states

img

ஆங்கில எழுத்து அட்டவணையிலும் இந்துத்துவா..!

புதுதில்லி, ஜன. 15 - ஆங்கில எழுத்து அட்டவணையை (Alphabet chart), இந்திய மயமாக்குவதாக கூறி, புதிதாக ஒரு அட்டவணை தயாரித்து விஸ்வ ஹிந்து பரிசத் வெளியிட்டுள்ளது. ‘ஏ’ பார் ‘ஆப்பிள்’, ‘பி’ பார் ‘பால்’, ‘சி’ பார் ‘கேட்’ (A for Apple, B for Ball, C for Cat...) என்று இதுவரை குழந்தைகள் படித்துவந்த எழுத்து அட்டவணைக்குள் சூட்சமமாக தனது இந்துத்துவா அரசியலை திணித்துள்ளது. A பார் அம்பேத்கர், B பார் பகத் சிங் என்று நல்ல தலைவர்களை அறிமுகப்படுத்துகிறோம் பாருங்கள் என்பது போல ஆரம்பிக்கும் விஎச்பி-யின் இந்த புதிய அட்டவணை, மெல்ல மெல்ல C பார் சாணக்யா, D பார் தயானந்தா… K for அப்துல் கலாம், X பார் லக்ஸ்மன், W பார் வால்மீகி, Z பார் ஜூலேலால், Y பார் யோகா என்று நைசாக இந்துத்துவா அடையாளங்களை திணித்துள்ளது. இந்த புதிய விளக்கப்படத்தை தங்கள் அமைப்பின் கல்வித் துறையில் விஎச்பி உருவாக்கியுள்ளது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் விஎச்பி நேரடியாக நடத்தும் பள்ளிகளின் ஆங்கில பாடப்புத்தகங்களில் இந்த புதிய பெயர் விளக்கப்படம் இடம்பெறும் என்று கூறப்படுகிறது. கல்வியை காவிமயமாக்குவது சங்-பரிவாரங்களின் நீண்டகாலத் திட்டமாகும். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அதற்கான வேலையை அவர்கள் செய்து வருகின்றனர். 2014-இல் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு அதிகாரத்திற்கு வந்த பின், இந்தப் பணி வேகமெடுத்துள்ளது. அதனொரு பகுதியாகவே விஎச்பி இந்த ஆங்கில எழுத்து அட்டவணையை உருவாக்கி, பரப்பும் முயற்சியில் இறங்கியுள்ளது.