states

img

வெற்றியோடு திரும்பிவாருங்கள் - நெகிழ்ச்சியுடன் விவசாய குடும்ப பெண்கள்

வெற்றியோடு திரும்பி வாருங்கள் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின்  குடும்ப பெண்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். 

மோடி அரசு கொண்டுவந்துள்ள 3  புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி பஞ்சாப், அரியானா, உத்திரபிரதேசம் உள்ளிட்ட 6 மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் கடந்த 26-ந் தேதி முதல் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். புராரி மைதானத்தில் ஒரு பிரிவினரும், மீதமுள்ளவர்கள் டெல்லி எல்லைகளிலும் திரண்டுள்ளனர் டெல்லியின் அனைத்து சாலைகளிலும் விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  திக்ரி, சிங்கு, காஜிப்பூர் போன்ற எல்லைகளை பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் தலைநகருக்கும் அண்டை மாநிலங்களுக்கும் இடையிலான தொடர்ப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.  பாஜக ஆளும் அரியானா, உத்திரபிரதேசம் போன்ற மாநிலங்களுக்கு செல்லும் பிரதான சாலைகள் மூடப்பட்டு உள்ளன.  நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரை உடனடியாக கூட்டுமாறு மத்திய அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் கடந்த 1-ந் தேதி விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் மத்திய அரசு சார்பில் பங்கேற்ற வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், ரயில்வே  அமைச்சர் பியூஷ் கோயல், வர்த்தக இணை அமைச்சர் சோம் பர்காஷ் ஆகியோர் வேளாண் சட்டங்களில் உள்ள பிரச்சினைகளை ஆராய குழு அமைக்க பரிந்துரைத்தனர். ஆனால் இதை விவசாயிகள் ஏற்க மறுத்தனர். புதிய வேளாண் சட்டங்களை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்தினர். 

மத்திய அரசு நடத்திய 4 கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்த நிலையில் இன்று 5 கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன்பாக பிரதமர் இல்லத்தில் உள்துறை அமைச்சர்  அமித்ஷா,  ராஜ்நாத்சிங், நரேந்திரசிங் தோமர், பியூஸ் கோயல் உள்ளிட்டோர்  ஆலோசனையில் ஈடுபட்டனர். 
இந்நிலையில் பேச்சு வார்த்தை தோல்வியடையும் பட்சத்தில் வரும் 8ம் தேதி நாடுதழுவிய வேலை நிறுத்தத்திற்கு விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளனர். 
இந்நிலையில் லட்சக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் பெண்கள் விவசாய வேலைகளை கையில் எடுத்துள்ளனர். மேலும் தற்போது பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் கல்லூரி பெண்களும் வயல்வெளிகளில் வேலை செய்து வருகின்றனர். 
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பெண்கள் எங்களது தந்தை சகோதரர்கள் தில்லியில் போராட்டத்திற்கு சென்றுள்ளனர். நாங்கள் வயல் வெளியில் உள்ள வேலைகளை செய்து வருகிறோம். அவர்கள் எப்போது வேண்டுமானாலும் வரட்டும். அதுகுறித்து எங்களுக்கு கவலை இல்லை. ஆனால் வெற்றியோடுதான் திரும்பி வர வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். 
 

;