states

img

உ.பி.யில் 13 வயது தலித் சிறுமி கும்பல் வல்லுறவு!

புதுதில்லி, மே 5 - உத்தரப் பிரதேச மாநிலத்தில் 13 வயது தலித் சிறுமியை 4 பேர் கொண்ட கும்பல் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கியதுடன், காவல்துறை அதிகாரி ஒருவரும் சிறுமியை பலாத்காரம் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் லலித்பூரைச் சேர்ந்தவர் 13 வயதுச் சிறுமி. ஏழை தலித் குடும்பத்தைச் சேர்ந்த இவர் பள்ளியில் படித்து வந்தார். இந்நிலையில், இந்தச் சிறுமியை 4 பேர்  கொண்ட ஒரு கும்பல், 240 கி.மீ. தொலை விலுள்ள போபாலுக்குக் கடத்திச் சென்று 3 நாட்கள் தொடர் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கியுள்ளனர்

அதன் பிறகு அவர்கள், சிறுமியை ஏப்ரல் 26 அன்று லலித்பூர் காவல் நிலையத்தில் விட்டுச் சென்றுள்ளனா். அதைத் தொடர்ந்து சிறுமியை போலீசார் அவரது அத்தையிடம் ஒப்படைத்துள்ளனர். ஒருநாள் கழித்து, போலீசார் சிறுமியை காவல் நிலையத்திற்கு அழைத்து வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். அன்று மாலையில் சிறுமியை அவரது அத்தை  காவல்துறை பொறுப்பு அதிகாரியின் அறைக்கு  அழைத்துச் சென்றுள்ளார். அங்கு 13 வயது தலித் சிறுமியை, காவல்துறை அதிகாரியும் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கியுள்ளார்.  ஏப்ரல் 30 அன்று சிறுமியை குழந்தை கள் நலக்குழுவிடம் போலீசார் ஒப்படைத்துள்ள னர். அவர்கள் சிறுமிக்கு மனநல ஆலோசனை வழங்கியுள்ளனர். அப்போது, தலித் சிறுமி தனக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமைகளை அவர்களிடம் கூறியுள்ளார். அதைத் தொடர்ந்தே  இந்த கொடூரச் சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதுதொடர்பாக உ.பி. பாஜக அரசுக்கு எதிராக கடும் கண்டனங்களை தெரி வித்தன. சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைச் சந்தித்து, அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்ததுடன், நீதி கிடைக்க போராடுவோம் என்று உறுதியளித் தார். “பாஜக ஆட்சியில் யாரை நம்புவது; யாரை நம்பக்கூடாது என்பது மிகப் பெரிய கேள்வி யாக எழுந்துள்ளது. பாலியல் தாக்குதல் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்ற சிறுமிக்கு, காவல் நிலைய பொறுப்பு அதி காரியே பாலியல் தொல்லை அளிப்பார்கள் என்றால், பாதிக்கப்பட்ட மகள்கள் எங்கு செல்லவேண்டும் என்பதை முதல்வா் ஆதித்யநாத்துதான் கூறவேண்டும்” என்றும் சமாஜ்வாதி கட்சி காட்டமாக விமர்சித்தது.

‘புல்டோசரின் இரைச்சலில் சட்டம் - ஒழுங்கு  சீா்திருத்தம் எவ்வாறு நசுக்கப்பட்டிருக்கிறது என்பதை இந்த பாலியல் புகார் காட்டுகிறது.  பெண்களுக்கு காவல்நிலையம் பாதுகாப் பானது இல்லை என்றால், அவா்கள் தங்களின் புகார்களுடன் எங்கு செல்வார்கள்? என்று காங்கிரஸ் பொதுச் செயலாளா் பிரியங்கா காந்தியும் கேள்வி எழுப்பினார்.  “புகார் அளிக்கச் செல்லும் பெண்களின் பாது காப்பை உறுதிப்படுத்தும் வகையில், இனி மேலாவது, காவல்நிலையங்களில் பெண் போலீ சாரின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்து  உத்தரப்பிரதேச அரசு சிந்திக்குமா?” என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

இதையடுத்து, சிறுமி கும்பல் வல்லுறவு கொடுமைக்கு உள்ளாக்கப்படுவதற்கு உடந்தையாக இருந்த சிறுமியின் அத்தை, காவல் நிலைய பொறுப்பு அதிகாரி திலக்தாரி சரோஜ் உள்பட 6 போ் தற்போது கைது செய்யப்பட்டு உள்ளனா். குற்றவாளிகள் மீது தேசியப் பாதுகாப்புச்  சட்டத்தின் கீழும் வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளதாக உ.பி. துணை முதல்வா் பிரஜேஷ் பாடக் தெரிவித்துள்ளார்.