சமையல் கேஸ் விலைகள் சிலிண்டருக்கு 200 ரூபாய் ஒன்றிய அரசு குறைத்திருப்பதன் பின்புலம் என்ன? இதனால் சாமானிய மக்கள் மகிழ்ச்சி அடைவார்களா? விலைக் குறைப்பின் பின்புலம் மக்கள் மத்தியில் இருக்கிற கோபம்தான். எதிர்க் கட்சிகள் ஒன்றாக கை கோர்த்து இருக்கிற “இந்தியா”வும் ஒரு காரணம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செப். 1 லிருந்து 7 வரை நாடு தழுவிய பிரச்சாரம், போராட்டம் அறிவித்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது. 2014 இல் 400 ரூபாய்க்கு விற்ற சிலிண்டர் இன்று 1200 ரூபாயை தொட்டு இருக்கிறது. விலை 600, 800, 1000 என்று ஏறும் போதெல்லாம் என்ன சொன்னார்கள்? அரசு தலையிட முடியாது... எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டமாகி விடும்...என்று. இப்போது மட்டும் எப்படி தலையிடுகிறார்கள்? இப்போது குறைப்பவர்கள் அப்போது குறைத்து இருக்க முடி யாதா? காரணம், 2024 தேர்தல். மக்களிடம் போக வேண்டும். குனிய வேண்டும். கும்பிட வேண்டும் என்பதுதானே. ஒரு ஆளை அடித்து, துவைத்து, மூர்ச்சையாக்கி அப்புறம் முகத்தில் தண்ணீர் தெளித்தால்... தண்ணீர் தெளித்ததற்கு பாராட்ட முடியுமா? செம்மஞ்சேரி பஸ் நிறுத்தத்தில் ஒரு அம்மாவிடம், என்னம்மா 200 ரூபா சிலிண்டர் வெல கொறைஞ்சது, சந்தோசம்தானே என்று கேட்டவுடன் பொரிஞ்சு தள்ளி விட்டார். 400 ரூபா வித்த சிலிண்டரு 900 ரூபா ஆன பிறகு கொறைச்சா கொண்டாடவா முடியும்... எங்களால 500 ரூபாக்கு ஒசந்த போதே தாங்க முடியல... இதுல மகிழ்ச்சி ஒரு கேடு என்றார். வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு இப்பவும் 703 ரூபாய். நம்ம ஜால்ரா கார்ப்பரேட் ஊடகங்கள் 400 ரூபா குறைப்பு என்று தலைப்பு. ஏற்கனவே 200 ரூபா சலுகை... இப்ப 200 ரூபா. ஆனா செய்தியில இப்பவே 400 ரூபா கொறைச்ச மாதிரி...
வெளங்கும் ஊடக தர்மம். 2016 இல் இலவச கேஸ் ஸ்டவ் “உஜ்வாலா” திட்டம் வந்த போது எல்லா பெட்ரோல் பங்குகளிலும் ஒரு விளம்பரப் பலகையில் ஒரு வயதான பாட்டி சுள்ளிகளை அடுக்கி கண்கள் கரித்து அடுப்பை பற்ற வைக்கும் காட்சி இடம் பெற்று இருந்தது. உஜ்வாலா திட்ட பயனாளிகளில் 1.18 கோடி பேர் ஓராண்டு முழுக்க 2022 - 23 இல் ஒரு கேஸ் சிலிண்டர் கூட வாங்கவில்லை. 1.51 கோடி பேர் ஒரே ஒரு சிலிண்டரையே வாங்கி உள்ளார்கள். இது ஏற்கனவே 200 ரூபா சலுகை கொடுத்திருந்த பின்னணியில் இருக்கிற நிலைமைதான். அன்றாடங்காய்ச்சிக்கு தங்க விலை கூடுனா என்ன, கொறைஞ்சா என்ன? அந்த பெட்ரோல் பங்க் பாட்டி ஒரு சிலிண்டரும் வாங்காத 1.18 கோடியில் ஒரு ஆளா, இல்லை வருசத்துக்கு இரண்டாவது சிலிண்டர் வாங்க முடியாத 1.51 கோடியில் ஒரு ஆளா என்று தேடிப் பார்க்க வேண்டும். எங்காவது அடுப்பெரிக்க சுள்ளியைப் பொறுக்கிக் கொண்டிருப்பார் அந்த மூதாட்டி. இல்லை சுள்ளி அடுப்பு முன்னால் புகை கண்களை கரிக்க கலங்கிப் போய் உட்கார்ந்து இருப்பார்.
- க.சுவாமிநாதன்