states

img

சர்ச்சையைக் கிளப்பும் 3,500 கி.மீ. ஜன் சூரஜ் பாத யாத்திரை

லக்னோ, அக். 7 - பிரசாந்த் கிஷோர் நடத்தி வரும் ஜன் சூரஜ் நடைப்பயணம், பாஜக-வுக்கு ஆதரவான செயல்பாடு என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன. பிரபல தேர்தல் வியூக வகுப்பாள ரான பிரசாந்த் கிஷோர், துவக்கத்தில் பிரதமர் மோடிக்கு தேர்தல் வேலை செய்தார். பின்னர், தில்லியில் அரவிந்த் கெஜ்ரிவால், ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி, பீகாரில் நிதிஷ் குமார், மேற்குவங்கத்தில் மம்தா ஆகி யோருக்கு பணியாற்றிய அவர், ஒரு  கட்டத்தில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சியில் இணைந்தார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக ஜக்கிய ஜனதாதளத்திலிருந்து விலகிய அவர், காங்கிரசோடு பேச்சுவார்த்தை நடத்தினார். அந்தக் கட்சியில் இணை வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலை யில், திடீரென காங்கிரசை கடுமை யாக விமர்சித்தார். காங்கிரசில் சேரப் போவது இல்லை என்றும் அறிவித்தார்.  பாஜக-வை எதிர்ப்பது போல காட்டிக் கொண்டாலும், பாஜக-வைக் காட்டி லும், சமீப காலமாக, எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை மிக மோசமாக கேலி செய்து வந்தார். இந்நிலையில்தான், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்று மை யாத்திரையை நடத்தி வரும் நேரத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல், தனது 3 ஆயிரத்து 500 கி.மீ.  தூரத்திற்கான ஜன் சூரஜ் பாதயாத்தி ரையை பிரசாந்த் கிஷோர் துவங்கி யுள்ளார். தனது சொந்த மாநிலமான பீகாரின் மேற்கு சம்பாரானிலுள்ள பிதிஹார்வாவிலிருந்து கிஷோர் துவங்கிய இந்த யாத்திரை எதிர்க்கட்சி களின் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.

பிரசாந்த் கிஷோரை, பீகார்  மாநில முதல்வர் நிதிஷ் குமார்  வெளிப்படையாகவே விமர்சித்துள் ளார். அக்டோபர் 3 அன்று பீகார் செய்தித் தாள்களில் பிரசாந்த் கிஷோர் கொடுத்த முதல் பக்க விளம்பரத்தை குறிப்பிட் டுள்ள நிதிஷ் குமார்,  “அரசியல் கட்சி கள் கூட இதுபோன்ற விளம்பரங்களை கொடுக்க முடியாது” என்று கூறி யுள்ளார். மேலும், இந்த விளம்பரத்தின் மீது  அமலாக்க இயக்குநரகம், சிபிஐ மற்றும் வருமான வரித்துறையினர் காட்டும் அலட்சியமும் தனக்கு ஆச்சரியமாக இருப்பதாக கூறும் பீகார் முதல்வர், பீகாரில் எதிர்கட்சியாக உள்ள பாஜக-வுடன் கிஷோருக்கு இருக்கும் மறைமுக புரிதல் குறித்து அதிர்ச்சியும் தெரிவித்துள்ளார். “அவர் கொடுக்கும் விளம்பரம் சந்தேகத்தை எழுப்புகிறது. மிகப் பெரிய அரசியல் கட்சிகள் கூட முழுப் பக்க விளம்பரம் போடுவதை பார்க்க  முடியவில்லை. ஆனால், பாத யாத்தி ரைக்காக இப்படி முதல் பக்க விளம் பரங்களைக் கொடுத்து பிரசாந்த் கிஷோர் அதிர்ச்சி அளிக்கிறார். வரு மான வரித் துறை, சிபிஐ,  அமலாக்க  இயக்குநரகம் என ஒன்றிய அரசு முகமைகள் இந்த செய்தித் தாள் விளம்பரங்களை கவனிக்க வில்லையா? இது வரை இந்த அமைப்பு கள் பாராமுகமாக இருப்பதன் காரணம் ஒன்றிய அரசை ஆள்பவர்களின் ஆதர வும் ஆசியும் பிரசாந்த் கிஷோருக்கு இருக்கிறது என்பதையே காட்டு கிறது” என்று நிதிஷ் குமார் குறிப் பிட்டுள்ளார். பிரச்சாரத்தைத் துவங்கிய பிரசாந்த்  கிஷோர், பீகாரில் 1990 முதல் எந்த  வளர்ச்சியும் இல்லை என்று கூறி யிருப்பதும் கண்டனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. “வளர்ச்சியைப் பொறுத்தவரை பிரசாந்த் கிஷோரின் நற்சான்றிதழ் மாநிலத்திற்குத் தேவையில்லை” என்றும், “நிதிஷ் குமாரின் தலைமை யில் பீகார் வேகமாக முன்னேறி வருகிறது” என்றும் ஜேடியு தலைவர் ராஜீவ் ரஞ்சன் சிங் சாடியுள்ளார். “ஜன் சூரஜ் யாத்திரையைப் பார்த்தால், பிரசாந்த் கிஷோர் பாஜக சார்பில் வேலை செய்வது போல தோன்று கிறது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

;