லக்னோ, டிச.14- கடைசி காலத்தைக் கழிக்க ஏற்ற இடம் காசி என மோடியின் காசி வருகை குறித்து சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கிண்டலடித்தார். அடுத்த ஆண்டு மார்ச் மாதம் உத்த ரப்பிரதேசம் உள்ளிட்ட ஏழு மாநிலங்க ளில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து இந்தியாவின் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரம் தொடங்கிவிட்டது. டிசம்பர் 13 காலை பிரதமர் மோடி தனது சொந்தத் தொகுதியான வாரணாசியில் காசி விஸ்வநாதர் ஆலயம் திறப்பு விழாவில் பங்கேற்றார். பின்னர் அவர் கங்கை ஆற்றில் குளித்தார். இதுகுறித்து உத்தரப்பிரதேசம் எட்டி யாலாவில் பிரச்சாரம் மேற்கொண்டு வந்த சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவிடம் பத்திரிகையா ளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு அவர் பதிலளிக்கையில், ‘பிரதமர் மோடி உங்களிடமும் என்னிடமும் பொய் கூறலாம், ஆனால் கடவுளிடம் கூற இயலாது’ ‘மோடி மற்றும் அவரது சக ஆதரவாளர்கள் காசியில் ஒரு மாதம் மட்டும் அல்ல, இரண்டு மூன்று மாதங்கள் கூட தங்கலாம். அவர்கள் தங்குவதற்கு ஏற்ற இடம் அது. இவர்கள் தங்களது ஆட்சியின் கடைசிக் காலத்தை வாரணாசியில் செலவழிக்கிறார்கள் என்றார். மேலும், உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி ஆட்சியில் இருந்தபோதுதான் காசி விஸ்வநாதர் ஆலய வழித்தட திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் உள்ளன எனக் கூறிய அகிலேஷ், “சமாஜ்வாதி அரசு மேற்கொண்ட வருணா நதியின் தூய்மைப் பணி ஏன் நிறுத்தப்பட்டது? மெட்ரோ ரயில் (ரயில்) என்ன ஆனது என்றும் கேள்வி எழுப்பினார்.