கொல்கத்தா, மே 17- ஒவ்வொரு கட்ட தேர்தலிலும் தேசிய ஜனநாயக கூட்டணியின் தோல்வி உறுதியாகி வருகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி தெரிவித்தார். தோல்வி பயத்தால், பிரதமர் நரேந்திர மோடி, தான் முதலில் கூறிய உத்தரவாதங்களைக் கைவிட்டு, தீவிர வகுப்புவாத அணிதிரட்டலுக்கு திரும்பியுள்ளார். அதுவும் பின்ன டைவு என்பதை உணர்ந்ததும் தான் சொன்ன விசயங்களை மறுத்தார் எனவும் யெச்சூரி குறிப்பிட்டார். மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்த யெச்சூரி, செய்தியாளர்கள் சந்திப்பில் மேலும் கூறியதாவது: தீவிர இந்து-முஸ்லிம் உணர்வைப் பயன்படுத்தி மக்களை பிளவுபடுத்தும் நடவடிக்கை தோல்வியைத் தழுவியது மோடியை யும், அமித்ஷாவையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி பெரும்பான்மை பெறும் என பல்வேறு தரப்பில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தேசிய ஜனநாயக கூட்டணி, மிகப்பெரும் வெற்றிபெறும் என முதலில் கூறியவர்கள் யாரும் இப்போது வாய்திறப்பதில்லை. கூட்டணிக்கு வெளியில் இருந்து இந்தியா கூட்ட ணிக்கு திரிணாமுல் ஆதரவு அளிக்கும் என்ற மம்தா பானர்ஜியின் வார்த்தைகள் அவரது இரட்டை வேடம் மீண்டும் தொடர்வதையே காட்டுகின்றன. குடியுரிமை திருத்தச் சட்டத்தை கடுமையாக எதிர்த்தவர், இப்போது அதை ஆதரிப்பது, அந்த கொள்கையின் ஒரு பகுதியாக உள்ளது எனவும் யெச்சூரி கூறினார்.