பாட்னா:
பாஜக கூட்டணி ஆட்சி நடக்கும் பீகாரில்,கொரோனா தொற்று நாளுக்கு நாள் உச் சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதுவரை அங்கு 6 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாளொன்றுக்கு 13 ஆயிரத் திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
பாஜக ஆளும் ஏனைய மாநிலங்களைப் போலவே இங்கும் ஆம்புலன்ஸ், ஆக்சிஜன்மற்றும் தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு கடுமையாக உள்ளது.இந்நிலையில்தான், பீகார் மாநில பாஜகஎம்.பி. ராஜீவ் பிரதாப் ரூடி, தனக்குச் சொந்தமான இடத்தில் 30 ஆம்புலன்சுகளை மறைத்து வைத்து, மக்களின் துயரத்தை வேடிக்கை பார்த்து வந்த கொடுமையை, ஜன் அதிகார் கட்சித் தலைவரான பப்புயாதவ் என்ற ராஜேஷ் ரஞ்சன் வெளிச்சத் திற்கு கொண்டு வந்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ள அவர், ‘கடந்த 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து வாங்கப்பட்ட இந்த ஆம்புலன்சுகள் அம்னவுர் பகுதியில் நிறுத்தப் பட்டுள்ளதாக எனக்கு தகவல்கள் கிடைத்தன. இதையடுத்து உடனடியாக நாங்கள் அங்கு சோதனை இடச் சென்றோம்.ஆனால், விஷயம் அறிந்து அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்சுகள் முன்னதாகவே இடம் மாற்றப்பட்டுள்ளன.நாங்கள் சென்றபோது அங்கு 30 ஆம்புலன்சுகள் மட்டுமே இருந்தன. இந்த ஆம்புலன்சுகள் நிறுத்தப்பட்டிருந்த இடம் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜீவ் பிரதாப் ரூடிக்கு சொந்தமான இடம் ஆகும். 30 ஆம்புலன்சுகளும் பேனர் துணிகளால் மறைக்கப்பட்டிருந்தன. நாங்கள் பாதுகாவலர்கள் முன்னிலையில் அந்த துணிகளை அகற்றியதில் உள்ளிருந்த ஒவ்வொரு ஆம்புலன்சுகளிலும் ரூடியின் பெயர் பொறிக்கப்பட்டிருந்தது’ என்று தெரிவித்துள்ளார்.
‘தற்போது மாநிலத்தில் ஆம்புலன்ஸ் தேவை அதிகமாக உள்ள போது இவை ஏன் மறைத்து வைக்கப்பட்டிருந்தன? அவை ஏன் தற்போது உபயோகப்படுத்தவில்லை? இவ்வாறு இங்கு ஆம்புலன்சுகள் மறைத்துவைக்கப்பட்டதை ரூடி மாவட்ட நிர்வாகத்துக்குத் தெரிவித்துள்ளாரா? அப்படிஎன்றால் மாவட்ட நிர்வாகம் ஏன் இவற்றைப்பயன்படுத்தவில்லை? மக்கள் வரிப்பணத் தில் வாங்கிய ஆம்புலன்சுகளை வீணாகவைக்கலாமா?’ என்றும் பப்பு யாதவ் சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளார்.இதனிடையே, ஓட்டுநர் இல்லாததாலேயே 30 ஆம்புலன்சுகளையும் ஒரே இடத்தில் நிறுத்தி வைத்திருந்ததாக பாஜக எம்.பி. ரூடி ‘விளக்கம்’ அளித்துள்ளார்.