பீகார் முதலமைச்சராக 10ஆவது முறையாக நிதிஷ்குமார் பதவியேற்றுக் கொண்டார்.
பீகார் சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) 202 தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில், பீகார் மாநில முதலமைச்சராக மீண்டும் ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியூ) தலைவர் நிதிஷ் குமார் பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், பாட்னா காந்தி மைதானத்தில் பதவியேற்பு விழா இன்று நடைபெற்றது. இதில், பீகார் முதலமைச்சராக 10ஆவது முறையாக நிதிஷ்குமார் பதவியேற்றுக் கொண்டார். அம்மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
துணை முதலமைச்சர்களாக சாம்ராட் சவுத்ரியும், விஜய் குமார் சின்ஹாவும் பதவியேற்றுக் கொண்டனர்.
பீகார் மாநில அமைச்சர்களாக விஜய் குமார் சவுத்ரி, பிஜேந்திர பிரசாத் யாதவ், ஷ்ரவன் குமார், மங்கள் பாண்டே, டாக்டர். திலீப் ஜெய்ஸ்வால், அசோக் சவுத்ரி, லெஷி சிங், மதன் சாஹ்னி, நிதின் நபி, ராம் கிரிபால் யாதவ், சந்தோஷ் குமார் சுமன், சுனில் குமார் ஆகியோர் பதவியேற்றனர்.
இவ்விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜே.பி. நட்டா, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
