states

இது... போனஸ் அல்ல ஒப்பந்த ஊதியம் - எஸ். சாம்பசிவன்

பண்டிகை விசேஷ காலங்களை முன்னிட்டு, ரயில்வே நிலையங் களுக்கு வருகின்ற பயணிகளின் வரு கையை கட்டுப்படுத்திட தென்னக ரயில்வேயி லுள்ள எட்டு ரயில்வே ஸ்டேஷன்களுக்கு நடைமேடை கட்டணம் ரூ.10 ல் இருந்து ரூ.20 ஆக ஜனவரி வரை உயர்த்தியுள்ளது நிர்வாகம். இதன் மூலம் நடைமேடை கட்டணம் என்ற பெயரில் ஒரு வசூல் வேட்டையை நடத்திட தென்னக ரயில்வே திட்டமிட்டுள்ளது.  ஏற்கனவே, பாசஞ்சராக ஓடிக் கொண்டிருந்த லோக்கல் வண்டிகளை ஒரு சில நிறுத்தங்களை நிறுத்தி விட்டு பாசஞ்சர் எக்ஸ்பிரஸ், லோக்கல் எக்ஸ்பிரஸ் என்ற பெயர் மாற்றத்தோடு அதிக  கட்டணம் வசூலிக்க திட்டமிட்டு எந்த அறிவிப்பு மின்றி இரண்டு மடங்கு கட்டணத்தை எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் உயர்த்தி வருமானத்தை பெருக்கி யுள்ளது ரயில்வே நிர்வாகம். இது தவிர பதிவில்லாத பெட்டிகளை எடுத்து விட்டு அல்லது எண்ணிக்கைகளை குறைத்து விட்டு படுக்கை வசதி, ஏசி பெட்டிகளையும் அதிகமாக இணைத்து வருமானத்தை இரட்டிப்பாக்கியுள்ளது திட்டமிட்ட ஏற்பாடாகும்.

இதன் மூலமாக 2021-22ல் மொத்த வருமானமாக 2 லட்சத்து 2 ஆயிரம் கோடி அபரிமிதமான வருமானத்தை மக்களிடமிருந்து ஈட்டியுள்ளது நிர்வாகம். ஏற்கனவே, 3 லட்சம் காலியிடங்களை பூர்த்தி செய்யாமலும், ஓய்வு பெறும் காலி யிடங்களை நிரப்பாமலும், கருணை வேலை களை நிரப்பாமல் தாமதம் செய்து வருவ தாலும் ஊதியங்கள்,அலவன்ஸ்கள், பஞ்சப்படி கள், போனஸ் மற்றும் இதர நிர்வாக பொரு ளாதார செலவினங்கள் மீதமாகி பல லட்சம்கோடிகள் நிர்வாகத்திடம் நிரம்பி வழிகிறது. ஆட்குறைப்பினாலும், காலி இடங்கள்  நிரப்பப்படாமலும் ஊழியர்கள் தலையில் ஏற்றப்பட்ட வேலைப்பளுவினாலும் முதுகு ஒடிந்த நிலையில் ஊழியர்கள் நிம்மதி யில்லாமல், ஓய்வில்லா மல் கட்டாயமாக பணி செய்யும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். வேறு வழியின்றி 60 வயது வரை வேலை பார்க்க வேண்டியது வருகிறது. பார்க்க முடியாமல் பலர் வேலையை விட்டு வெளியேறி விட்டார்கள். ஊழியர்கள் பற்றாக்குறைவினால் மட்டும் பல ஆயிரம் கோடி பணம் மீதமாகி ஒரு பக்கம் குவிந்து வருகின்றது. இவையும் நிர்வாகத்திற்கு வருமானமாக கணக்கிடப்படுகிறது. 

சரக்கு போக்குவரத்து மூலமாக ஆண்டுக் காண்டு வருமானம் பெருகி வருகின்றது. கொரோனா காலங்களில் பயணிகள் வண்டிகள்  ஓடாத போது கூட்ஸ் மூலம் மட்டும் போக்குவரத்து நடந்து பல ஆயிரம் கோடி வருமானம் கிடைத்தது. கொரோனாவிற்கு பிறகு பயணிகள் வண்டிகள் அதிக எக்ஸ்பிரஸ் கட்டணத்துடன் ஓடுவதால் மக்களிடமிருந்து அதுவும் நடுத்தர, வசதி படைத்தவர்கள் மூலம் மட்டும் அதிக வருமானம் வருகின்றது. உதாரணமாக 2016-17 ல் 1109 மில்லியன் டன் சரக்கு போக்குவரத்து நடந்ததோடு பயணிகள் போக்குவரத்தால் ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 589 கோடி வருவாயும் கிடைத்துள்ளது. இப்படி பலவழிகளில் பணம் ரயில்வேயில் கொட்டோ கொட்டுவென்று கொட்டி னாலும் வரவு செலவு கணக்கு காண்பிக்கப்படுவ தில்லை.ரயில்வே பட்ஜெட் இல்லாமல் அனைத்தும் பொது பட்ஜெட்டில் இணைக்கப்படு கிறது. உண்மையான உற்பத்தி மறைக்கப்படு வதால் உண்மையான போனஸை நம்மால்  காண முடிவதில்லை .நிர்வாகமும்  உண்மை யான போனஸை கொடுக்க தயாராக இல்லை. ஊழியர்களின் உழைப்பினால் ஒன்றிய அரசின் கஜானா பல வழிகளில் நிரம்பி வழிகிறது. ஆனாலும் இந்த வருடமாவது போனஸில் மாற்றம் வரும் என்ற நம்பிக்கையில் ஊழியர்கள் இருந்தார்கள். சீலிங்கில்லாத போனஸ் மற்றும், அதிக நாட்கள் போனஸ் என்ற ஆவலோடு போனஸ் அறிவிப்புக்காக காத்திருந்தார்கள். செப்டம்பர் 28 அமைச்சரவைக் கூட்டத்தில் நல்ல செய்தி வரும் என்று எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அகவிலைப்படி 4 சதம் ஜூலை 1 முதல் உயர்வு  என்ற அறிவிப்பு மட்டுமே வந்து ஊழியர்களை ஏமாற்றியது ஒன்றிய அரசு. போனஸ் அறிவிப்பை வேண்டுமென்றே நிறுத்தி யும் வைத்தார்கள். நல்ல செய்திக்காக ஒன்றிய அரசு மற்றும் ரயில்வே ஊழியர்கள் டிவி முன்பு கவனம் செலுத்திக் கொண்டிருந்தார். பெடரேசன்களும் டிவி செய்திக்காக காத்திருந் தன. போனஸ் அறிவிப்பு வராததினால் டிஆர்இயூ செப். 29-30 களில்  ஆர்ப்பாட்டங்களை ரயில்  நிலையங்களிலும் அலுவலகங்களிலும் நடத்தினார்கள். 

 தென்னக ரயில்வேயில் மட்டும் டிஆர்இயூ  தலைமையில் கண்டன இயக்கம் நடந்தது. மற்ற ரயில்வேக்களில் எந்த சத்தமும் இல்லை. வடக்கே செப்.3ந்தேதி இயக்கம் நடத்த முடிவெடுத்தனர். பெடரேசன்கள் மஸ்தூர் சங் யூனியன்கள் எந்த போராட்டத்தையும் நடத்தவோ,கண்டன அறிக்கை வெளியிடவோ செய்யவில்லை. எப்போதுமே போனஸ் தொடர்பாக  எந்த  கோரிக்கைகளையும் பெடரேஷன்கள் வைப்பதோ, கேட்பதோ,நிர்பந்திப்பதோ கிடை யாது. நிர்வாகம் தருவதை சிரமேற்கொண்டு வாங்கி தங்களது சாதனைகளாக தம்பட்டம் அடிப்பது மட்டுமே நடப்பதுண்டு. ஊடகங்கள் மூலமாக தான் போனஸ் செய்திகளை பெட ரேசன்களும் தெரிந்து கொள்ளும். போன ஸிற்கான எந்த கோரிக்கைகளும் பெடரேசன்கள் மூலமாக வராததினால் நிர்வாகமே தனது விருப்பத்திற்கு போனஸ் கொடுப்பது என்பது பல வருடங்களாக நடைமுறையாகி விட்டது.  2009 -10 ல் தான் போனஸ் 77 நாட்கள் கொடுக்க துவங்கினார்கள். 2010-11 நிதியாண்டில் 78 நாட்கள் போனஸிற்கு முதலில் அடித்தளம் போடப்பட்டது. அது முதல் 2022 வரை அது தொடர்ந்து நீடித்து வருகிறது. 2014 ல் மோடியின் பாஜக அரசு பதவிக்கு வந்த எட்டு வருடங்களாக ரயில்வேயில் தனியார்மயம் ,ரயில்கள் விற்பனை, ஆட்குறைப்பு, வேலைப்பளு, உரிமைகள் பறிப்பு, கட்டண உயர்வு என மக்கள் விரோத,தொழிலாளர் விரோத கொள்ளைகளை அமலாக்கி வரும்போது அதை பெடரேசன்கள் எதிர்த்து நாடு தழுவிய இயக்கம் நடத்தவோ எதையும் செய்யாமல் வாய்மூடி மவுனியாக இருந்து வருவதினால் 7வது ஊதியக்குழு பரிந்துரைகள், அலவன்ஸ், எட்டுமணி நேர வேலை, இரவுநேரபடி, 18 மாத பஞ்சப்படி, பேப்பர் பாஸ், பதவி உயர்வுகள் என பலவற்றை படிப்படியாக இழந்து வருகிறோம். இப்போது போனஸையும் இழந்து ஒப்பந்த போனஸிற்கு வழி வகுத்து விட்டார்கள். 

கடந்த 11 வருடங்களாக உற்பத்தி அடிப்  படையில் உண்மையான போனஸ் சீலிங்  இல்லாத போனஸ் வழங்கப்படாததினா லும், அதற்கான போராட்டங்கள் வலுவாக நடத்தப்படாததினாலும் போனஸ் கொள்கை, போனஸ் கணக்கீட்டு முறை, போனஸ் சட்டங்கள் அனைத்தும் தவிடு பொடியாகி விட்டன. எவ்வளவு லாபம் வந்தாலும், வருமானம் வந்தாலும் 78 நாட்களும் ரூ.17951 போனஸூம் தான் என்ற முத்திரை குத்தப்பட்டு விட்டது. இதை எப்படி போனஸ் என்று சொல்ல முடியும்? ஒரே மாதிரியான ஊதியத்தை 12 வருடமாக கொடுத்து வருவதால் அது போனஸாக முடியுமா? இது போனஸ் பெயரில் மிகப்பெரிய சுரண்டல் அல்லவா?இந்த நிரந்தர போனஸ் தொகையை தொகுப்பூதியம் அல்லது மதிப்பூதியம் என்று சொல்லலாமா? போனஸ் கொள்கை, போனஸ் கணக்கீட்டை 12 வருசமாக சமாதி கட்டிய பிறகு எப்படி அது போனஸாகும். போனஸ் காலங்களில் 12 வருசமாக ஒரு குறிப்பிட்ட தொகையான ரூ.17951 ஐ  ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு வழங்கி  வருவதால் அது உண்மையான போனஸாக எப்படி எடுத்துக் கொள்ள முடியும்? வருடம் ஒரு முறை ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஒப்பந்த ஊதியமாக தான் பார்க்க முடியுமே தவிர அது போனஸாகாது. நாம் அதை போனஸ் என்றழைத்தாலும், வரவேற்றாலும் நிர்வாகம் தரும் போனஸாகாது. நிர்வாகத்திற்கும், ஊழி யர்களுக்கும் இடையே எழுதப்படாத ஒரு ஒப்பந்த ஊதியமாக தான் பார்க்க முடியும். 60 ஆயி ரத்துக்கு மேலாக நமக்கு கிடைக்க வேண்டிய போனஸை ரூ.17951 ஆக சுருக்கி போனஸ் என்ற  பெயரில் மோடி அரசால் நாம் சுரண்டப்படு கிறோம். மறைமுகமாக ஒரு ஒப்பந்த ஊதியத்தை 12 வருசமாக போனஸ் என்ற பெயரில் மறைத்து கொடுக்கின்ற மோசடிக்கு எதிராக வலுவான ஒன்றுபட்ட போராட்டத்தை நாம் எதிர்காலத்தில் நடத்த திட்டமிடுவோம்.  

;