புதுதில்லி, அக்.19- அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த ஜாமீன் மனுவை அக்டோபர் 30-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது. சட்டவிரோத பணப் பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் பதிவான வழக்கில் அமைச்சர் செந்தில்பாலாஜியை கடந்த ஜூன் 14 அன்று மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இந்த வழக்கில் அவர் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவை சென்னை மாவட்ட முதன்மை செசன்சு நீதிமன்றம் இரு முறை தள்ளுபடி செய்தது. இதைத்தொடர்ந்து, உடல் நலம் பாதிக்கப்பட்டு உள்ளதால், தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், செந்தில்பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். மருத்துவ காரணங்களைக் கூறி ஜாமீன் கோருவதை ஏற்க முடியாது என அவர் கூறியுள்ளார். இதையடுத்து செந்தில் பாலாஜியின் வழக்கறிஞர் முகுல் ரோத்கி, உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்தார். மனுவில், இந்த வழக்கை அவசர வழக்காக எடுக்கவேண்டுமெனக் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தலைமையிலான அமர்வு அக்டோபர் 30 அன்று விசாரிப்பதாகத் தெரிவித்து, உரிய அமர்வு முன்பு பட்டியலிட உத்தரவிட்டுள்ளது.