டேராடூன், டிச.2- உத்தரகண்ட் மாநிலத்திலுள்ள கேதார் நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய 4 கோயில்கள் ‘சார்தாம்’ என்று அழைக்கப்படுகின்றன. இந்தக் கோயில்கள் மட்டுமன்றி, இவற்றுடன் தொடர்புடைய 51 கோயில்களை இவ்வளவு காலமும் பண்டி தர்கள் எனப்படும் புரோகிதர்களே நிர்வகித்து வந்தனர். அர்ச்சனை, உண்டியல் வருமானம் உள்ளிட்டவற்றையும் அவர்களே அனுபவித்து வந்தனர். இந்நிலையில், இந்த 51 கோயில்களையும் அரசுக் கட்டுப்பாட்டில் கொண்டுவர முடிவு செய்த அம்மாநில பாஜக அரசு, இதற்கென கடந்த 2019-ஆம் ஆண்டில் தேவஸ்தான வாரிய சட்டத்தை கொண்டு வந்தது.
இதனை ஏற்காத பண்டிதர்களும், தீர்த்த புரோகிதர் களும் அமைப்பு ஒன்றை ஆரம்பித்து தொடர் போராட்டங்களை நடத்தினர். அடுத்தாண்டு நடைபெறும் உத்தரகண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் 15 தொகுதிகளில் பாஜகவை எதிர்த்துப் போட்டியிடுவோம்; ஏனைய தொகுதிகளில் பாஜகவுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்வோம் என்று மிரட்டிய அவர் கள், சுமார் 15 ஆயிரம் பேர் தொடர் தர்ணா விலும் இறங்கினர். இதையடுத்து, தேவஸ்தான வாரியத்தை கலைப்பதாக அறிவித்துள்ள புஷ்கர் சிங் தாமி தலைமையிலான உத்தரகண்ட் பாஜக அரசு, முன்னதாக இந்த வாரியத்தை அமைத்தற்காக பண்டிதர்கள், புரோகிதர்களிடம் மன்னிப்புக் கோருவதாகவும் கூறியுள்ளது.