ஊடக உலகில் உண்மையின் பேரொளியாக, உழைக்கும் மக்களின் வாளும், கேடயமுமாக வெளிவந்து கொண்டிருக்கும் தீக்கதிர் நாளேட்டின் விற்பனையை அதிகரிக்கும் வகையில் ஜூலை 1 முதல் 10 வரை சந்தா சேர்ப்பு இயக்கத்தை நடத்துவது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு முடிவு செய்தது. தீக்கதிர் ஏடு கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக வெளிவந்து கொண்டிருக் கிறது. வைரவிழா கண்டு 61வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள நமது தீக்கதிர் ஏட்டுக்கான சந்தா சேர்ப்பு இயக்கம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மிகுந்த உற்சாகத்தோடு நடந்துள்ளது. சந்தா சேர்ப்பு பணியை முதன்மைப் பணியாக ஏற்று செயல்படுத்த வேண்டும் என்ற மாநிலக்குழுவின் முடிவுக்கு ஏற்ப கட்சியின் அனைத்து மாவட்டக்குழுக்கள் மற்றும் பல்வேறு அரங்க உபகுழுக்கள் முழுமையாக உற்சாகத்தோடும், உத்வேகத்தோடும் களத்தில் இறங்கி, கடமையே கண்ணாகக் கொண்டு சந்தா சேர்ப்புப் பணியில் ஈடுபட்டமைக்காக கட்சியின் மாநிலக்குழு சார்பில் வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இதுவரை இயக்க வரலாற்றில் மாநிலத் தலைமை முதல் கட்சிக் கிளைகள் வரை ஒட்டுமொத்தமாக ஒரே நேரத்தில் களத்தில் இறங்கி தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கத்தில் ஈடுபட்டது இதுவே முதன்முறையாகும். அதற்கான விளைச்சலாக சந்தா சேர்ப்பு இயக்கம் முழுமையாக நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். தீக்கதிருக்கு சந்தா கேட்டு சென்ற இடமெல்லாம் இல்லையென்று சொல்லாமல் இன்முகத்தோடு வரவேற்று அனைத்து தரப்பினரும் ஆதரவு நல்கியுள்ளனர். கார்ப்பரேட் ஆதரவு, மதவாத அரசியலுக்கு எதிராக தினந்தோறும் போராடி வரும் தீக்கதிர் ஏட்டோடு மகிழ்ச்சியுடன் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர். திசைகள் தோறும் தீக்கதிரின் பேரொளியை கொண்டு சேர்க்கும் வகையில் நடைபெற்றுள்ள இந்தப் பணி மிகுந்த நம்பிக்கையூட்டுவதாக அமைந்துள்ளது. புனையப்பட்ட பொய்கள் செய்திகளாகவும், கருத்துக்களாகவும் பரப்பப்படும் நிலையில் உழைக்கும் மக்களின் குரலை உரத்து முழங்கும் தீக்கதிர் ஏட்டின் விற்பனையை மென்மேலும் பன்மடங்கு உயர்த்த வேண்டிய அவசியம் உள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட இலக்கு பெரும்பான்மையான இடங்களில் எட்டப்பட்டுள்ளது. பல மாவட்டங்களில் இலக்கையும் தாண்டி சந்தா சேகரிப்பு நடந்துள்ளது. இந்த பணியில் ஈடுபட்ட அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். தீக்கதிர் ஏட்டின் சந்தாதாரர்களாக இணைந்துள்ள பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்கள், குடும்பங்கள், சமூகத்தின் அனைத்துப் பகுதியைச் சேர்ந்த பெருமக்கள் அனைவருக்கும் கட்சியின் மாநிலக்குழு சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இந்தப் பெரும்பணி என்பது இத்துடன் முடிவடையும் ஒன்றல்ல. தீக்கதிர் ஏட்டை மக்களிடம் தொடர்ந்து பரவலாக கொண்டுசெல்ல தொடர் கவனமும் ஈடுபாடும் தேவைப்படுகிறது.
தீக்கதிர் சந்தா சேர்ப்பு என்பது வரவு செலவோடு தொடர்புடைய ஒன்றல்ல. தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் இயக்க கருத்தியலை, இடதுசாரி அரசியலை கொண்டுசெல்லும் பணியின் ஒரு பகுதியாகும். தீக்கதிர் செல்லாத கட்சிக் கிளைகளே இல்லை என்று சொல்லத்தக்க வகையில் பெரும்பாலான கிளைகளில் தீக்கதிர் சந்தா செலுத்தப்பட்டுள்ளது மகிழ்ச்சிக்குரிய ஒன்றாகும். இந்தப் பணியில் ஈடுபட்ட கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள், மாவட்டக்குழு உறுப்பினர்கள், இடைக்குழுச் செயலாளர்கள், இடைக்குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள், கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் அனைவருக்கும் மாநிலக்குழு நன்றி தெரிவித்துக் கொள்கிறது. கடந்த பத்து நாட்களாக அனைத்துப் பணிகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு தீக்கதிர் சந்தா சேர்ப்பு பணி ஒன்றையே சிரமேற்கொண்டு, தீக்கதிரின் அறிவொளி திசையெங்கும் பரவுவதை உறுதிசெய்த அனைவருக்கும் நன்றி. தொடப்பட்டுள்ள இலக்கு புதிய இலக்கிற்கு வழிவகுத்துள்ளது. இடதுசாரி கருத்தியலை, மார்க்சிய தத்துவத்தை, தேசபக்த அரசியலை முன்னிலும் வலுவோடும், வீச்சோடும் எடுத்துச் செல்வோம்.
- கே.பாலகிருஷ்ணன்
மாநிலச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)