13 வயது சிறுமியை 6 மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்ததாக இதுவரை 74 பேரை போலீசார் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆந்திர மாநில குண்டூரைச் சேர்ந்த ஒரு தம்பதியினரின் 13 வயது சிறுமி அங்குள்ள ஒரு அரசு பள்ளியில் படித்து வந்தார். இந்நிலையில், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அந்த சிறுமியின் தாயார் கொரோனா தொற்றால் உயிரிழந்தார். இதையடுத்து மருத்துவமனையில் தாயாருடன் இருந்த நாட்களில் சிறுமிக்கு சொர்ணகுமாரி என்ற மருத்துவமனை பெண் பணியாளர் பழக்கமாகி உள்ளார்.
பின்னர் சிறுமியின் தாயார் இறந்ததும் தந்தையிடம் சிறுமியை தான் தத்தெடுத்து கொள்வதாக கூறியுள்ளார். அந்த சிறுமியின் தந்தையும் தனது 13 வயது மகளை சொர்ணகுமாரியிடம் ஒப்படைத்திருக்கிறார். அதனைதொடர்ந்து அழைத்துச்சென்ற அந்த பெண் சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி இருக்கிறார்.
இந்தநிலையில், கடும் மன உளைச்சலுக்கு ஆளான சிறுமி அங்கிருந்து தப்பித்து, குண்டூருக்குச் சென்று தனது தந்தையிடம் தனக்கு நேர்ந்த கொடுமையை கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த தந்தை, குண்டூர் போலீசில் புகார் அளித்திருக்கிறார். புகாரின் பேரில் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சொர்ணகுமாரியை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து விசாரணை நடத்தியதில் அச்சிறுமியை இதுவரை 80 பேர் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்துள்ளது. இதில், 74 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். 6 பேர் தலைமறைவாக இருப்பதால் அவர்களை பிடிப்பதற்கு போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.