போபால்:
மத்தியப் பிரதேச மாநிலம், குணா மாவட்டம், கரோட் கிராமத்தில் 50 வயதுடைய தலித் ஒருவர் இரு இளைஞர்களால் அடித்தே கொல்லப்பட்டார். இது தொடர்பாக இருவர் கைதுசெய்யப்பட்டிருப்பதாக காவல்துறையினர் கூறினர்.
கரோட் கிராமத்தில் நடைமேடையில் அமர்ந்திருந்த விவசாயத் தொழிலாளி லால்ஜி அகிர்வார் (வயது 50) என்பவரிடம் யாஷ் என்பவனும் ஆங்கேஷ் யாதவ் என்பவனும் சிகரெட் பற்றவைப்பதற்காக தீப்பெட்டி கேட்டிருக்கிறார்கள். லால்ஜி தன்னிடம் தீப்பெட்டி இல்லை என்று கூறியிருக்கிறார். இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வாக்குவாதத்தில், மேற்படி இருவரும் அவரை கம்பால் அடித்துள்ளனர்.காயமடைந்த லால்ஜி அகிர்வார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் வெள்ளிக்கிழமையன்று நடந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.இதனைத் தொடர்ந்து மேற்படி யாஷ் மற்றும் ஆங்கேஷ் யாதவ் மீது இந்தியத் தண்டனைச் சட்டத்தின் கீழ் உரிய பிரிவின் கீழும், தலித்/பழங்குடியினர் வன்கொடுமைத் தடைச் சட்டத்தின்கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். (ந.நி.)