states

img

விவசாயிகள் தில்லிக்கு வருவதை அனுமதித்திடுக - விவசாய ஒருங்கிணைப்பு குழு பிரதமருக்கு கடிதம்

அனைத்து விவசாயிகளும் தில்லிக்கு வருவதற்கு தடையேதும் ஏற்படுத்தாது, அனுமதி அளித்திட வேண்டும் என்றும், வேளாண் சட்டங்கள், மின்சார சட்டம் ரத்து செய்யப்பட வேண்டும் என்றும் அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பாக, பிரதமருக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இந்தக் கடிதத்தில் அவர்கள் கூறியிருப்பதாவது:

நாட்டிலுள்ள அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் பஞ்சாப், ஹர்யானா, உத்தரப்பிரதேசம், உத்தர்காண்ட், மத்தியப்பிரதேசம் மற்றும் பல மாநிலங்களிலிருந்து, தில்லியை நோக்கி, பல்வேறு விவசாய சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, பேரணிக்காக, அணி அணியாக வந்துகொண்டிருப்பதைத் தாங்கள் அறிவீர்கள். இவ்வாறு வரக்கூடிய விவசாயிகள் உத்தரப்பிரதேசம் மற்றும் ஹர்யானா மாநில அரசாங்கங்களால் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு தடைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இவ்வாறு இந்த அரசாங்கங்கள் தடைகளை ஏற்படுத்தியிருப்பதற்கு மத்திய அரசாங்கத்தின் உத்தரவே காரணம் என்று தெரிகிறது. விவசாயிகள் எந்தவிதத்திலும் தில்லிக்குள் வரவிடாது நிறுத்தப்பட வேண்டும் என்ற முறையில் இவ்வாறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.

சாலைகளில் வழக்கம்போல் வைக்கப்படும் காவல்துறையினரின் தடுப்பு அரண்கள் மட்டுமல்லாது, தறிபோது மணல்மூட்டைகள் ஏற்றப்பட்ட டிரக்குகள், ஒயர் கம்பிகளால் பின்னப்பட்ட வேலிகள், பெரிய அளவிலான கற்கள் முதலானவை சாலைகளின் குறுக்கே வைக்கப்பட்டிருக்கின்றன. இவையல்லாமல் பேரணிக்கு வரும் விவசாயிகள் மீது கண்ணீர்ப் புகைக் குண்டுகள், வாட்டர் கேனன்கள் மூலம் தண்ணீர் பீய்ச்சி அடித்தல் முதலான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப் பட்டிருக்கின்றன. இவை அனைத்தும் வட இந்தியா முழுவதும் கடுங்குளிர் நிலவும் இந்த சமயத்தில் விவசாயிகள் மீது ஏவப்பட்டிருக்கின்றன. எனினும் இவை அத்தனையையும் மீறி இதுவரை எவ்விதமான அசம்பாவித சம்பவமும் நிகழாமல் தில்லியை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறோம்.  ஆயிரக்கணக்கான விவசாயிகள் தில்லியின் எல்லையை வந்து அடைந்துவிட்டார்கள். இன்றையதினம் (வெள்ளிக்கிழமை) தில்லியை உறுதியுடன் சென்றடைவார்கள்.

விவசாய சங்கங்கள் சார்பில் மத்திய அரசாங்கத்திற்கு அளித்த மனுக்கள் எதையும் மத்திய அரசு சட்டை செய்யாததாலேயே இந்தப் பேரணியை விவசாய சங்கங்கள் நடத்திக் கொண்டிருக்கின்றன. விவசாய சங்கங்களின் கோரிக்கைகளை உதாசீனம் செய்துவிட்டு, விவசாயிகளுக்கு விரோதமான சட்டங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியிருக்கிறீர்கள்.

இந்தசமயத்தில் பேரணி வேண்டாம் பேச்சுவார்த்தைக்கு வாருங்கள் என்று அரசாங்கத்தின் தரப்பில் அழைப்பு விடுப்பது வீண் வேலை. அதற்குப் பதிலாக இப்போதாவது அரசாங்கம் விவசாயிகள் மீது தாக்குதல் தொடுப்பதை நிறுத்திவிட்டு, விவசாய சங்கங்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகளைப் பரிசீலனை செய்திட முன்வர வேண்டும்.

இந்த மோதல் போக்கை அரசாங்கம் பின்பற்றிக்கொண்டிருக்கும் பின்னணியில்தான் விவாய சங்கங்கள் அனைத்தும் இணைந்து இந்தக் கடிதத்தைத் தங்களுக்கு எழுதியிருக்கிறோம்.

விவசாயிகள் பேரணி அமைதியாக நடத்திட அனுமதிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். பேரணியில் வந்துள்ள விவசாயிகள் ராம் லீலா மைதானத்தில் கூடுவதற்கு அனுமதிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அங்கேதான் நாங்கள் அனைவரும் கூட முடியும், அரசாங்கத்துடனும் பேச்சு வார்த்தைகள் நடத்த முடியும்.

விவசாய சங்கங்களின் தலைவர்களை அழைத்து, தங்கள் அமைச்சரவையின் மூத்த அமைச்சர்களுடன் வேளாண் சட்டங்களை மின்சார சட்டத்தை ரத்து செய்வது தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யுங்கள்.

இவ்வாறு அவர்கள் அந்தக் கடிதத்தில் கோரியுள்ளார்கள்.

இந்தக் கடிதத்தில் அகில இந்திய விவசாயிகள் சங்கங்களின் சார்பில் அசோக் தாவ்லே, ஹன்னன் முல்லா, அடுல் குமார் அஞ்சான், பூபிந்தர் சாம்பர், மேதா பட்கர், யோகேந்திர யாரதவ், மற்றும் பலர் கையொப்பம் இட்டிருக்கிறார்கள்.

(ந.நி.)

 

;