பெங்களூரு, செப். 6 - கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூருவில், கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் மூன்று நாட்களாக, கொட்டி தீர்க்கும் கனமழை காரணமாக, ஒட்டுமொத்த பெங்களூரு நகரமும் வெள்ளத்தில் மிதக்கிறது. வெள்ளம் காரணமாக, போக்குவரத்து பெரும் சிக்கலாக மாறியுள்ளது. பேருந்துகள், ஆட்டோக்கள், டாக்ஸிக்களை இயக்க முடியவில்லை. மக்களால் நடந்தும் கூட செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. பெங்களூருவில் பல பகுதிகளில் இருக்கும் ஐ.டி. ஊழியர்கள் ரூ. 50 கட்டணம் கொடுத்து டிராக்டர்களில் அலுவலகம் சென்று வருகின்றனர். டிராக்டர் செல்ல முடியாத இடங்களில் சிறிய படகுகள் மூலம் மக்கள் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. நீரேற்று நிலையங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் வடியாததால், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பல தனியார் பள்ளிகள் விடுமுறை அறிவித்து சில நாட்களுக்கு ஆன்லைன் முறையில் பாடங்கள் நடத்தப்படும் என்று கூறியுள்ளன. தனியார்
அலுவலகங்கள் பலவும், தங்களின் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய பரிந்துரைத்துள்ளன. ஆனால், பல நிறுவனங்கள் அப்படி எந்த அறிவிப்பையும் செய்யவில்லை இதனால் பல ஐ.டி. ஊழியர்கள் வேறு வழியின்றி அலுவலகத்திற்கு டிராக்டர்களில் சென்று வரு கின்றனர். கனமழை மற்றும் வானிலை காரணமாக விமானங்கள் “செவ்வாயன்று சற்று தாமதமாக” புறப்படும் என்று கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் அறிவித்தது. கர்நாடகத்தில் கடந்த ஜூன் மாதம் தொடங்கி தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதில் ஆகஸ்ட் மாதத்தில் மழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக மாநிலத்தில் அணைகள், ஏரி, குளங்கள் உள்பட அனைத்து நீர் நிலைகளும் நிரம்பிப் ததும்பின. இந்நிலையில், ஞாயிற்றுக் கிழமை முதல் மீண்டும் மழை கொட்டத் துவங்கியது. இதில், திங்கட்கிழமை இரவு 3 மணி நேரத்தில் மட்டும் பெங்களூரில் 125 மி.மீ. அளவிற்கு பெய்த மழை, மக்களை மீண்டும் வெள்ளத்தில் மிதக்க வைத்துள்ளது.