states

img

நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தாமல் வேளாண் சட்டங்களை ரத்து செய்தது ஏன்?

புதுதில்லி, பிப்.5- வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான விவாதத்தை நாடாளுமன்றத்தில் நடத்தாததற்கான காரணங்கள் என்ன என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் பிகாஷ் ரஞ்சன் பட்டாச்சார்யா கேள்வி எழுப்பினார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடை பெற்று வருகிறது. மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத் தின் மீது பிகாஷ் ரஞ்சன் பட்டாச்சார்யா பேசியதாவது: குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிப்ப தற்காகக் கொண்டுவந்திருக்கும் தீர்மானத்தை முன்மொழிந்தவரும், அதனை வழிமொழிந்தவரும் உரையின் சாராம்சம் என்னவாக இருக்கும் என்று தங்கள் சிந்தனைகள் மூலம் தெளிவுபடுத்திவிட்டார் கள். எனவே இந்த உரையை என்னால் ஆதரிக்க முடியவில்லை. 1930களில் இதேபோன்றுதான் ஒரு குறிப்பிட்ட நபரின் பெயரைக் குறிப்பிட்டு, இவர்தான் உலகை ஆட்சி புரியும் ஹீரோ என்றும், இவர்தான் உலகை ஆட்சி புரிவார் என்றும் குறிப்பிட்டு, ஒவ் வொருவரும் இவரைப் போற்றிப் பாராட்ட வேண்டும் என்றும் கூறப்பட்டது. இங்கே இப்போது அதே போன்று சத்தம் கேட்கிறது. இது ஆபத்தை விளை விக்கும். இந்த ஆபத்து குடியரசுத் தலைவர் உரையில் காணப்படுகிறது.இது உண்மைகளைப் பேச வில்லை. மாறாக நம் நாட்டின் எதார்த்த உண்மைகள் என்பது, இதில் பூசிமெழுகப்பட்டுள்ள சித்திரத்திற்கு முற்றிலும் வித்தியாசமானதாகும்.

லாகப் போராடியது ஏன் என்பது குறித்து இந்த உரையில் எதுவும் இல்லை. அதன்பின் வேளாண் சட்டங்கள் திடீரென்று ரத்து செய்யப்பட்டன. நாடாளு மன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட அந்தச் சட்டங்கள், மனதின் குரல் நிகழ்ச்சியின் மூல மாக ரத்து செய்யப்பட்டன. அவை ஏன் ரத்து செய்யப்படுகின்றன என்று அமைச்சரவையில் விவாதிக்கப்படவில்லை,  நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதிக்கப்படவில்லை.  இதுதான் ஜனநாயக நடைமுறையா? இதற்கிடையில் என்ன நடந்தது என்று நாங்கள் தெரிந்துகொள்ள விரும்பு கிறோம். பிரதமரின் இருக்கையை அலங்கரிக்கும் குறிப்பிட்ட ஒரு நபர், தானடித்த மூப்பாக, நாடாளு மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்க ளை, நாடாளுமன்றத்தில் ரத்து செய்வதற்கான கார ணங்களை  விளக்காமல், அவை குறித்து நாடாளு மன்றத்தில் முறையாக விவாதம் நடத்தாமல்,  ஏன் ரத்து செய்தார்? இது, இந்திய ஜனநாயக அமைப்பு முறையின் அடிப்படைப் பிரச்சனையாகும். இது குறித்து நான் பின்னர் வருகிறேன். இப்போது கோவிட்-19 பிரச்சனையால் நாம் ஒவ்வொருவரும் மிகவும் கொந்தளிப்பான நிலைக்கு ஆளாகியிருக்கிறோம். கோவிட்-19ஆல் ஏற்பட்ட பிரச்சனைகள் அனைத்திற்கும் தடுப்பூசிகள் உண்மையில் பதிலளித்துவிட்டனவா? கோவிட் பிரச்சனை இப்போது நம் நாட்டை ஆண்டுகொண்டி ருக்கிறது. நாட்டின் வறுமை அதிகரித்திருக்கிறது. 33 கோடிக்கும் மேலான மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே சென்றுவிட்டார்கள். இவர்களை எப்படி மேலே கொண்டுவரப் போகிறோம்? இதுகுறித்தெல்லாம் எதுவும் இந்த உரையில் இல்லை. அரசு அனை வருக்கும் உணவு கொடுத்திருப்பதாக ஓரிடத்தில் கூறப்பட்டிருக்கிறது. இதற்குக் காரணம் உச்சநீதி மன்றத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட வழக்காகும். அதில் உச்சநீதிமன்றம், அரசாங்கத்திற்கு, ஏழைகளிலும் ஏழைகளாக இருப்பவர்களுக்கு சமுதாய சமையல் கூடங்களை அமைத்து, சமைத்த உணவு வழங்கிட வேண்டும் என்று கட்டளை பிறப்பித்திருந்தது. இதன் காரணமாகத்தான் அவ்வாறு 80 கோடி மக்களுக்கு உணவு வழங்கப்பட்டதாகக் கூறியிருக்கிறது. உண் மையில் இதுவும் தாள்களில்தான் காணப்படுகிறது. எதார்த்தத்தில் அவர்களிடம் சென்று கேட்டுப் பார்த்தால்தான் இதன் லட்சணம் என்ன என்று தெரியும்.  இதுபோன்ற சமுதாயக் கூடங்களை அமைப்ப தற்கு மேற்கு வங்க மாணவர்களும் இளைஞர்களும் உதாரணமாகத் திகழ்கிறார்கள். நெருக்கடிக் காலங்க ளில் ஏழை மக்களுக்கு எப்படி உணவு வழங்குவது என்பதை அவர்கள் காட்டியிருக்கிறார்கள். அவர்களி டம் சென்று சமுதாயக் கூடங்களை எப்படி அமைப்பது என்பது குறித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

உரையில் யதார்த்த நிலையும்

குடியரசுத் தலைவர் உரையில் கூறப்பட்டிருக்கும் நம் நாட்டின் நிலைமைகளுக்கும், சர்வதேச அளவில் வெளியாகும் ஊடகங்களில் வந்துள்ள நிலை மைகளுக்கும் கொஞ்சமும் சம்பந்தம் இல்லை. இந்தக் காலத்தில் இந்தியாவில் ஏற்றத்தாழ்வுகள் அதிகரித் திருக்கின்றன என சர்வதேச அறிக்கைகள் தெரிவிக் கின்றன. உலகில் உள்ள ஏழை மக்களில் 50 சத வீதத்திற்கும் மேலானவர்கள் இந்தியாவில் இருக்கிறார் கள். இதனை எப்படி நீங்கள் சரி செய்யப் போகிறீர்கள்? இதனைச் சரி செய்திட உங்களிடம் உள்ள திட்டம் என்ன? இவர்களை வறுமைக்கோட்டுக்கு மேலே கொண்டுவருவதற்கு உங்களிடம் உள்ள திட்டங்கள் என்ன? உலகில் பல நாடுகள் தங்கள் மக்களை வறு மைக்கோட்டுக்கு மேலே கொண்டுவருவதில் வெற்றி பெற்றிருக்கின்றன. அவ்வாறு ஏழை மக்களை உயர்த்திட எந்தத் திட்டமும் உங்களிடம் இல்லை.  நாட்டில் உள்ள குடும்பங்களில் 80 சதவீதத்தினர் வருமான இழப்பை எதிர்கொண்டுள்ளார்கள். இவர்க ளைக் காப்பாற்றிட உங்கள் திட்டம் என்ன? அவர்கள் ஜீவித்திருப்பதற்கு, அவர்கள் உயிர்வாழ்வதற்கு அவர்களுக்கு வருமானம் அளிப்பதற்கான வழி வகைகள் எதையாவது அவர்களுக்குக் காட்டியி ருக்கிறீர்களா? மாறாக நீங்கள் செய்திருப்பதெல் லாம் நாட்டின் பணக்காரர்களை மேலும் பணக்காரர்க ளாக்கும் விதத்தில் நடவடிக்கைகள்  எடுத்திருப்பதே யாகும். இதை நாம் சர்வதேச அறிக்கைகள் பலவற்றிலி ருந்தும், ‘ஆக்ஸ்பாம்’ மற்றும் ‘எகனாமிஸ்ட்’ நிறு வனங்கள் வெளியிட்டுள்ள அறிக்கைகளிலிருந்தும் காணமுடியும். இக்காலகட்டத்தில் நாட்டில் உள்ள ஒருசில குடும்பங்கள் மட்டுமே கொள்ளை லாபம் ஈட்டியிருக்கின்றன என்றும், ஒருசில குடும்பங்கள் மட்டுமே உலகின் உயர்ரக பில்லியனர்களின் வரிசை யில் இடம் பெற்றிருக்கின்றன என்றும், பெரும்பான் மையான இந்தியர்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழே தள்ளப்பட்டு விட்டார்கள் என்றும் குறிப்பிட்டிருக்கின் றன. இதனைச் சரி செய்திட உங்கள் திட்டம் என்ன?  எதுவும் இல்லை என்பதுதான் உண்மை. இத்தகைய ஏற்றத்தாழ்வுகள் சரி செய்யப்படா விட்டால், இந்தியா வின் ஜனநாயகம் நிச்சயமாக அவதிக்குள்ளாகும். அவதிக்குள்ளாகியிருக்கும் மக்களுக்கு நிவார ணம் அளிப்பதற்குப் பதிலாக, அவர்கள் மீது ஒடுக்கு முறை நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறீர்கள். இந்தியாவின் கூட்டாட்சி  அமைப்பு முறையை அழிக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறீர்கள்.

அரசமைப்புச் சட்ட கடமையும் பிரதமரின் நடவடிக்கையும்

நான் மீண்டும் கூறிக்கொள்ள விரும்புகிறேன். 2014இல் மக்கள் மீண்டும் உங்களை ஆட்சியில் அமர்த்தியிருக்கிறார்கள் என்றால் அது ஒரு தனி நபரைப் போற்றிப் புகழ்வதற்காக அல்ல? அரச மைப்புச்சட்டத்தின் கட்டளைகளை நீங்கள் நிறை வேற்ற வேண்டும் என்பதற்காகத்தான் உங்களை ஆட்சியில் அமர்த்தியிருக்கிறார்கள். நீங்கள் அர சமைப்புச்சட்டத்தின் கனவுகளை நிறைவேற்றுங்கள். ஆனால் இப்போது நீங்கள் அரசமைப்புச்சட்டத்தின் கனவுகளை நிறைவேற்றுவதாகக் கூறிக்கொண்டு, நாட்டின் மதச்சார்பின்மைக் கட்டமைப்பை அழித்துக் கொண்டிருக்கிறீர்கள். “ராமர் கோவில் கட்டுவோம்” என்று பிரதமர் பீற்றிக் கொண்டிருக்கிறார். மதச் சார்பற்ற நாட்டின் பிரதமரின் கடமை இதுவா? மதச்சார்பற்ற நாட்டின் பிரதமர் ராமர் கோவிலுக் குப் போவதும், காசி விஸ்வநாத் கோவிலுக்குப் போவ தும், அங்கே குழுமியிருக்கும் மக்களிடம் “இந்து கலாச்சாரத்தைப் பின்பற்றுங்கள்” என்று அழைப்பு விடுப்பதும்தான் கடமையா? அதன்மூலம் நாட்டி லுள்ள சிறுபான்மை மக்களுக்கு எதிராக வெறுப்பை உருவாக்கிடலாமா?   நம் நாட்டின் ஜனநாயக அமைப்பு இதையெல் லாம் நினைத்துப் பார்க்கவில்லை. இந்திய அரசியல் நிர்ணய சபையில் நடைபெற்ற விவாதங்களை யெல்லாம் சற்றே படித்துப் பாருங்கள். நாட்டில் சிறுபான்மை மக்கள் எவ்விதமான அச்சமுமின்றி வாழ்வதற்கு முழுச் சுதந்திரத்தை உத்தரவாதப் படுத்திட வேண்டியது ஆள்வோரின் பொறுப்பு என்பதை நீங்கள் அவற்றில் காண்பீர்கள்.

சிலை வைப்பதும் சித்தாந்தத்தின் மீது தாக்குதலும்

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் 125 ஆவது ஆண்டு தினத்தையொட்டி ‘இந்தியா கேட்’ முன்பு அவருக்கு சிலை வைத்திட இருக்கிறீர்கள். நான் வரவேற்கிறேன். ஆனால், நேதாஜி சுபாஷ் சந்திர போசின் சித்தாந்தத்தை நீங்கள் வரவேற்கவில்லை.  நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், சிறுபான்மையினர் மதிக்கப்பட வேண்டும் என்று மட்டும் கூறவில்லை, அவர்களுக்கு சம பங்கு அளித்திட வேண்டும் என்றும் கூறினார். அதனை அவர் நடைமுறைப்படுத்தினார். நீங்கள் நடைமுறைப்படுத்துகிறீர்களா? வெறு மனே சிலையை நிறுவுவதன் மூலம்  மட்டும், அவர் உயர்த்திப்பிடித்த சித்தாந்தங்களை நீங்கள் மறு தலித்திட முடியாது. அவருக்கு உண்மையிலேயே நீங்கள் மதிப்பு அளித்திட விரும்பினால் அவர் நடைமுறைப் படுத்திய சித்தாந்தங்களையும் பின்பற்றுங்கள்.  ஓர் உதாரணத்தை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். அவர் கொல்கத்தா மாநகராட்சியின் தலைமை அதிகாரியாக இருந்தபோது, வேலை வாய்ப்பில் முஸ்லீம்கள் எவரும் இல்லாததைக் கண்டார். வேலைவாய்ப்பில் 50 சதவீதத்தினர் முஸ்லீம் களாக இருந்திட வேண்டும் என்பதைக் கட்டாயமாக்கி னார். ஏனெனில் அவர்களும் இந்நாட்டின் ஓர் அங்கமாகும். அவர் எந்தக்காலத்திலும் சிறுபான்மை யினரை, அவர்கள் முஸ்லீம்களாக இருந்தாலும் சரி, அல்லது கிறித்தவர்களாக இருந்தாலும் சரி, அல்லது ஜைனர்களாக இருந்தாலும் சரி, அவர்கள் தேசத்திற்கு விரோதமானவர்கள் என்று  கருதிடவில்லை.  அவர்கள் அனைவருமே இந்தியர்கள்தான். அதுதான் நேதாஜி போதனை செய்த சித்தாந்தம். துரதிர்ஷ்டவசமாக அந்த சித்தாந்தத்தின்மீது தாக்குதல் தொடுக்கப்பட்டிருக்கி றது. இது இந்தக் குடியரசுத்தலைவர் உரையில் பிரதி பலித்திடவில்லை.

வெறுப்பை உமிழ்தல்...

நாட்டின் சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்பு உமிழப்படுவதை நாம் பார்க்கிறோம். இனப் படுகொலைகள் புரிந்திடுங்கள் என்று வெளிப்படை யாகவே கூட்டங்களில் பிரகடனம் செய்யப்படுவதைப் பார்க்கிறோம்.  அவ்வாறு கூட்டங்களில் வெறுப்பை உமிழ்பவர்களைக் கண்டித்து, அவர்களுக்கு எதிராக ஒரு சிறு வார்த்தைகூட பிரதமர் உதிர்த்திடவில்லை. இந்த நபரிடம்தான் நாம் நம் நாட்டை வழிநடத்து வதற்கான பொறுப்பை அளித்திருக்கிறோம். இது நாம் ஆபத்திலிருக்கிறோம் என்று நம்மை நினைக்க வைத்திருக்கிறது. ஒரு விஷயத்தைக் கேட்டால் நீங்கள் அதிர்ச்சிய டைவீர்கள். சிறுபான்மை இனத்தைச்சேர்ந்த ஓர்  இதழாளர் மீது குற்ற அறிக்கை தாக்கல் செய்யப் பட்டிருக்கிறது. அவர் செய்த குற்றம் என்ன தெரியு மா? அவருக்கு அதிக விஷயங்கள் தெரிந்திருந்த தாம். குற்ற அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டிருந் தது. “நீங்கள் ஒரு விஷயம் தெரிந்த நபர். உங்க ளுக்கு அதிக விஷயங்கள் தெரியும். எனவே மக்களை திசைதிருப்பிடுவதற்கான உரிமையை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள், அதனால் நீங்கள் சிறைக்குச் செல்ல வேண்டும்.” இதுதான் ஜனநாயகமா?

அமைதி வழி, நியாயமான முறை

நம் நாட்டின் முதல் பிரதமராக இருந்த பண்டிட் ஜவஹர்லால் நேரு, இந்திய ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மை குறித்தும் கூறுவதை நாம்  அடிக்கடி நினைவுகூர்ந்திட வேண்டும். “நிச்சயமாக நாம் ஜனநாயக நடைமுறையை ஏற்றுக் கொண்டி ருக்கிறோம். நாம் ஏன்  அதை ஏற்றுக்கொண்டோம்? பல்வேறு காரணங்களுக்காக அதை நாம் ஏற்றுக் கொண்டிருக்கிறோம். நம்முடைய இறுதி ஆய்வில் நம் மனிதகுலத்தின் வளர்ச்சிக்கு அது பேருதவி புரிந்திடும் என நாம் நினைத்தோம்.  நான் மீண்டும் அதனைக்கூறுகிறேன். அது மனித குலத்தின் வளர்ச்சிக்கு, சமூகத்திற்குப் பேருதவி புரிந்திடும். ஏனெனில், நாம் நம் அரசமைப்புச் சட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடி, தனிநபர் சுதந்திரத்திற்கு அதிக அளவில் மதிப்பினை அளித்திருக்கிறோம். ஏனெனில், ஒவ்வொரு நபரும் தான் நன்கு வளர்வ தற்கான ஆக்கப்பூர்வமான மற்றும் துணிகரமான உணர்வினை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று நாம் விரும்பினோம். உலகத்திற்குத் தேவையான பொருள்களை உற்பத்தி செய்வதோடு மட்டும் நாம் இருந்துவிடக்கூடாது. நம் வாழ்க்கைத்தரம் உயர வேண்டும் என்று நாம் விரும்புகிறோம்தான், ஆனா லும் அது, மனிதனின் ஆக்கப்பூர்வமான உணர்வி னை நசுக்குவதன் மூலம் ஏற்பட்டுவிடக்கூடாது.  ஜனநாயகம் என்பது தேர்தல்கள் மட்டும் அல்ல, நம்முன் உள்ள கேள்வி, ஜனநாயகத்தை அமைதியான வழிகளிலும் நியாயமான முறை களிலும் சோசலிசத்துடன் எவ்விதத்தில் இணைப்பது என்பதாகும். இதுதான் ஜனநாயகம். இத்தகைய ஜனநாயக அமைப்புமுறைதான் நம் அனைவரை யும் இந்த அவையின்முன் ஒருங்கே இணைத்தி ருக்கிறது. இதனையே இந்த அரசும் பின்பற்றிட வேண்டிய கடமையைக்,  கடப்பாட்டினைக் கொண்டிருக்கிறது.”