தமிழக அரசே தலையிடுக!
இந்தியா யமஹா தொழிற்சாலையில் 2018 ஆம் ஆண்டு தொழிலாளர்கள் முறைப்படி தொழிற்சங்கம் அமைத்து அது பதிவு செய்யப்பட்டது. ‘இந்தியா யமஹா தொழிலாளர் சங்கம்’ என்ற இந்த சங்கத்தை அழிப்பதற்காக பல அடக்குமுறை நடவடிக்கைகளையும், தொழிலாளர் விரோத நடவடிக்கைகளையும், நிர்வாகம் எடுத்து, இரண்டு தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்தது. தொழிற்சங்கத்தை அங்கீகரிக்க வேண்டுமென்றும், வேலை நீக்கம் செய்யப்பட்ட இரண்டு தொழிலாளருக்கும் மீண்டும் வேலை வழங்கவேண்டும் என்றும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். 55 நாட்கள் நீடித்த இந்த வேலை நிறுத்தம் தொழிலாளர்துறை மற்றும் மாவட்ட ஆட்சியர் முன்பு ஏற்பட்ட உடன்பாட்டில் முடிவிற்கு வந்தது. பழிவாங்கப்பட்ட இரண்டு தொழிலாளருக்கும் வேலை வழங்கப்பட்டது. சங்கம் அங்கீகரிக்கப்பட்டது. சங்க நிர்வாகிகளோடு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு ஓர் ஒப்பந்தமும் செய்யப்பட்டது. இந்த நிர்வாகிகள் நிர்வாகத்தின் கையாட்களாக மாறி பல சலுகைகளையும் அனுபவித்துக் கொண்டு தொழிலாளர் ஒப்புதல் இல்லாமல் தற்போது போடப்பட்ட இரண்டாவது ஒப்பந்தத்தால் தொழிலாளர்களின் கோபத்திற்கு ஆளாகியிருந்தனர்.
இந்த சங்கத்திற்கு சங்கவிதிகளின்படி பேரவை நடத்தப்பட்டு நிர்வாகிகளுக்கான தேர்தலும் நடத்தப்பட்டது. இந்தத் தேர்தலில் ஏற்கனவே ஒப்பந்தம் போட்ட நிர்வாகிகள், தொழிலாளர்கள் மத்தியில் இருந்த அதிருப்தி காரணமாக போட்டியிடவே இல்லை. புதிய நிர்வாகிகள் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களோடு அடுத்த ஒப்பந்தத்தை பேசவேண்டிய நிர்வாகம் பேச மறுத்து, நிர்வாகத்தின் சொல்படி துரோக ஒப்பந்தம் செய்யத் தயாராக இருந்த பழைய நிர்வாகிகளோடுதான் பேசுவோம் என்று கூறியது. இது தொழிலாளர் விரோத நடவடிக்கையாகும். பழைய நிர்வாகிகள் தாங்கள்தான் இந்தியா யமஹா சங்கத்தில் பெரும்பான்மை பெற்ற நிர்வாகிகள் என்று அறிவிக்கக்கோரி தொழிலாளர்சங்க பதிவாளரிடம் விண்ணப்பித்தனர். அதை நிரூபிக்க அவர்களால் சான்றுகள் தரமுடியவில்லை. மாறாக புதிய நிர்வாகிகள் எல்லாச் சான்றுகளையும் சமர்ப்பித்தனர். இதில் தங்களுக்கு சாதகமாக முடிவு வராது என்று தெரிந்து கொண்டு விண்ணப்பத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்டனர். இதற்கிடையில் இவர்களோடு பேச்சுவார்த்தை நடத்த தடை விதித்து உரிமையியல் நீதிமன்றமும் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இழிவான போக்கு
உடனே நிர்வாகத்தின் துணையோடு போட்டி சங்கம் அமைத்து (சுதந்திர இந்தியா யமஹா தொழிலாளர் சங்கம்) ஒரு சில நாட்களிலேயே வியக்கத்தக்க முறையில் தொழிலாளர் துறையில் பதிவு பெற்றனர். அந்த சங்கத்தை அங்கீகரிக்கப்பட்ட சங்கம் என்று உடனே அறிவித்து அவர்களோடு நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தியது. ஒரு சங்கம் செயல்படும் இடத்தில் போட்டிச் சங்கம் அமைக்க நிர்வாகமே துணை நிற்பதும், ஊக்குவிப்பதும் நிரந்தரமாக தொழில் உறவையும், தொழிலமைதியையும் குலைத்துவிடும். அதுதான் இப்போது நடக்கிறது. போட்டிச் சங்கத்தோடு பேசிய அடிப்படையில் என்றுகூறி ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டது. இந்த ஊதிய உயர்வு போட்டி சங்கத்தை ஏற்பவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்றும் நிர்வாகம் கூறியது. இத்தகைய இழிவான தொழிற்சங்க விரோதப் போக்கை எதிர்த்தும், இந்தியா யமஹா தொழிலாளர் சங்கத்தோடு பெரும்பான்மைத் தொழிலாளர்கள் பேசி ஒப்பந்தம் போட வேண்டும் என்றும் 11.10.2022 லிருந்து உள்ளிருப்பு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். வேலை நிறுத்தம் நடந்து கொண்டிருக்கும் போதே போனஸ், கருணைத் தொகை என்று ஒரு தொகையை அறிவித்து அந்தத் தொகை போட்டி சங்கத்தை ஏற்பவர்களுக்குத்தான் வழங்கப்படும் என்றும் நிர்வாகம் அறிவிக்கை செய்தது. இதுவும் மிக மோசமான பாரபட்சமும், தொழிலாளர் விரோத நடவடிக்கையுமாகும். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், துணை தொழிலாளர் ஆணையர், ஆகியோர் முன்னிலையில் இரண்டு சுற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அவர்கள் கூறிய அறிவுரையையும், முடிவையும் நிர்வாகம் ஏற்கவில்லை. எனவே, உள்ளிருப்பு வேலைநிறுத்தம் தொடருகிறது.
சங்கம் கோருவது என்ன?
இந்தியா யமஹா தொழிலாளர் சங்கத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளோடு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இந்தச் சங்கம் சிறுபான்மை என்று கருதினால் மறைமுக வாக்கெடுப்பு நடத்தி, எந்த சங்கம் பெரும்பான்மைச் சங்கம் என்று தீர்மானிக்க வேண்டும். பாரபட்சமின்றி எல்லோருக்கும் போனஸ், கருணைத்தொகை உள்ளிட்ட பணப்பலன்களை வழங்கவேண்டும். பழிவாங்கும் நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும். ஒரு தொழிலுக்கு ஒரு சங்கம் என்பதை உறுதி செய்து தொழிலமைதியைக் காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வரலாறு என்ன?
1965லிருந்து 1973 காலகட்டத்தில் சென்னையைச் சுற்றியிருந்த அனைத்து பெரிய தொழில் நிறுவனங்களிலும் தொழிலாளர்கள் விரும்பும் தலைமையை தொழிற்சங்கத்திற்கு தேர்ந்தெடுக்க அனுமதிக்காமல் நிர்வாகம் தனக்கு இசைவான தலைமையை திணித்து ஊக்குவித்தது. அப்படிப்பட்ட நிர்வாகத்திற்கு இசைவான தலைவர்கள், தொழிலாளர் ஒப்புதல் பெறாமலேயே துரோக ஒப்பந்தங்களைப் போட்டனர். உற்பத்தி உயர்வுகளை கண்மூடித்தனமாக செய்தனர். இதனால் கடுமையாக பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் தொழிற்சங்க ஜனநாயக உரிமையைக் கோரியும், நிர்வாகிகள் தேர்வு போன்ற தொழிற்சங்க விஷயங்களில் நிர்வாகம் தலையிடக் கூடாது என்று வலியுறுத்தியும் போராட்டங்கள் வெடித்தன. அநேகமாக சிம்சன், எம்.ஆர்.எஃப், எண்ணூர்பவுண்டரி, மெட்டல்பாக்ஸ், எவரெடி, விம்கோ போன்ற எல்லா தொழிற்சாலைகளிலும் நெடிய வேலை நிறுத்தங்கள் நடந்தன. இதில் பல உயிரிழப்புகளும், வன்முறைகளும், ஏராளமான பழிவாங்கல்களும் நேர்ந்தன. இறுதியில் ஒரு தொழிலுக்கு ஒரு சங்கம், அந்த சங்கத்திற்கு ஆண்டிற்கு ஒருமுறை தேர்தல் என்ற சரியான கலாச்சாரம் நிலைநாட்டப்பட்டது. இப்போது சென்னையை சுற்றியுள்ள அனைத்து பெரிய தொழிற்சாலைகளிலும் இதுதான் நிலைமை.
தற்போது யமஹா தொழிற்சாலையில் போட்டிச் சங்கத்தை நிர்வாகமே உருவக்கியதால் ஏற்பட்டுள்ள வேலைநிறுத்தம் இந்த வகையானதே. ஒரு தொழிலுக்கு ஒரு சங்கம் என்ற முறையை, தனது ஆதாயத்திற்காக குலைக்க நினைக்கும் யமஹா நிர்வாகத்தை அனுமதிக்கக் கூடாது. தொழில் அமைதி பெருமளவில் சீர்கெட்டுப் போகும். எனவே அரசு கடுமையான நடவடிக்கை எடுத்து இந்தப் போக்கிற்கு முற்றுப் புள்ளி வைக்கவேண்டும்.