தில்லி மாநில சட்டமன்றத்தில் வியாழன் அன்று மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களை நிராகரித்து, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானத்தில், மத்திய அரசு நிறைவேற்றிய வேளாண் சட்டங்களை ரத்து செய்வதாகக் கூறப்பட்டிருக்கிறது. இதனை முன்மொழிந்து சட்டமன்றத்தில் உரையாற்றிய முதல்வர் கேஜரிவால், மத்திய பாஜக அரசை நோக்கி, “இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷாரைவிட மோசமாக மாறாதீர்கள்” என்று கேட் வேண்டுகோள் விடுத்தார். வேளாண் சட்டங்கள் பாஜக-விற்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு “நிதி” சேகரிப்பதற்காகக் கொண்டுவரப்பட்டது என்றும் குற்றம் சாட்டினார்.
“விவசாயிகளின் போராட்டத்தில் இதுவரை 20க்கும் மேற்பட்ட விவசாயிகள் தியாகிகளாகி இருக்கிறார்கள். நாட்டிலுள்ள விவசாயிகளின் குரல்களைக் கேட்பதற்கு இன்னும் எத்தனை உயிர்களைப் பலி கேட்பீர்கள்?” என்றும் அவர் அப்போது கேள்வி எழுப்பினார். “போராட்டம் நடைபெறும் இடத்தில் உள்ள ஒவ்வொரு விவசாயியும், ஒவ்வொரு பகத்சிங்காக மாறியிருக்கிறார்கள்” என்றும் அவர் தெரிவித்தார்.
பின்னர் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை நிராகரித்து, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.