புதுதில்லி, டிச.25- காதல் திருமணம் செய்துகொண்ட இளைஞரைக் கடத்தி, அவரைக் கொடூரமான முறையில் தாக்கி, ஆண்குறியை சிதைத்த சம்பவம் தில்லியில் நடந்துள்ளது. புதுதில்லியைச் சேர்ந்த 22 வயது இளைஞரும் பெண் ஒருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். பெற்றோரின் எதிர்ப்பை மீறி சில நாட்களுக்கு முன்பு பதிவுத் திருமணமும் செய்து கொண்டுள்ளனர். பின்னர், தங்களுக்கு பாதுகாப்பு கோரி ராஜவ்ரி பூங்கா காவல் நிலையத்திற்கு அவர்கள் சென்றுள்ளனர். அப்போது, அங்கு வந்திருந்த பெண்ணின் உறவினர்கள், இளைஞரை அங்கிருந்து சாகர்பூர் பகுதிக்கு கடத்திச் சென்று கொலை வெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். பெண்ணின் தந்தை, சகோதரர், மாமா என பலரும் சேர்ந்து நடத்திய இந்த தாக்குதலில், சம்பந்தப்பட்ட இளைஞர் பலத்த காயம் அடைந் துள்ளார். எனினும் விடாத அவர்கள், மிகக் கொடூரமான முறை யில் அந்த இளைஞரின் ஆண்குறியையும் சிதைத்து படுகாயம் ஏற்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் தில்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. படுகாயம் அடைந்த இளைஞர், தில்லி எய்ம்ஸ் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக ரஜவ்ரி பூங்கா போலீசார், பெண் ணின் குடும்பத்தினர் மீது கொலை முயற்சி, கடத்தல் உள் ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, 2 பெண்களை கைது செய்துள்ளனர். மேலும், எப்ஐஆர் பதிவதில் காலதாமதம் செய்ததாக 2 போலீசாரையும் சஸ்பெண்ட் செய்துள்ளனர்.