states

சட்ட மேலவை உறுப்பினர் கவிதா பதிலடி தெலுங்கானா மக்களை ஏமாற்ற முடியாததால் ஆளுநர் தமிழிசை அவதூறு செய்கிறார்!

ஹைதராபாத், செப்.9- தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், “தெலுங்கானா மக்களுக்கான சேவையில் 4-வது ஆண்டு தொடக்கம்” என்ற தலைப்பில் ஆளுநர் மாளிகையில் வியாழனன்று உரையாற்றினார். அப்போது, “தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ் அரசின் கீழ் ஆளுநர் மாளிகை அவமதிக்கப்பட்டு உள்ளது. நான் மாவட்டங்களுக்கு செல்லும்போது, காவல்துறை கண்காணிப்பாளர்கள், மாவட்ட ஆட்சியர்கள் வருவதில்லை. யார் அவர்களுக்கு உத்தரவிடுகிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. மரபுமுறைகள் பின்பற்றப்படுவதில்லை.  குடியரசுத் தினத்தன்று தேசியக் கொடியை ஏற்றக் கூட எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால், ஒரு பெண் ஆளுநரை எப்படி பாரபட்சத்துடன் நடத்தினார்கள் என்று மாநிலத்தின் வரலாறு பேசும்” என்று சோக கீதம் இசைத்திருந்தார். இதற்கு தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவின் மகளும், தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி சட்ட மேலவை உறுப்பினருமான கவிதா டுவிட்டரில் பதிளித்துள்ளார். அதில், “தெலுங்கானா ஆளுநர் மாளிகை, ஓர் அரசியல் அலுவலகமாக மாறியுள்ளது. அது, தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி அரசையும், முதல்வர் சந்திரசேகர் ராவ் காருவுக்கும் அவதூறு ஏற்படுத்தும் தீர்மானத்துடன் உள்ளது.  பாஜக-வின் அவதூறு பிரச்சாரங்களால் தெலுங்கானா மக்களை ஏமாற்ற முடியவில்லை என அவர்கள் உணர்ந்த தருணத்தில், கவுரவத்திற்குரிய ஆளுநரின் இந்த பேச்சுகள் வெளிவந்துள்ளன” என தெரிவித்துள்ளார்.