பெங்களூரு, செப். 10 - பல்கலைக்கழக வளாகத்தில் பிள்ளை யார் கோவில் கட்டும் பாஜக அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பெங்களூரு பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். பாஜக ஆட்சி நடக்கும் கர்நாடகத்தில், பெங்களூரு மாநகராட்சியானது, பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து, சட்டவிரோதமாக இந்த பிள்ளையார் கோவிலை கட்டுவது தங்களின் படிப்புச்சூழலில் பாதிப்பை ஏற்படுத்தும் என மாணவர்கள் குற்றச்சாட்டி யுள்ளனர். அதிகாரிகள் சட்ட விரோதமாக இந்த கோவிலைக் கட்டி வருவதாகவும், பல்கலைக்கழக, வளாகத்தில் இந்த கோவில் தேவையற்றது எனவும் அவர்கள் கூறியுள்ளனர். மாணவர்களின் எதிர்ப்பை தொடர்ந்து கோவிலின் கட்டுமானத்தை தடுத்து நிறுத்தி யிருக்கும் பல்கலைக்கழக நிர்வாகம், இது போன்ற விவகாரங்களில் மாணவர்களி டம் கலந்தாலோசித்த பிறகே முடிவெடுக்கப் படும் என உறுதியளித்துள்ளது. எனினும், பல்கலைக்கழகத்தில் போலீஸ் பாதுகாப்புடன் பிள்ளையார் கோவில் கட்டும் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்று கூறப்பட்டுள்ள நிலையில், அதிகாரிகளுக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்தவும் மாணவர்கள் முடிவெடுத்துள்ளனர்.இந்த விவகாரம் குறித்து கல்புர்கி எம்எல்ஏ பிரியங்க் கார்கே பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், “தங்களுக்கு வசதியான உள்கட்டமைப்பும், தரமான நூலகமும் வேண்டும் என பெங்களூரு பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றிணைந்து கூறுகின்றனர். மேலும், மதம் சார்ந்த நிகழ்வுகள் தங்களின் பல்கலைக்கழக்கத்தில் தேவையில்லை என்றும் கூறுகின்றனர். ஆனால், யாரிடமும் ஆலோசிக்காமலும், வழிமுறைகளை முறையாக பின்பற்றா மலும் அரசு தன்னிச்சையாக இந்த முடிவை எடுத்துள்ளது” என்று பிரியங்க் கார்கே விமர்சித்துள்ளார்.