புதுதில்லி, டிச.22- நாடாளுமன்ற அலுவல்கள் தொடர்பான செய்திகளை சேகரிப்பதற்கு, கடும் கட்டுப்பாடுகள் விதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாநிலங்களவையின் ஊடக ஆலோசனைக் குழு செயலாளர் (Media Advisory Committee of the Rajya Sabha) ஆனந்த் பகைத்கர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை, குடியரசுத் துணைத்தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான வெங்கையா நாயுடுவிற்கு முறைப்படி அனுப்பி வைத்துள்ளார். “கோவிட்-19 காரணமாக, 2020-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து நாடாளுமன்ற வளாகத்திற்குள் ஊடகவியலாளர்கள் நுழைவது தடைசெய்யப்பட்டுள்ளது.
எல்லாவற்றிலும் கட்டுப்பாடுகள் திரும்பப் பெறப்பட்டாலும் அல்லது பெருமளவில் தளர்த்தப்பட்டாலும், இந்திய மக்களின் மிக உயர்ந்த பிரதிநிதித்துவ அமைப்பான நாடாளுமன்ற அலுவல்களை செய்தியாக்குவதில் ஊடகங்கள் இன்னும் கட்டுப்பாடுகளை எதிர்கொள்கின்றன. கோவிட் கட்டுப்பாடுகளுக்கு முந்தைய சாதாரண நிலைமையை ஊடகவியலாளர்கள் எதிர்பார்த்தனர். இது சட்டப்பூர்வமான உரிமை மற்றும் நியாயமான கோரிக்கைதான். ஆனால், அந்த கோரிக்கை ஏற்கப்படவில்லை. எதிர்காலத்திலும் நாடாளுமன்ற செய்தி சேகரிப்புக்கான அணுகல் எளிதாக இருக்காது என்ற எண்ணத்திற்கு ஊடகவியலாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
எனவே, இனிமேலும் ஆலோசனைக் குழுவில் பணியாற்றுவதற்கான அர்த்தமுள்ள நோக்கம் எதுவும் எனக்கு இருப்பதாக தெரியவில்லை” என்று ஆனந்த் பகைத்கர் குறிப்பிட்டுள்ளார். மாநிலங்களவையின் ஊடக ஆலோசனைக் குழு மாநிலங்களவைத் தலைவரால் அமைக்கப்பட்ட ஒன்றாகும். மாநிலங்களவையின் பிரஸ் கேலரியில் ஊடக நிறுவனங்களை அனுமதிப்பது தொடர்பாக மாநிலங்களவை செயலகத்திற்கு ஆலோசனைகளை வழங்குவதே இந்தக் குழுவின் முதன்மை செயல்பாடு ஆகும். இதன் செயலாளர்தான் தற்போது ராஜினாமா செய்துள்ளார். கொரோனா பரவலைக் காரணம் காட்டி நாடாளுமன்றத்தில் செய்தி சேகரிப்புக்கு ஊடகவியலாளர்கள் மிகக் குறைவான எண்ணிக்கையிலேயே அனுமதிக்கப்படுவது குறித்து, ஏற்கெனவே ‘பிரஸ் கிளப் ஆப் இந்தியா’ உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்து வந்தனர். போராட்டங்களிலும் அவர்கள் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.