தலைநகர் தில்லியில் விவசாய சங்க பிரதிநிதிகள் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மத்திய அரசு கார்ப்ரேட்டுகளுக்கு ஆதரவாக கொண்டுவந்துள்ள 3 புதிய விவசாய சட்டங்களையும், மின்சார திருத்த சட்டத்தையும் திரும்பப்பெற வலியுறுத்தி தலைநகர் தில்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் 19 வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக இன்று விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் இன்று ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து, விவசாய அமைப்பு ஒன்றின் தலைவரான குர்னம் சிங் சதுனி செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி விவசாய அமைப்புகளின் தலைவர்கள் தாங்கள் இருக்கும் இடங்களிலேயே காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரதம் இருப்பார்கள். அதே நேரம் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் தர்ணா போராட்டமும் நடைபெறும். அத்துடன் டெல்லியில் நடைபெறும் போராட்டம் வழக்கம்போல நடைபெறும்’ என்று தெரிவித்தார்.
அதன்படி டெல்லி எல்லைகளில் விவசாய அமைப்பு தலைவர்கள் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர்.
நாங்கள் அரசாங்கத்தை தட்டி எழுப்ப விரும்புகிறோம். எனவே, எங்கள் ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் 40 விவசாய சங்க தலைவர்கள் இன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை அனைத்து எல்லைப் பகுதிகளிலும் உண்ணாவிரத போராட்டத்தில் அமர்வார்கள். அவர்களில் 25 பேர் சிங்கு எல்லையிலும், 10 பேர் டிகிரி எல்லையிலும், 5 பேர் உத்திரபிரதேச எல்லையிலும் அமர்வார்கள் என ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் பொதுச்செயலாளர் ஹரிந்தர் சிங் லாகோவால் கூறி உள்ளார்.
இந்நிலையில் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள ட்விட்டர் பதிவில்
விவசாயிகளின் ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவாக ஒரு நாள் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொள்வேன்.. ஆம் ஆத்மி தொண்டர்களும் இதில் கலந்து கொள்ளுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடும் விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளையும் மத்திய உடனடியாக ஏற்றுக் கொள்ள வேண்டும். குறைந்தபட்ச ஆதரவு விலை உத்தரவாதம் அளிக்க ஒரு மசோதாவைக் கொண்டு வர வேண்டும் என கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.