மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் போதுமான அளவில் மருத்துவர்கள், ஊழியர்கள் இல்லாத நிலை இருப்பதாக அம்மாநில மக்கள் தொடர் குற்றச்சாட்டை முன்வைத்தாலும், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அரசு கண்டுகொள்ளாமல் உள்ளது.
இதன்விளைவாக முர்ஷிதாபாத் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாகப் பிறந்த 9 குழந்தைகள் உட்பட 10 குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்த அதிர்ச்சி சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. இந்த விவகாரம் நாடுமுழுவதும் கடும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அரசு இதுவரை எவ்வித விளக்கம் அளிக்காமல், மேற்கொண்டு அடிப்படை வசதியை உறுதி செய்யாமல் பெயரளவில் விசாரணை மருத்துவக்குழுவை அமைத்துள்ளது.
மழுப்பும் அதிகாரி
10 குழந்தைகள் மரணம் தொடர்பாக முர்ஷிதாபாத் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தலைமை அதிகாரி கூறுகையில்,”இறந்த குழந்தைகள் ஜாங்கிபூர் மருத்துவமனையில் (துணை பிரிவு) பிறந்தது. அங்கு போதுமான வசதி இல்லாததால் முர்ஷிதாபாத் மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு வந்துள்ளனர். ஆனால் குழந்தைகள் இறப்பிற்கான காரணம் உறுதியாக தெரியவில்லை. எடைகுறைவு காரணமாக இறந்திருக்கலாம். விசாரணைக்கு பின்னரே காரணம் தெரியவரும்” என மழுப்பலாக கூறினார்.