வேளாண் சட்டங்கள் தொடர்பாக அரசின் முன்மொழிவு ஏற்கமுடியாது என்றும், போராட்டங்கள் நாடு முழுதும் தீவிரமாகத் தொடரும் என்றும் விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.
செவ்வாய்க்கிழமை (நவம்பர்1) அன்று அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஹன்னன் முல்லா உட்பட 35 விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் அரசாங்கத்தின் சார்பில் அமைச்சரவைத் தூதுக்குழுவில் இடம் பெற்றிருந்த வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமார், வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் இணை அமைச்சர் சோம் பார்கஷ் முதலானவர்களைச் சந்தித்து, வேளாண் சட்டங்கள் மூன்றையும், மின்சார சட்டமுன்வடிவையும் விலக்கிக்கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தினார்கள். இந்த 32 சங்கத் தலைவர்களில் பஞ்சாப் சங்கங்களைச் சேர்ந்தவர்களும், ஹர்யானாவிலிருந்து ஒருவரும், அகில இந்திய விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் ஹன்னன் முல்லாவும், ஆர்கேஎம்எஸ் சார்பில் ஒருவரும் பங்கேற்றார்கள்.
பேச்சுவார்த்தை முடிவு எதுவும் எடுக்கப்படாது முடிவடைந்தது. இது டிசம்பர் 3 (வியாழன்) அன்று மீண்டும் தொடர்கிறது.
அரசாங்கத்தின் தரப்பில் ஓர் ஐந்து உறுப்பினர் கொண்ட குழுவை அமைப்பதாகவும் அது விவசாயிகள் சங்கம் தெரிவித்திடும் ஆட்சேபணைகளை ஆய்வு செய்து அறிக்கை அளித்திடும் என்றும் அளித்திட்ட முன்மொழிவை விவசாய சங்கத் தலைவர்கள் நிராகரித்தனர். இத்தகைய குழுக்களால் எவ்வித விளைவும் ஏற்படாது என்பதே கடந்த கால அனுபவங்கள் என்று சங்கத் தலைவர்கள் அரசாங்கத்திடம் தெரிவித்துவிட்டனர்.
அனைத்து சட்டங்கள் குறித்தும் ஆட்சேபணைகளை அளித்திடுமாறு அரசாங்கம் சங்கத் தலைவர்களைக் கேட்டுக் கொண்டிருக்கிறது. அமைச்சர் கூறும்போது, வேளாண் சட்டங்களில் குறைபாடுகள் இருக்கலாம் என்றும், அவற்றைப் பரிசீலித்திட அரசாங்கம் தயாராய் இருப்பதாகவும் கூறினார்.
பின்னர் அகில இந்திய விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு, தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும்வரை விவசாயிகள் போராட்டங்கள் தீவிரப்படுத்தப்படும் என்று அறிவித்தது.
(ந.நி.)