states

பலக்னுமா எக்ஸ்பிரஸில் தீ: 3 பெட்டிகள் எரிந்து நாசம்!

ஹைதராபாத், ஜூலை 7 - தெலுங்கானாவில், பலக்னுமா எக்ஸ்பிரஸ் ரயிலில் வெள்ளிக்கிழமையன்று திடீர் தீ விபத்து ஏற்பட்டு, 3 பெட்டிகள் முழுமையாக எரிந்து நாசமாகின. முன்னதாக பயணிகள் ரயிலிலிருந்து கீழே  குதித்து தப்பியதால், நல்வாய்ப்பாக உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் இருந்து செகந்திராபாத்துக்கு பலக்னுமா எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பலக்னுமா எக்ஸ்பிரஸ், வெள்ளிக்கிழமையன்று காலை தெலுங்கானா மாநிலம் பொம்மைபள்ளி மற்றும் பகிடிபள்ளி இடையே வந்து கொண்டிருந்தது. அப்போது ரயிலில் உள்ள எஸ்-4, எஸ்-5, எஸ்-6 ஆகிய முன்பதிவு பெட்டிகளில் திடீரென தீப்பிடித்தது. இதனைப் பார்த்த பயணிகள் அலறினர். உடனடியாக ரயில்வே  அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, ரயில் நிறுத்தப்படவே, 3 பெட்டிகளிலும் இருந்த பயணிகள் வாசல் வழியாக இறங்கினர். சில பயணிகள், அவசரகால கதவு வழியாகவும் கீழே குதித்தனர்.  இதனிடையே, விரைந்து வந்த ரயில்வே அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் இந்த விபத்தில் 3 பெட்டிகள் முற்றிலுமாக தீயில் எரிந்து நாசமாகின. மின்கசிவு காரணமாகவே பலக்னுமா எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள் தீப்பிடித்து  எரிந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக தொடர்ந்து ரயில்வே அதிகாரிகள், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஜூன் 2-ஆம் தேதி, ஒடிசா மாநிலம் பாலசோரில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் உட்பட மூன்று ரயில்கள் ஒன்றுக்கொன்று மோதி விபத்திற்கு உள்ளானதில் 292 பேர்  பலியாகினர். அப்போது முதல், நாடு முழு வதும் பல்வேறு இடங்களில் ரயில் விபத்துக் கள் அன்றாட நிகழ்வாக தொடர்ந்து கொண்டி ருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.