திருப்பதி அருகே 50 அடி பள்ளத்தாக்கில் பேருந்து ஒன்று கவிழ்ந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் தர்மாவரத்தில் இருந்து சித்தூர் நகரி அருகே உள்ள கிராமத்திற்கு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக 52 பேர் நேற்றிரவு தனியார் பேருந்தில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது பக்ராபேட் மலைப்பாதை வழியாக திருப்பதிக்கு வந்து கொண்டிருந்தபோது பேருந்து கட்டுப்பாட்டை இழந்து 50 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் மற்றும் மீட்புக்குழுவினர் தீவிரமாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதில் காயமடைந்தவர்களை பள்ளத்தாக்கிலிருந்து கயிறுகள் மூலம் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக திருப்பதி ரூபா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில் நபி ரசூல் (பேருந்து ஓட்டுநர்), மல்லிசெட்டி வெங்கப்பா (60), மல்லிசெட்டி கணேஷ் (40), காந்தம்மா (40), மல்லிசெட்டி முரளி (45), யசெஸ்வினி (8), பேருந்து கிளீனர் விவரம் தெரியாத நிலையில் மொத்தம் 7 பேர் உயிரிழந்தனர். மேலும் 45 பேர் காயமடைந்துள்ளனர்.
அதனைதொடர்ந்து உயிரிழந்தவர்கள் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக திருப்பதி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.