புதுதில்லி, டிச. 7 - மனித உரிமைப் போராளியான வழக்கறிஞர் சுதா பரத்வாஜுக்கு அளிக்கப்பட்ட ஜாமீனை எதிர்த்து தேசிய புலனாய்வு முகமை தாக்கல் செய்த மனுவை அதிரடியாக தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். பீமா கோரேகான் வழக்கில் பொய் குற்றச்சாட்டுக்களைப் புனைந்து வழக்கறிஞர் சுதா பரத்வாஜ் உள்ளிட்ட 18 மனித உரிமைப் போராளிகள் கடந்த சில ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் உரிய காலத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாத காரணத்தால் வழக்கறிஞர் சுதா பரத்வாஜுக்கு மும்பை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதனால் ஆத்திரமடைந்துள்ள மோடி அரசின் தேசிய புலனாய்வு முகமை, ஜாமீனை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் அவசர அவசரமாக மனு செய்தது. இந்த மனுவை செவ்வாயன்று விசாரித்த நீதிபதிகள் யு.யு.லலித், ரவிந்திர பட், பேலா ஆகி யோர் அமர்வு, சுதா பரத்வாஜின் ஜாமீனை எதிர்க்க புலனாய்வு முகமைக்கு எவ்வித முகாந்திரமும் இல்லை என்று கூறி மனுவை தள்ளுபடிசெய்தனர்.