வெள்ளி, பிப்ரவரி 26, 2021

states

img

விவசாயிகள் போராட்டம்: அடிக்கடி எழுப்பப்படுகின்ற கேள்விகளுக்கு வேளாண் நிபுணர் தேவிந்தர் சர்மா அளிக்கும் பதில்கள்

இந்திய மக்களிடம் மூன்று புதிய வேளாண் சட்டங்களின் நன்மைகளை கொண்டு செல்கின்ற வகையிலே மத்திய அரசும், ஊடகங்களுக்குள் இருக்கின்ற அதன் ஆதரவாளர்களும் கூடுதலாகப் பணியாற்றி வந்தாலும், டெல்லி எல்லைகளில் போராட்டம் செய்து வருகின்ற விவசாயிகள் அந்த மூன்று சட்டங்களும் ரத்து செய்யப்படும் வரை தாங்கள் பின்வாங்கப் போவதில்லை என்பதைத் தெளிவுபடுத்தி இருக்கின்றனர்.  

தவறான தகவல்கள், உண்மைகளுக்கு மத்தியில் சிக்கியுள்ள சராசரி நகர்ப்புற இந்தியர்கள் இப்போது ஐம்பது நாட்களையும் தாண்டியுள்ள விவசாயிகள் போராட்டத்தின் சிறப்புகள், குறைபாடுகள் குறித்து சற்றே குழப்பத்திலேயே இருந்து வருகின்றனர். தங்கள் வழியிலே செல்ல வேண்டும் என்பதில் தீர்மானத்துடன் இருந்து டெல்லி எல்லைகளிலே முகாமிட்டுள்ள விவசாயிகள் எதற்காகப் போராடி வருகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்வதை, தங்களுடைய கிராமப்புற சகாக்களைக் காட்டிலும் மிகவும் மாறுபட்ட உலகத்திலே வாழ்ந்து வருகின்ற பெருநகரங்களில் வசிப்பவர்கள் கடினமாகவே உணர்கிறார்கள் என்பது குறித்து கடந்த ஏழு வாரங்களில் அதிக அளவிலே தெளிவு ஏற்பட்டிருக்கிறது. போராட்டங்களின் ‘பின்னணிக் கதை’ அவர்களுக்குத் தெரியாததே அதற்கான  முக்கிய காரணமாக இருக்கிறது.     

அந்த குழப்பங்கள் சிலவற்றிலிருந்து அவர்கள் விடுபடுவதற்காக விவசாயிகளின் போராட்டத்தின் மீது மிகப் பரவலாக வெளிச்சம் போட்டுக் காட்டும் வகையில் நான் கடந்த இருபதாண்டுகளுக்கும் மேலாக இந்திய விவசாயிகளின் வருமான சமத்துவம் குறித்து பிரச்சாரம் செய்து வருகின்ற பத்திரிகையாளர், எழுத்தாளர், உணவு மற்றும் வர்த்தகக் கொள்கை நிபுணரான தேவிந்தர் சர்மாவுடன் பேசினேன். விவசாயிகளின் போராட்டங்கள் விவாதத்திற்கு வரும் போதெல்லாம் எழுப்பப்படுகின்ற முக்கியமான ஐந்து கேள்விகளுக்கான பதில்களை அவரிடம் கேட்டுப் பெற்றேன்.   

விவசாயிகள் ஏன் மத்திய அரசிடம் அதிருப்தி அடைந்திருக்கிறார்கள்?  

அந்த மூன்று புதிய வேளாண் சட்டங்கள் விவசாய சமூகத்தைக் கிளர்ந்தெழுந்த வைத்ததால்தான் விவசாயிகள் புதுதில்லி எல்லையிலே கூடியிருக்கின்றனர் என்றே பலரும் நினைக்கிறார்கள். நான் பல்லாண்டுகளாக விவசாயிகளிடம் அதிகரித்து வந்த கோபம் இறுதியாக இப்போது வடிகாலைக் கண்டடைந்திருக்கிறது என்றே அதைக் காண்கிறேன். கடந்த முப்பது அல்லது நாற்பது ஆண்டுகளில் மிகப்பெரிய அளவில் அநீதி, சமத்துவமின்மையை எதிர்கொண்டு வந்திருக்கும் விவசாயம் எவ்வாறு தன்னுடைய உரிமைகளை இழந்திருக்கிறது என்பதை மூன்று ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன.  

கடந்த 1980களின் நடுப்பகுதியிலிருந்து 2000களின் நடுப்பகுதி வரையிலான இருபது ஆண்டுகளாக விவசாயத்தின் உற்பத்தி விலை அல்லது பண்ணை விலை உலகம் முழுவதும் மாற்றம் எதுவுமின்றி நிலையாக இருந்து வந்திருப்பதை ஐக்கிய நாடுகளின் வர்த்தகம், மேம்பாடு தொடர்பான மாநாடு (UNCTAD) நடத்திய ஆய்வு நமக்குச் சுட்டிக் காட்டுகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், 1980களில் இருந்த அளவிற்கே 2000களிலும் விவசாயிகளின் வருமானம் (பணவீக்கத்தைச் சரிசெய்த பிறகு) இருந்திருக்கிறது. பணக்கார நாடுகள் விவசாய சமூகங்களுக்கு நேரடி வருமான ஆதரவையும், வேறு பல சலுகைகளையும் வழங்கியதன் மூலம் இந்தப் பிரச்சனையைத் தீர்த்து வைத்தன. அவ்வாறு வளரும் நாடுகளால் செய்ய முடியவில்லை என்பதால் அந்த நாடுகளில் உள்ள விவசாயிகள் அதன் விளைவுகளைத் தொடர்ந்து மௌனமாக அனுபவித்து வந்திருக்கிறார்கள்.