புதுதில்லி, மார்ச் 23- மார்ச் 28-29 வேலைநிறுத்தத்தை மாபெரும் வெற்றியாக்கிட சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் மத்தியத் தொழிற்சங்கங்களின் கூட்டுமேடை அறைகூவல் விடுத்துள்ளது. இது தொடர்பாக மார்ச் 24 அன்று மாலை 5 மணி முதல் 6 மணி வரையிலும் பொதுக் கூட்டம் நடத்திட கூட்டுமேடை தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக மத்தியத் தொழிற்சங்கங்களின் கூட்டுமேடை சார்பில் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: மத்தியத் தொழிற்சங்கங்கள் மற்றும் சுயேச்சையான துறைவாரி சம்மேளனங்கள் மற்றும் சங்கங்களின் கூட்டு மேடையின் சார்பில், ஒன்றிய அரசாங்கம் பின்பற்றி வரும் தொழிலாளர் விரோத, விவசாயிகள் விரோத, மக்கள் விரோத மற்றும் தேச விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக வரும் மார்ச் 28-29 தேதிகள் அன்று இரண்டு நாட்கள் அகில இந்திய வேலை நிறுத்தம் நடத்தப்படவுள்ளது.
அது தொடர்பாக நாடு முழுதும் நடைபெற்று வரும் தயாரிப்பு வேலைகள் தொடர்பாக மேற்படி கூட்டு மேடையின் சார்பில் செவ்வாய்க்கிழமை (22ஆம் தேதி) தில்லி ஒரு கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் நாடு முழுதும் தயாரிப்பு வேலைகள் மிக மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும், மாநில அளவிலான கூட்டு சிறப்பு மாநாடுகளும், பொதுத்துறை சங்கங்களின் சார்பில் துறைவாரியாகவும் சிறப்பு மாநாடுகள் நடந்துள்ளதாகவும், தனியார் கார்ப்பரேட் துறைகளில் உள்ள சங்கங்களின் சார்பிலும், அதேபோன்றே முறைசாராத் தொழிலாளர்களான திட்டப் பணியாளர்கள் (ளஉhநஅந றடிசமநசள), வீடுகளில் வேலை செய்யும் தொழிலாளர்கள், வீதிகளில் விற்பனை செய்வோர், பீடித் தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், சாலைப் போக்குவரத்துத் தொழிலாளர்கள், மின்சார வாரியங்களில் பணியாற்றும் தொழிலாளர்களும் ஹரியானா, சண்டிகர் போன்ற மாநிலங்களில் ‘எஸ்மா’ பாயும் என மிரட்டல் விடுத்துள்ளபோதிலும் அவற்றைத் தூக்கி எறிந்துவிட்டு வேலைநிறுத்தத்தில் முழுமையாகப் பங்கேற்றிடத் தீர்மானித்திருப்பதாகவும் தெரிவித்தார்கள்.
பெருந்திரள் ஆர்ப்பாட்டங்கள்
நிலக்கரி, உருக்கு, எண்ணெய், டெலிகாம், அஞ்சல், வருமானவரி, தாமிரம், வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்களில் செயல்படும் சங்கங்கள் வேலைநிறுத்த நோட்டீஸ்களை அவற்றின் நிர்வாகத்திடம் அளித்துள்ளன. ரயில்வே மற்றும் பாதுகாப்புத்துறை யில் உள்ள சங்கங்கள் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக பல நூறு மையங்களில் ஊழியர்களைத் திரட்டி பெருந்திரள் ஆர்ப்பாட்டங்கள் நடத்திடத் தீர்மானித்துள்ளன.
கூட்டத்தில், ஒன்றிய பாஜக அரசாங்கம், சமீபத்தில் ஐந்து மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் வெற்றிபெற்றதை அடுத்து, தொழிலாளர்களுக்கு அளிக்கவேண்டிய பிராவிடண்ட் ஃபண்ட் வட்டி விகிதத்தை 8.5 சதவீதத்திலிருந்து 8.1 சதவீதமாகக் குறைத் திருப்பது, பெட்ரோல், சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய், சிஎன்ஜி முதலானவற்றின் மீதான வரிகளை திடீரென்று மேலும் உயர்த்தியிருப்பது, பொதுத்துறை நிறுவனங்களை விற்றுப் பணமாக்கும் திட்டங்களை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முடுக்கி விட்டிருப்பது போன்று உழைக்கும் மக்கள்மீது மேலும் மூர்க்கமான முறையில் தாக்குதல் தொடுக்க முன்வந்திருப்பது சுட்டிக்காட்டப்பட்டது. ஆனாலும் பொதுத்துறை நிறுவனங்களை விற்றுப் பணமாக்குவதற்கான நடவடிக்கைகள் பணவீக்கத்தின் அளவு மிகவும் மோசமான நிலைமைக்குச் சென்றிருப்பதாலும், பங்குச் சந்தையில் படு வீழ்ச்சி ஏற்பட்டதாலும் சற்றே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன.
கிராமபந்த்துக்கு வரவேற்பு
கூட்டத்தில் ஒன்றிய அரசின் இந்தக் கொள்கைகள் கண்டிக்கப்பட்டன. கூட்டத்தில், சம்யுக்த கிசான் மோர்ச்சா மார்ச் 28-29 தேதிகளில் கிராம பந்த் அனுசரித்திட முடிவெடுத்திருப்பதை மீண்டும் உறுதிப்படுத்தி இருப்பது வரவேற்கப்பட்டது. ஒன்றிய அரசாங்கத்தின் தொழிலாளர் விரோதக் கொள்கைகளை எதிர்த்திடவும், ஒன்றிய அரசாங்கம் தொழிலாளர் நலச் சட்டங்களை தொகுப்பு சட்டங்கள் என்ற பெயரில் முதலாளிகள் நலச்சட்டங்களாக, தொழிலாளர் விரோதச் சட்டங்களாக மாற்றி யிருப்பதை எதிர்ப்பதற்காகவும் இந்த வேலை நிறுத்தத்தில் தங்களை முழுமையாக இணைத்துக்கொள்ள மாநிலங்களில் செயல்படும் அனைத்து சங்கங்களும் முன்வர வேண்டும் என்றும் கூட்டத்தில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
பொதுக்கூட்டங்கள்
மார்ச் 24 அன்று மத்தியத் தொழிற்சங்கங்களின் முகநூல் பக்கங்களை இணைத்து, மாலை 5 மணி முதல் 6 மணி வரையிலும் பொதுக் கூட்டம் நடத்திடவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. கூட்டு மேடையின் சார்பில் சமூகத்தில் உள்ள அனைத்துப் பிரிவினரும், “மக்களைக் காப்போம், நாட்டைக் காப்போம்” என்ற முழக்கத்துடன் நடைபெறவிருக்கும் வேலைநிறுத்தத்திற்கு ஆதரவினை நல்கிட சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் முன்வர வேண்டும் என்றும் கூட்டு மேடையின் சார்பில் அறைகூவல் விடுக்கப்படுகிறது. இவ்வாறு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.