்கைகளை கனிவுடன் பரி சீலித்த அன்றைய முதல்வர் கலைஞர், நீதிபதி ஜனார்த்தனன் குழு பரிந்துரை அடிப்படையில் அருந்ததியருக்கு 3சதவீத இடஒதுக்கீடு சட்டத்தை கொண்டு வந்தார்.