states

img

ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் திரையிடப்பட்டது மோடி குறித்த பிபிசி ஆவணப்படம்

மோடி அரசின் தடையை உடைத்த தெலுங்கானா மாணவர்கள்

குஜராத் கலவரத்தில் நரேந்திர மோடிக்கு இருந்த நேரடித் தொடர்புகளை, பிபிசி செய்தி நிறுவனம் 2 பாகங்களைக் கொண்ட ஆவணப்படமாக தயாரித்து அதன் முதல்பாகத்தை கடந்த ஜனவரி 17 அன்று இங்கிலாந்தில் ஒளிபரப்பியது.  ஆனால், இந்த ஆவணப்படத்தை, அவசரகால அதிகாரங்களை பயன்படுத்தி ஒன்றிய பாஜக அரசு அண்மையில் முடக்கியது. பிரதமர் நரேந்திர மோடி தொடர்பான பிபிசியின் ஆவணப் படமான ‘India: The Modi Question’ என்பதை நீக்க கடந்த வாரம் தகவல் மற்றும்  ஒலிபரப்பு அமைச்சகம் (MIB) உத்தரவிட்டது. இந்த உத்தரவு, 2021 இன்  அவசரகால தகவல் தொழில்நுட்ப விதிகளின் கீழ் பிறப்பிக்கப்பட்டது.  “இந்திய உச்சநீதிமன்றத்தின் அதிகாரம் மற்றும் நம்பகத்தன்மை யை அவமதிப்பது, பல்வேறு சமூகங்களிடையே பிளவுகளை விதைப்பது மற்றும் இந்தியாவில் உள்ள வெளிநாட்டு அரசாங்கங் களின் நடவடிக்கைகள் குறித்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பது” போன்ற நேரங்களில் அவற்றைத் தடை செய்வதற்கு 2021 தகவல் தொழில்நுட்ப சட்டம் வழிவகுக்கிறது.

தகவல் தொழில்நுட்ப விதிகள், 2021 (ஐடி விதிகள், 2021) கீழ், அவசரச் சூழ்நிலைகளில், யூடியூப் (YouTube), டுவிட்டர் (Twitter),  மற்றும் முகநூல் (Facebook) போன்ற சமூக ஊடகத்தில் உள்ள கருத்து உள்ளடக்கத்தை அகற்றுவதற்கான அறிவிப்புகளை வெளியிட ஒன்றிய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்திற்கு அதிகாரம் அளிக்கிறது. குறிப்பிட்ட உள்ளடக்கம் இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு அல்லது பாதுகாப்பு, வெளி மாநிலங்களுட னான நட்புறவு அல்லது பொது ஒழுங்கில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அமைச்சகம் நம்பினால், இந்த அவசர அறிவிப்புகளை வெளியிடலாம். அதன்படி  2021 முதல் குறைந்தது 7 முறை அவசரகால விதிகளை ஒன்றிய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் பயன்படுத்தியுள்ளது. தற்போது பிபிசி ஆவணப்படத்திற்கு எதிராகவும் அவசரகால சட்டங்களை ஒன்றிய அரசு பயன்படுத்தியுள்ளது.

ஒரு ஊடகம் தானாகவே சில உள்ளடக்கத்தை நீக்கினால், பயனர் தளத்தின் குறை தீர்க்கும் அதிகாரியை அணுகி கேள்வி எழுப்பலாம், அதற்கு அந்த அதிகாரி 15 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும். ஆனால், ஒன்றிய அரசின் அவசரகால சட்ட விதிகளின் அடிப்படை யில் ஒரு தளம் உள்ளடக்கத்தை அகற்றியிருந்தால், சம்பந்தப்பட்ட பயனர் யாரையும் கேள்வி கேட்க முடியாது. சட்டம் எந்த நேரடி உதவியையும் வழங்காது. இந்த வழக்கில் பயனர்களுக்கு இருக்கும் ஒரே வழி நீதிமன்றத்தை அணுகுவதுதான். இருப்பினும், அது கூட எளிதானது அல்ல. ஏனெனில் குறிப்பிட்ட அந்த உள்ளடக்கத்தை அகற்ற வேண்டும் என்று அரசாங்கம் எப்படி முடிவு செய்தது என்பதை அவசரகால சட்ட விதிகளின் படி குடிமக்களுக்குத் தெரிவிக்க வேண்டியதில்லை. இந்நிலையில்தான் ஒன்றிய அரசின் தடையையும் மீறி ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர்கள் பிபிசி ஆவணப் படத்தைத் திரையிட்டுள்ளனர். 

புதுதில்லி, ஜன. 24 - குஜராத் மதக் கலவரம் தொடர்பான பிபிசி-யின் ஆவணப்படம், இந்தியாவில் திரையிடத் தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலை யில் தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் மாணவர்களால் திரையிடப்பட்டு உள்ளது.  “சகோதரத்துவ இயக்கம், ஹைதராபாத் பல்கலைக்கழகம்” என்ற அமைப்பு சார்பில், பிபிசி ஆவணப்படத்தின் இந்த ‘திரையிடல் மற்றும் விவாதம்’ நடந்துள்ள நிலையில், இந்தத் திரையிடல் நிகழ்வில் சுமார் 70 முதல் 80 மாணவர்கள் கலந்து கொண்டு ஆவணப் படத்தைப் பார்த்துள்ளனர்.

தடைகளை மீறி...

“பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவணப் படமான ‘இந்தியா: மோடிக்கான கேள்விகள்’ படத்தைத் திரையிடப்போகிறோம்” என்று  ஹைதராபாத் பல்கலைக்கழக சகோதரத்துவ அமைப்பு ஜனவரி 21-ஆம் தேதியே டுவிட்டர்  பக்கத்தில் அறிவிப்பு செய்திருந்தனர். அதன் படியே ஒன்றிய பாஜக அரசின் தடையையும் மீறி, பிபிசி ஆவணப்படத்தைத் திரை யிட்டுள்ளனர். படம் திரையிடப்பட்டது குறித்து தாமத மாகவே அறிந்த ஆர்எஸ்எஸ் மாணவர் பிரி வான ‘ஏபிவிபி’ (ABVP) தாம்தூம் எனக் குதித்து, திரையிடலை நிறுத்துவதற்கு முயற்சித்தது. ஆனால், அது நடக்கவில்லை. இதையடுத்து, சம்பந்தப்பட்ட திரையிடலை நிகழ்த்திய மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்கலைக்கழக நிர்வாகத்திடம் அளித்துள்ளது.  “இந்தப் பிரச்சனையில் நாங்கள் இது வரை காவல்துறையிடம் புகார் அளிக்க வில்லை. மேலும் எந்தப் போராட்டத்திலும் ஈடு படவில்லை. பல்கலைக்கழக நிர்வாகத்தை மட்டுமே அணுகியுள்ளோம். ஆனால், ஹைத ராபாத் பல்கலைக்கழக நிர்வாகம் இதில் அமைதி காக்கிறது” என்று ஏபிவிபி-யைச் சேர்ந்த பி.ஷ்ரவன் ராஜ் விரக்தியாக கூறி யுள்ளார்.

மறுபுறத்தில், ஏபிவிபி-யின் இந்த கொதிப்புக்கு, “ஒன்றிய பாஜக அரசாங்கத் தின் முகவராக ஏபிவிபி நடந்து கொள்வதை நிறுத்த வேண்டும்” ஹைதராபாத் பல்கலைக் கழக (UoH) மாணவர் சங்கத் தலைவரும், இந்திய மாணவர் சங்கத்தின் (SFI) உறுப்பின ருமான அபிஷேக் நந்தன், பதிலடி கொடுத்துள் ளார்.  மேலும், “ஆவணப்படத்தை திரையிட்ட  மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் பட்டால், நாங்கள் அவர்களுடன் நிற்போம்.  இது தடை செய்யப்பட்ட எந்த அமைப்பா லும் எடுக்கப்பட்ட படம் அல்ல. பிபிசி உலக ளாவிய வலையமைப்பைக் கொண்ட ஊடக  அமைப்பு. இது அரசாலோ அல்லது நீதி மன்றத்தினாலோ தடை செய்யப்படவில்லை. பல்கலைக்கழக வளாகங்களில் விவாதம்  மற்றும் விவாத கலாச்சாரம் ஊக்குவிக்கப் பட வேண்டும் என்று நாங்கள்நம்புகிறோம்” என்றும் அபிஷேக் நந்தன் குறிப்பிட்டுள்ளார். “பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவணப் படத்தை திரையிட்டுப் பார்ப்பதற்கு முன்பாக  மாணவர்கள் அமைப்பு எங்களிடம் எந்த அனு மதியும் கோரவில்லை. பல்கலைக்கழகத்தில் உள்ள ஏபிவிபி அமைப்பினர் எங்களிடம் வந்து  புகார் அளித்த பின்புதான், பல்கலைக் கழகத்தில் இதுபோன்று ஆவணப்படம் திரை யிடப்பட்ட விவரம் தெரியவந்தது. இந்த விவ காரம் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய பல்கலைக்கழக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம்” என்று ஹைதராபாத் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதேநேரம், “பல்கலைக்கழகத்தில் பிபிசி ஆவணப்படம் திரையிடப்பட்டது தொடர்பாக பல்கலைக்கழகத்தின் தரப்பில் இதுவரை எந்த புகாரும் வரவில்லை” என்று தெலுங்கானா காவல்துறை தெரிவித்துள்ளது. “பிபிசி ஆவணப்படமானது, ஒன்றிய அரசின் தடை உத்தரவு வருவதற்கு முதல் நாள் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது. மாணவர் அமைப்பின் சார்பில் புகார் பெறப்பட்டுள்ளது. ஆனால் பல்கலைக்கழக நிர்வாகம் தரப்பில் புகார்கள் வரவில்லை. அவர்கள் அளிக்கும் புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப் படும்’ என்று கச்சிபவுலி காவல்நிலையத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

ஜேஎன்யு மாணவர்களும் திரையிடலுக்கு ஏற்பாடு

ஒன்றிய அரசால் முடக்கப்பட்ட பிபிசி ஆவணப்படத்தை திரையிடுவதற்கு தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (JNU)  மாணவர்களும் ஏற்பாடுகளில் இறங்கியுள்ளனர். செவ்வாயன்று (ஜனவரி 24) இரவு 9 மணிக்கு இந்த ஆவணப்படத்தை திரையிட உள்ளதாக ஜேஎன்யு மாணவர்கள் அறிவித்துள்ளனர்.  இதனிடையே, அறிக்கை ஒன்றை வெளி யிட்டுள்ள ஜேஎன்யு பல்கலைக்கழக நிர்வாகம் “இது போன்ற அங்கீகரிக்கப்படாத செயல்பாடு பல்கலைக்கழக வளாகத்தின் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை சீர்குலைக் கும். சம்பந்தப்பட்ட மாணவர்கள் அல்லது  தனிநபர்கள் முன்மொழியப்பட்ட இத்திட்டத் தை ரத்து செய்யுமாறு உறுதியாக அறிவுறுத்தப் படுகிறார்கள்” என தெரிவித்துள்ளது.

கேரளத்தில் களமிறங்கிய  வாலிபர் சங்கம்

கேரளத்தில் பிபிசி ஆவணப்படத்தை அனைவரும் பார்க்கும் வகையில் திரையிட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் முடிவு செய்துள்ளது. இடதுசாரிகள் ஆட்சி நடக்கும் கேரளத்தில் பிபிசி ஆவணப்படத்திற்கு தடையில்லை என்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் அறிவித்துள்ளது.
 

;