ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்திற்கு (AFSPA) எதிராக 16 ஆண்டுகளாக உண்ணாவிரதப் போரட்டத்தில் ஈடுபட்ட மனித உரிமைச் செயற்பாட்டாளர் இரோம் ஷர்மிளா , நாகாலாந்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் கொல்லப்பட்டதிலிருந்து இச்சட்டம் நிச்சயமாக திருமபப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
பாதுகாப்புப் படைகளுக்கு எந்த இடத்திலும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், முன் வாரண்ட் இல்லாமல் யாரையும் கைது செய்யவும், அதிகாரம் அளிக்கும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் ஒரு அடக்குமுறை கட்டுப்பாடு சட்டம் மட்டுமல்ல, அடிப்படை மனித உரிமைகளை மொத்தமாக மீறும் சட்டம் என்று கூறியுள்ளார்.
வடகிழக்கு மாநிலங்களான அஸ்ஸாம், நாகாலாந்து, மணிப்பூர்(இம்பால் முனிசிபல் கவுன்சில் பகுதியைத் தவிர்த்து) மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தின் சில மாவட்டங்கள், அசாமின் எல்லையில் இச்சட்டம் அமலில் உள்ளது.
நாகாலாந்து சம்பவத்திலிருந்து இந்தச் சட்டம் எவ்வளவு கொடூரமானது என்றும் அதைத் திரும்பப் பெறுவது எவ்வளவு முக்கியம் என்பதையும் இந்த தாக்குதல் காட்டுகிறது என்று இரோம் ஷர்மிளா தெரிவித்துள்ளார்.
1958-இல் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டு வடகிழக்கு மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டது.இச்சட்டம் அமல்படுத்தப்பட்டபின் அது விரும்பிய நோக்கத்தை அடைந்ததா? இல்லை என்றால், அதை மக்கள் மீது திணிப்பதால் என்ன பயன்? ஒன்றிய, மாநில அரசுகள் ஒன்றாக அமர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் இது என்று மனித உரிமைச் செயற்பாட்டாளர் இரோம் ஷர்மிளா தெரிவித்துள்ளார்.