states

img

மாநிலங்களின் ஒப்புதலைத் தவிர்க்க சூழ்ச்சி

“அரசியலமைப்புத் திருத்தங்களுக்கு  50 சதவிகித மாநிலங்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும்” என்பதை பி.எஸ். சவுகான் தலைமையிலான  21-ஆவது சட்ட ஆணையம் சுட்டிக்காட்டி இருந்தது.

புதுதில்லி, செப். 28 - ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ முறை தொடர்பான அரசியலமைப்புத் திருத்தங்களுக்கு மாநிலங்களின் ஒப்பு தல் அவசியம் என்ற நிலையில், அவ்வாறு மாநிலங்களின் ஒப்புதலை பெறாமலேயே ‘ஒரே நாடு, ஒரே  தேர்தல்’ திட்டத்தை நடைமுறைப் படுத்தும் புதிய சூழ்ச்சியை ஒன்றிய பாஜக அரசு கையில் எடுத்துள்ளது. இதற்காக, 22-ஆவது சட்ட ஆணை யத்தின் பரிந்துரையை ஒரு சட்டப்படி யான காரணமாகக் காட்டவும் திட்ட மிட்டுள்ளது. ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ தொடர்பான அரசியலமைப்புத் திருத்தங்களுக்கு, மாநிலங்களின் ஒப்புதல் தேவையில்லை என்று 22-வது  சட்ட ஆணையம் விரைவில் தனது பரிந்துரை அளிக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிபர் ஆட்சி முறைக்கான ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சி நிரல்

இந்திய நாட்டை அதிபர் ஆட்சி எனும் ஒற்றையாட்சி முறையை நோக்கி நகர்த்தும், ஆர்எஸ்எஸ் அமைப்பின் அர சியல் நிகழ்ச்சி நிரலின் ஒருபகுதியாக, ‘ஒரே நாடு; ஒரே தேர்தல் திட்டத்தை’ ஒன்றிய பாஜக அரசு கையில் எடுத்துள் ளது. 2024 தேர்தல் முடிவுகள் தங்களுக்கு சாதகமாக இருக்காது என்று கருதும் பாஜக, ‘ஒரே நாடு ஒரே தேர்தல் திட்ட த்தை’ அமல்படுத்த இதுதான் சரியான நேரம் என்று கணக்குப் போடுகிறது. அதுதொடர்பான வேலைகளையும் மிகவேகமாக செய்து வருகிறது.

ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு

குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் கடந்த  செப்டம்பர் 2 அன்று உயர்நிலைக் குழு  ஒன்றை அமைத்து, அதில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சட்டத் துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், காங்கிரஸ் மூத்தத் தலைவர்  ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மாநிலங்கள வை முன்னாள் தலைவர் குலாம் நபி  ஆசாத் 15-ஆவது நிதி ஆணையத்தின் முன்னாள் தலைவர் என்.கே. சிங்,  மக்களவை முன்னாள் பொதுச்செய லாளர் சுபாஷ் சி காஷ்யப், மூத்த வழக்க றிஞர் ஹரிஷ் சால்வே, முன்னாள் தலைமை லஞ்ச ஒழிப்பு ஆணையர் சஞ்சய் கோத்தாரி ஆகியோரை உறுப் பினர்களாக நியமித்தது. “மக்களவைக்கும், மாநில சட்ட மன்றப் பேரவைகள், ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்துவது எவ்வாறு, அதற்குத் தேவையான சட்டரீதியான மற்றும் அரசமைப்புச்சட்டத்தின் கீழ்  மேற்கொள்ளப்பட வேண்டிய நட வடிக்கைகள் என்ன?” என்பதைப் பரிந்துரைப்பதே இந்தக் குழுவிற்கு அளிக்கப்பட்ட பணியாகும். அதன்படி, குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழுவின் முதல் கூட்டம் செப்டம்பர் 23 அன்று தில்லி யில் நடைபெற்றது. சுமார் 2 மணி நேரம் நீடித்த இந்தக் கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை கள் நடத்தப்பட்டன. 

சாத்தியமில்லை என்று கூறிய 21-ஆவது சட்ட ஆணையம்

கடந்த 2018-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், ஓய்வுபெற்ற நீதிபதி பி.எஸ். சவுகான் தலைமையிலான இந்திய சட்ட ஆணையம் (LCI) ஒரே நேரத் தில் தேர்தல்களை நடத்துவது குறித்த வரைவு அறிக்கையை வெளியிட்டது.  இதில், “தற்போதுள்ள அரசிய லமைப்பு மற்றும் சட்ட விதிகள் அடிப்படையில், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது சாத்தியமில்லை” என்று தெரிவித்திருந்தது. நாடாளுமன்றத்தின் ஆயுட்காலம் அல்லது ஆட்சிக் காலம் குறித்த அரசி யலமைப்புச் சட்டத்தின் 83-ஆவது பிரிவு, மக்களவையைக் கலைப்பது தொடர்பான 85-ஆவது பிரிவு, மாநில சட்டமன்றங்கள் தொடர்பான 172- ஆவது பிரிவு, மாநில சட்டமன்றங் களைக் கலைப்பது தொடர்பான 174- ஆவது பிரிவு, மாநிலத்தில் அரசிய லமைப்புச் சட்ட இயந்திரம் தோல்வி யடைந்தது என்று கூறும் 356-ஆவது பிரிவு ஆகியவற்றில் திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும்; இவை  மட்டுமல்லாமல் மக்கள் பிரதிநிதித்து வச் சட்டம் மற்றும் இதர விதிகளிலும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற நிலையில், இந்த “அரசியலமைப்புத் திருத்தங்களுக்கு 50 சதவிகித மாநிலங்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும்” என்பதையும் பி.எஸ். சவுகான் தலைமையிலான 21- ஆவது சட்ட ஆணையம் சுட்டிக்காட்டி இருந்தது.

ஒன்றிய அரசுக்கு தடையான சட்டவிதிகள்

எதிர்க்கட்சிகள் ஆளும் பல மாநி லங்கள், ஒரே நாடு, ஒரே தேர்தல் முறை க்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலை யில், 50 சதவிகித மாநிலங்களின் ஒப்புத லை பெறுவது எவ்வாறு? மாநிலங் களின் ஒப்புதலைக் கட்டாயமாகப் பெற்றுத்தான் ஆக வேண்டுமா? என்ற கேள்விகள் ராம்நாத் கோவிந்த் குழுவுக்கு ஏற்பட்டது.  அதனடிப்படையில் இதுகுறித்து ஒன்றிய சட்ட ஆணையம், தலைமை தேர்தல் ஆணையம், அரசியல் கட்சி களின் கருத்துகளைக் கேட்பது என்றும் ராம்நாத் கோவிந்த் குழு முடிவு செய்தது.

அரசுக்கு ‘உதவி’ செய்யும் 22-ஆவது சட்ட ஆணையம்

இந்நிலையில்தான், ‘ஒரே நாடு ஒரே தேர்தலுக்கான’ சாத்தியக் கூறு களை ஆராய்ந்து வரும் 22-ஆவது சட்ட ஆணையம் விரைவில் அறிக்கை அளிக் கும் என்றும், அதில், “’ஒரே நாடு ஒரே தேர்தல்’ நடைமுறையைக் கொண்டு வர, அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும்” என்றாலும், “இந்த திருத்தங் களுக்கு மாநிலங்களின் ஒப்புதல் தேவையில்லை” என்று பரிந்துரைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி யுள்ளன. மேலும், ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ முறை 2024-ஆம் ஆண்டிற்கு வாய்ப்பில்லை, 2029-ஆம் ஆண்டு கொண்டு வரப்படலாம் என்றும் தெரி வித்திருப்பதாக கூறப்படுகிறது. ஒன்றிய பாஜக அரசின் எண்ணத் தோடு இணைந்து செல்லும் இந்த பரிந்துரை பாஜக-வின் திட்டத்திற்கு உடந்தையாக இருக்கும் என்றும், இத னை வைத்து ஒரே நாடு ஒரே தேர்த லுக்கு முன்னிருந்த தடையை ஒன்றிய அரசு குறுக்கு வழியில் கடந்து செல்லும் என்றும் கூறப்படுகிறது. 22-ஆவது சட்ட ஆணையம் பிப்ரவரி 2020-இல் மூன்று ஆண்டுகளுக்கு அமைக்கப்பட்டது. எனினும் ஆணை யத்திற்கான தலைவரை (கர்நாடக உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி) 2022 நவம்பரில்தான் ஒன்றிய பாஜக அரசு நியமித்தது. 2023 பிப்ரவரியில், ஆணை யத்தின் பதவிக்காலம் முடிவடைய இருந்த நிலையில், அதன் காலத்தை 2024 ஆகஸ்ட் 31 வரை நீட்டித்து உத்தர விட்டது குறிப்பிடத்தக்கது.