states

என்டிபிஎல் ஒப்பந்தத் தொழிலாளர்க்கு இடைக்கால நிவாரணம் வழங்க உத்தரவு

தூத்துக்குடி,நவ.19-  தூத்துக்குடி என்டிபிஎல்  அனல் மின் நிலைய ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்று சிஐடியு தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  தூத்துக்குடி  துறைமுக வளாகத்தில் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் என்டிபிஎல்  அனல்  நிலையம் இயங்கி வருகிறது. இம்மின் உற்பத்தி நிலையம் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறு வனம் 89 சதவீதம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் விநியோக கழகம் 11  சதவீதம் என இணைந்து கூட்டு நிறுவன மாக (என்டிபிஎல் ) செயலாற்றி வருகிறது. இம்மின் நிலையம் 10,000 கோடி திட்ட முதலீட்டில் அமைக்கப்பட்டு 2015 ஆம்  ஆண்டு முதல் செயலாற்றி வருகிறது. இந்நிறுவனத்தில் 1000 மெகா வாட்   மின் உற்பத்தி செய்யப்படுகிறது. தூத்துக்குடி யில் உள்ள படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார் த்திருந்த மக்களுக்கு  ஏமாற்றமே மிஞ்சியது.   ஒரு இளைஞருக்கு கூட நிரந்தர பணி வாய்ப்பு வழங்காமல் ,  நியமனம் செய்யாமல் 1200 க்கு மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களை கொண்டு என்டிபிஎல்  அனல் மின் நிலையம் இயங்கி வருகிறது.

என்எல்சி அனல் மின் நிலையத்தில் இருந்த 100 ஊழியர்கள் டெபுடேஷன் முறையில் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். ஒப்பந்தத் தொழிலாளர்கள் எந்தவித உரிமையும் இன்றி பணியாற்றி வரும் நிலையில் தூத்துக்குடி என்டிபிஎல்    அனல் மின் நிலையத்தில்  பணி புரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு என்எல்சி அனல் மின் நிலையத்தில் பணி புரியும் தொழிலாளர்களுக்கான சம்பளத்தை வழங்க வேண்டும் என்று கோரி சிஐடியு தொழிற்சங்கம் கடந்த 19.05.2019 அன்று வழக்கு தொடர்ந்தது.  ஒப்பந்தத் தொழிலாளர்களை மின் உற்பத்தியில் பணிக்கு அமர்த்தவில்லை என என்டிபிஎல் நிர்வாகம் வாதாடிய போது கடந்த 15.04.2021 அன்று துணைத் தலைமை தொழிலாளர் ஆணையர் சென்னையில் இருந்து நேரடியாக அதிரடி ஆய்வு செய்து கடந்த 30.04.2021 அன்று  என்டிபிஎல் அனல் மின்நிலையத்தில்  பணி புரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு என்எல்சி அனல் மின் நிலையத்தில் பணி புரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கான சம்பளத்தை வழங்க உத்தரவிட்டார். என்டிபிஎல்      நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில்  மேல் முறையீடு செய்தது.  மேல் முறையீட்டில் இடைக்கால நிவாரணமாக ரூ.100 தினசரி வழங்க w.p.no. 12039 of  2021 மூலம் உத்தரவு பிறப்பித்தது.  என்டிபிஎல்  நிர்வாகம் சென்னை உயர்நீதி மன்ற இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வில் இடைக்கால நிவாரணம் கொடுக்க முடியாது என தடை உத்தரவு பெற முயற்சித்தது.  

சென்னை உயர் நீதிமன்றம் தடை வழங்க மறுத்து, வழக்கு இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்நிலையில்   என்டிபிஎல்  அனல் மின் நிலைய  ஒப்பந்த தொழிலாளர்கள் தன்னெழுச்சியாக கடந்த 13.02.2023 முதல் வேலை நிறுத்தம் செய்தனர். பேச்சு வார்த்தையில் தினசரி அலவன்ஸ் என ரூ.82 வழங்க நிர்வாகம் ஏற்றுக்கொண்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. நீதிமன்ற தீர்ப்பு அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. நிர்வாகம் ஏற்றுக்கொண்டபடி அல வன்ஸ் ரூ.82 இதுவரை வழங்கவில்லை. இதனிடையே 15.11.2023 அன்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முன்னிலையில் நடைபெற்ற வழக்கு விசாரணையில் என்டிபிஎல் நிர்வாகத்தின் மேல் முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டு கடந்த 01.06.2021 முதல் இடைக்கால நிவாரணமாக தினசரி ரூ.100 ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வழங்க சென்னை உயர்நீதிமன்ற பெஞ்சு தீர்ப்பு W.A.No.1667 of 2021 மூலம் உத்தரவிட்டுள்ளது. இதன் படி கடந்த 01.06.2021 முதல் 28 மாதங்களுக்கு மாதம் ஒன்றிற்கு ரூ.3 ஆயிரம் வீதம் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். ஒவ்வொரு ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் ரூ.83 ஆயிரம் அரியர்ஸ் வழங்க வேண்டும். மேலும் 01.11.2023 முதல் நாளொன்றுக்கு ரூ.100 வீதம் மேல் முறையீடு வழக்கு முடியும் வரை இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். கடந்த நான்கரை ஆண்டுகளாக  சிஐடியு நடத்திய  தொடர் வழக்கில் தொழி லாளர்களுக்கு கிடைத்த மகத்தான வெற்றி இது என்று சிஐடியு தமிழ்நாடு மின்  ஊழியர் மத்திய அமைப்பின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் எஸ். அப்பாத் துரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.