states

img

6 மாதங்களுக்கான உணவுப்பொருட்களுடன் தில்லி போராட்டத்திற்கு செல்லும் விவசாயிகள்

விவசாயிகளை வஞ்சிக்கும் மூன்று வேளாண் திருத்த சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி தில்லி ஆர்ப்பாட்டத்திற்கு  விவசாயிகள் 6 மாதங்களுக்கு தேவையான உணவுப்பொருட்களுடன் சென்றுள்ளனர். 

விவசாயிகளை பழிவாங்கும் மோடி அரசின் புதிய வேளாண் திருத்த சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி தலைநகர் தில்லியில்  ஆர்ப்பாட்டம் நடத்த விவசாயிகள் கூட்டமைப்பு முடிவு செய்தது. அதன்படி நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் தில்லி நோக்கி பேரணியாக செல்கின்றனர். பஞ்சாப்பில் இருந்து ஏராளமான விவசாயிகள் தில்லி நோக்கி செல்கின்றனர். நேற்று முதல் அரியானா எல்லையில் விவசாயிகள் தில்லி நோக்கி செல்வதை தடுக்க அம்மாநில அரசு கடும் அடக்கு முறையை கட்டவிழ்த்து வருகிறது. தில்லி செல்லும் சாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. 
இந்நிலையில் இன்று தில்லி காவல்துறை விவசாயிகள் போராட்டத்திற்கு அனுமதி அளிக்கவில்லை.

பொதுமக்களின் வாகனங்கள் மட்டும் சோதனைக்குப் பிறகு தில்லிக்குள் அனுமதிக்கப்படுகின்றன. தடையை மீறும் விவசாயிகள் மீது தடியடி நடத்தியும்.  கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் போலீசார் அடக்கு முறைகளை கையாண்டு வருகின்றனர்.  

எனினும், விவசாயிகள் பின்வாங்காமல் எல்லையில் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக பல நாட்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள், சமையல் பாத்திரங்களை டிராக்டர்களில் ஏற்றிக்கொண்டு வந்துள்ளனர். சாலையோரம் சமையல் செய்து சாப்பிடுகின்றனர். குடும்பத்தினருடன் டெல்லியை நோக்கி பயணத்தை தொடங்கிய சில விவசாயிகள், 6 மாதத்திற்கு தேவையான உணவுப் பொருட்களை தங்களின் டிராக்டர்களின் ஏற்றி வந்திருப்பதாக கூறுகின்றனர். என்ன நடந்தாலும் நாங்கள் டெல்லி செல்வோம் என்றும் அவர்கள் கூறுகின்றனர். அமிர்தசரசில் இருந்து கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டி உறுப்பினர்கள் ஒரு மாதத்திற்கு தேவையான உணவுப்பொருட்கள், சமையல் பாத்திரங்களுடன் இன்று புறப்பட்டுள்ளனர்.  விவசாயிகளின் இந்த நடவடிக்கையை கண்ட அதிகாரிகள் விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்குவது குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
 

;