states

img

லக்கிம்பூர் விவசாயிகள் கொலை ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவியிலிருந்து நீக்கிடுக!

பதவியில் உள்ள உச்சநீதிமன்ற நீதிபதிகளைக் கொண்டு விசாரணை நடத்துக: குடியரசுத் தலைவரிடம் காங்கிரஸ் குழு நேரில் வலியுறுத்தல் 

புதுதில்லி,அக்.13-   உத்தரப்பிரதேச மாநிலம் லக்‍கிம்பூரில் விவசாயிகள் கொல்லப்பட்ட விவகாரத்தில் பதவியில் உள்ள உச்சநீதிமன்ற நீதிபதிகளைக் கொண்டு விசாரணை நடத்தக்கோரி  காங்கிரஸ் துணைத் தலைவர்  ராகுல்காந்தி எம்.பி. தலைமையில் மூத்த காங்கிரஸ் தலைவர்கள்  குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் புதனன்று மனு அளித்து வலியுறுத்தினர். உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரியில் ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அப்போது, அவ்வழியே காரில் வந்த ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா வின் மகன் ஆசிஷ் மிஸ்ரா விவசாயிகள் மீது காரை ஏற்றியதில் 2 பேர் கொல்லப்பட்டனர்.  பின்னர் மாநில பாஜக அரசின் காவல்துறையினர் விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 4 விவசாயிகள் உட்பட 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர். விவசாயிகள் கொல்லப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங் களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.ஒன்றிய அமைச்சர் மற்றும் அவரது மகன் உள்பட சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யக்கோரி நாடு முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், மாணவர் ,வாலிபர் ,மாதர் அமைப்புகள் போராட்டங்களை நடத்தின.

இதனைத்தொடர்ந்து  இந்த சம்பவத்தில் ஆசிஷ் மிஸ்ரா மீது கொலை வழக்கு பதிவு  செய்யப்பட்டு, கைதாகி,சிறையில் அடைக்கப் பட்டுள்ளார்.  இந்நிலையில், லக்‍கிம்பூர் விவசாயிகள் கொலையில்  நியாயமான விசாரணை நடத்தி  நடவடிக்‍கை எடுக்‍கக்‍கோரி குடியரசுத் தலை வர் ராம்நாத் கோவிந்த்தை காங்கிரஸ் துணைத்  தலைவர்  ராகுல்காந்தி எம்.பி. தலைமையில், மாநிலங்களவை காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி, ப்ரியங்கா காந்தி, ஏ.கே.அந்தோணி, குலாம்நபி ஆசாத், கே.சி.வேணுகோபால் ஆகியோர் அக்டோபர் 13 அன்று நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது அவர்கள் லக்‍கிம்பூர் சம்பவத்தில் சுயேட்சையான நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவை  உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். பின்னர் மல்லிகார்ஜுன் கார்கே செய்தி யாளர்களிடம் கூறுகையில்,  லக்கிம்பூர் சம்பவம் தொடர்பாக நாங்கள் ஜனாதிபதியிடம் அனைத்து  விவரங்களையும் கொடுத்தோம். பதவியில் உள்ள நீதிபதிகளால் சுயேட்சையான விசார ணை நடத்தப்பட வேண்டும் என்றும்,

ஒன்றிய அமைச்சர்  அஜய் மிஸ்ரா பதவி விலக வேண்டும் அல்லது பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும். அப்போதுதான் நீதி கிடைக்கும் என்று வலியுறுத்தியுள்ளோம் என்று தெரிவித்தார். பின்னர் ராகுல்காந்தி,  பிரியங்கா காந்தி  கூறுகையில், லக்கிம்பூர் சம்பவம்  குறித்து   அரசாங்கத்துடன் இன்று (வியாழன்) விவாதிப்ப தாக குடியரசுத் தலைவர் எங்களுக்கு உறுதி யளித்தார். குற்றம் சாட்டப்பட்டவரின் தந்தை ஒன்றிய அமைச்சராக இருப்பதால்,  நியாயமான விசாரணை சாத்தியமில்லை என்பதால் அந்த பதவியில் இருந்து அவர் நீக்கப்பட வேண்டும் என்று நாங்கள் குடியரசுத் தலைவரிடம்  கூறினோம். அதேபோல், உச்ச நீதிமன்றத்தின் பதவியில் உள்ள 2 நீதிபதிகளால் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும்  கோரிக்கை வைத்துள்ளோம் என்று கூறினர்.