states

img

தில்லி மாநகராட்சிகள் மருத்துவர்களின் ஊதியத்தை வழங்க - உயர்நீதிமன்றம் உத்தரவு

புதுதில்லியில் வடக்கு மற்றும் கிழக்கு தில்லி மாநகராட்சி கார்ப்பரேஷன்கள் தங்களின் கீழ் இயங்கும் ஒன்பது மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களின் அக்டோபர் மாத ஊதியத்தை இரு வார காலத்திற்கும் விடுவித்திட வேண்டும் என்று தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

இந்திய மருத்துவ சங்கம் தாக்கல் செய்திருந்த மனுவின்மீது நீதியரசர்கள் ஹிமா கோலி மற்றும் சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வாயம் இவ்வாறு உத்தரவிட்டிருக்கிறது.

கஸ்தூர்பா காந்தி மருத்துவமனை மருத்துவர்கள், தங்களுக்கு இந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து வழங்கப்பட வேண்டிய ஊதியத்தை வழங்காவிட்டால் ராஜினாமா செய்திட இருப்பதாக அச்சுறுத்தியிருந்த செய்தி நாளேடுகளில் வெளியாகியிருந்தன. அதன் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் மீது, உயர்நீதிமன்றம் நடவடிக்கை எடுத்தது.  

வடக்கு மாநகராட்சி கார்ப்பரேஷன்கீழ் இயங்கும் ஆறு மருத்துவமனைகளில் ரெசிடெண்ட் டாக்டர்களுக்கு உதவிப்பணம் (ஸ்டைபெண்ட்) மற்றும் ஊதியம் வழங்கப்படாதது குறித்து ஏற்கனவே மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்திய மருத்துவ சங்கத்தின் சார்பில் தற்போது கிழக்கு மாநகராட்சி கார்ப்பரேஷன் கீழ் இயங்கும் ஸ்வாமி தயானந்த் மருத்துவமனை, சந்திவாலா மகப்பேறு மருத்துவமனையிலும் சாதரா பாலி கிளினிக்கிலும் மருத்துவர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை என்று கூறியது.

இதனை அடுத்து உயர்நீதிமன்றம் இவ்வாறு கட்டளை பிறப்பித்திருக்கிறது.

(ந.நி.)