states

குக்கிகள் மட்டும் 114 பேர் படுகொலை!

சிபிஐ விசாரணை கேட்டு  10 எம்எல்ஏ-க்கள் கூட்டறிக்கை

‘இந்தியா’ கூட்டணி எம்.பி.க்கள்  தில்லியில் நாளை ஆர்ப்பாட்டம்!

மணிப்பூர் விவகாரத்தில் அம்மாநில முதல்வர் பைரேன் சிங்கை  பதவியிலிருந்து நீக்க வேண்டும்; குடியரசுத் தலைவர் ஆட்சி யை அமல்படுத்த வேண்டும் என்று மணிப்பூரில் போராட்டங்கள் நடை பெற்று வருகின்றன. பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, முதல்வர் பைரேன் சிங்கின் உருவபொம்மைகளை எரிக்கும் அளவிற்கு போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. இந்நிலையில், மணிப்பூர் விவகாரத்தில் நாடாளுமன்ற இரு அவைகளிலும் பிரதமர் மோடி விளக்கம் அளிக்கக் கோரி ‘இந்தியா’ கூட்டணி எம்.பி.க்கள் திங்க ளன்று நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

இம்பால், ஜூலை 22- மணிப்பூர் வன்முறையில் இது வரை பலியானவர்களில் 114 பேர்  குக்கி - ஜோ சமூகத்தினர் என்றும்,  ஊடகச் செய்திகளில் வெளியான 2 பெண்கள் தவிர, நர்சிங் மாணவி  உட்பட மேலும் 2 பெண்கள் பாலியல்  வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு படு கொலை செய்யப்பட்டு இருப்பதாக வும் குக்கி பிரிவைச் சேர்ந்த 10 எம்எல்ஏக்கள்  கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் சிபிஐ விசா ரணைக்கு உத்தரவிட வேண்டும் என்  றும் அவர்கள் ஒன்றிய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மணிப்பூர் மக்கள் தொகையில் 40 சதவிகிதமாக இருக்கும் குக்கி, ஜோ, நாகா பழங்குடி மக்கள் அங் குள்ள மலைப் பிரதேசங்களில் வாழ்ந்து  வருகின்றனர். இந்த மலைப்பகுதி மற்றும் அதையொட்டியுள்ள பகுதி களில் இவர்களை தவிர வேறு யாரும் நிலங்களை வாங்கவோ விற்கவோ முடியாது. 

இந்நிலையில், குக்கி உள்ளிட்ட  பழங்குடி மக்களை மலைப் பிர தேசங்களிலிருந்து வெளியேற்றி விட்டு, அங்குள்ள மலைகளை பன் னாட்டு- உள்நாட்டுக் கார்ப்பரேட் முத லாளிகளுக்கு பட்டா போடுவது, ஆளும் பாஜக ஆட்சியாளர்களின் நீண்டகாலத் திட்டம். இதற்காக, மணிப்பூரில் பெரும்பான்மையாக (53 சதவிகிதம்) இருக்கும் மெய்டெய்  மக்களையும் பழங்குடி பட்டியலில்  சேர்ப்பதாகவும், இதன்மூலம் சம வெளிப் பகுதியில் வசிக்கும் மெய்  டெய் மக்களும், மலைப்பகுதி நிலங் களை பெற முடியும் என்று பாஜக ஆட்சியாளர்கள் ஆசை காட்டினர். மியான்மர் வரை தங்களின் வேரி னைக் கொண்டிருக்கும் குக்கி களுக்கு மணிப்பூரில் என்ன உரிமை? மேலும் அவர்களில் பெரும்பாலா னோர் கிறிஸ்தவர்கள் என்று பிரிவி னையையும் தூண்டிவிட்டனர்.  இந்தப் பின்னணியிலேயே, தற்போது மெய்டெய் மக்களுக்கும், குக்கி-ஜோமி உள்ளிட்ட பழங்குடி யினருக்கும், கடந்த மே 3 அன்று  துவங்கிய வன்முறை, 80 நாட்களைத்  தாண்டிவிட்டது. மணிப்பூர் மாநிலமே  மயானக் காடாகி இருக்கிறது. அர சின் அதிகாரப்பூர்வ கணக்குப்படியே 160-க்கும் அதிகமானோர் கொல்லப் பட்டுள்ளனர். பல பெண்கள் பாலி யல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப் பட்டுள்ளனர். 5,036 தீவைப்பு வழக்குகள் பதிவாகியுள்ளன, வன்முறைகள் தொடர்பாக 5,889 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 144 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 350 தேவாலயங்களும், சுமார் 20  கோயில்களும் பிற வழிபாட்டுத்தலங்  களும் அடித்து நொறுக்கப்பட்டுள் ளன. பாதுகாப்புப் பணியில் ராணு வத்தினர் உட்பட 36 ஆயிரம் பேர்  நிறுத்தப்பட்டும் அமைதி திரும்ப வில்லை. 300-க்கும் மேற்பட்ட முகாம்  களில் 60 ஆயிரத்திற்கும் அதிகமான  மக்கள் அகதிகளாக தங்கியுள்ள னர். ஆளும் மணிப்பூர் பாஜக அரசோ  - பிரதமர் நரேந்திர மோடியோ, வன் முறையைக் கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக 80 நாட்களாக இணையத் தொடர்பைத் துண்டித்து, நடக்கும் சம்பவங்களை மறைத்து வருகின்ற னர்.

இந்த மூடிமறைக்கும் முயற்சி யையும் தாண்டி, கடந்த ஜூலை 19  அன்று டுவிட்டரில் வெளியான வீடியோவில், ஆயிரக்கணக்கான மெய்டெய் இளைஞர்கள், 2 குக்கி  பெண்களை நிர்வாணமாக இழுத்துச் சென்று கும்பல் வல்லுறவுக்கு உள் ளாக்கிய கொடுமை உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இவர்  களில் ஒருவர், கார்க்கிலில் இந்தியா விற்காக போரிட்ட முன்னாள் ராணுவ வீரரின் மனைவி என்பது அதிர்ச்சியை அதி கப்படுத்தியது. 40 வயதான அந்தப் பெண்,  4 குழந்தைகளுக்கு தாயான தன்னை விட்டு விடுமாறு கெஞ்சியும் அந்த கொடூரர்கள் விட வில்லை. 20 வயது இளம்பெண்ணையும் அவர்கள் வல்லுறவுக்கு உள்ளாக்கினர். முன்னதாக காப்பாற்ற வந்த இளம்பெண் ணின் 56 வயது தந்தையையும் 19 வயது சகோ தரனையும் அந்தக் கும்பல் அடித்தே கொன்  றது. இந்த கொடூரமான சம்பவம் நாடு தழு விய அளவில் கண்டனத்தை ஏற்படுத்திய பிறகே, 2 மாதங்களுக்குப் பிறகு, ஹெரோ தாஸ் (32) உள்ளிட்ட 5 பேர்களை மணிப்பூர்  பாஜக அரசு கைது செய்தது. இந்த அதிர்ச்சி நீங்குவதற்கு உள்ளா கவே, பிஷ்ணுபூர் மாவட்டத்தில் டேவிட் தீக்  என்ற குக்கி வகுப்பைச் சேர்ந்த இளைஞர்,  துண்டு துண்டாக வெட்டப்பட்டு, அவரது  தலை மூங்கில் குச்சிகளால் ஆன வேலி யில் செருகப்பட்டிருந்த வீடியோ வெள்ளி யன்று அடுத்த பதைபதைப்பை ஏற்படுத்தி யது.

இது ஜூலை 2-ஆம் தேதி நடந்த சம்பவம் எனக் கூறப்படும் நிலையில், கும்பி தொகுதி  பாஜக எம்எல்ஏ சாந்தி குமார் என்ற சனிசம்  பிரேம்சந்திர சிங்கின் பாதுகாவலரான ரொமேஷ் மங்காங் என்பவர்தான் இந்த படுகொலையை அரங்கேற்றியதும் வெளிச் சத்திற்கு வந்தது. இதற்கான புகைப்பட ஆதா ரங்களும் வெளியாகியுள்ளன. இந்நிலையில் தங்கள் மக்கள் சந்தித்த இழப்புகள் குறித்து குக்கி பழங்குடி சமூ கத்தை சேர்ந்த 10 எம்எல்ஏக்கள் கூட்டாக அறிக்கை விடுத்துள்ளனர். அதில், “கடந்த மூன்று மாதங்களில் நடந்த வன்முறையில் எங்கள் சமூகத்தைச் சேர்ந்த 114 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அதேபோல வீடியோவில் இருந்த பெண்களை தவிர்த்து  மேலும் இரண்டு பெண்கள் வன்முறையா ளர்களால் கடத்தப்பட்டு பாலியல் வல்லுற வுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப் பட்டுள்ளனர். இந்த சம்பவம் மே 4 அன்று நடந்துள்ளது. எனவே இந்த சம்பவம் குறித்த  விரிவான விசாரணை நடத்த சிபிஐ வசம் இவ்வழக்கை ஒப்படைக்க வேண்டும்” என்று அறிக்கையில் வலியுறுத்தியுள்ளனர். கூட்டறிக்கை வெளியிட்டுள்ள 10 எம்எல்ஏ-க்களில் 7 பேர் பாஜகவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.