அங்கிள்... இன்னிக்கு ஒரு கதை சொல்லுங்களேன்.. என்ன திடீர்னு.. சும்மாதான்... நீங்கதான் நல்ல கதை விடுவீங்கள்ல.. பாத்தியா... சந்தடி சாக்குல கலாய்க்குற.. சொல்லுங்க, அங்கிள்.. சரி... ஒரு ஊர்ல ஒரு சந்தை... பெரிய சந்தையும், சின்ன சந்தையும் பக்கத்து, பக்கதுல இருந்துச்சு.. ரெண்டுமே ரொம்ப பரபரப்பாயிருக்கும்.. எதுக்கு ரெண்டு சந்தை.. ஒண்ணுல மொத்தமா வாங்குவாங்க... சின்ன சந்தைல சில்லரை விலைக்கு வாங்கிக்குவாங்க.. ஓ.. சின்ன சந்தைல கூட்டம் வர ஆரம்பிச்சுருந்துச்சு... லேட்டா வந்த ஒரு காய்கறிக்காரம்மா வேகமா தன்னோட கடைய விரிச்சுது.. பக்கத்துல இருந்த கடைக்காரம்மா, “என்ன ஆச்சு.. பெஞ்சுக்கு போயிட்டு வந்துட்டியா” என்றார். அந்த அம்மாவும், “பெஞ்சுக்கு போய்ட்டு வந்துட்டேன்.. அங்க போகாம எப்புடி காய்கறி வாங்குறது” அப்போது, பக்கத்து கடையில் காய்கறி எடுத்துக் கொண்டிருந்த ஒரு அம்மா, அதென்ன பெஞ்ச் என்று கேட்டார்.
அதான... நானும் கேக்கணும்னு நெனச்சேன் அங்கிள்.. அதென்ன பெஞ்ச்..? அந்தக் காய்கறிக்காரம்மா, அங்க பாருங்க... பெரிய மார்க்கெட் வாசல்ல ரெண்டு பெஞ்ச் இருக்கு... அதுல இருக்குறவங்ககிட்டதான் நாங்க காலைல கடன் வாங்கிக்குவோம்.. அத வெச்சு பெரிய மார்க்கெட்டுக்குள்ள போய் காய் வாங்கிட்டு வருவோம்... சாயந்திரம் போறப்ப கடனையும், வட்டியயும் திருப்பிக் கொடுத்துட்டு போயிடுவோம்.. கந்து வட்டி மாதிரியா, அங்கிள்.. அப்புடித்தான். ஆனா, இதுதான் அந்தக் காலத்து வங்கி.. வங்கியா..? ஆமா.. பெஞ்ச்ங்குற வார்த்தைய பேங்கோனு இத்தாலிய மொழில எழுதுறாங்க... ஸ்பானிய மொழிலயும் அப்புடித்தான்.. , ஃபிரெஞ்சுல பேங்க்.. ஓ.. அப்புடினா பெஞ்ச்தான் பேங்க்னு மாறிடுச்சா.. ஆமா.. பேங்க்னா என்ன.. மக்கள்கிட்ட இருந்து பணத்த வாங்கி, இருப்பு வெச்சுக்குவாங்க... நாம சேமிச்சுக்கலாம்.... தேவைனா கடன் வாங்கிக்கலாம்.. இதுதான் பேங்க் கதை... நீதான கதை சொல்லச் சொன்ன.. நல்லவேளை, நம்ம ஊர்ல இப்புடிப் பிரச்சனை இல்ல.. யாரு சொன்னா... என்கூட ஒருத்தர் வேலை பாத்தாரு.. அவரோட பேரு MOUROUGANE.. அப்படின்னா, மவுரவுக்னே.. இல்லேனா மோரோக்னே... இது என்ன பேரு அங்கிள்... நம்ம ஊருக்காரரா... நம்ம ஊருதான்.
ஆங்கிலோ இந்தியரோ? இல்ல... இது வேற ஒண்ணும் இல்ல... முருகன்தான்.. அவரு புதுச்சேரிக்காரரு.. அவரோட பேரு ஸ்கூல் ஆவணங்கள்ல ஃபிரெஞ்சுல எழுதிருந்துச்சு.. இப்போதான் ஞாபகம் வருது... மிசோரம்ல மிசோ மொழிக்குக்கூட வரி வடிவம் இல்ல... ஆங்கில எழுத்துக்களத்தான் பயன்படுத்துறாங்கன்னு படிச்சுருக்கேன்.. ஆமா.. சின்ன மாநிலம்தான்... அங்க இருந்து மட்டும் 36 நாளிதழ்கள் வெளிய வருது... 43 வாரப்பத்திரிகை, 29 மாதப்பத்திரிகைனு வருது.. நிறைய வாசிப்பாங்க போலருக்கே... ம்ம்ம்... போஜ்பூரி மொழிலயும் நிறைய இருக்கு... போஜ்பூரினு ஒரு மொழியா, அங்கிள்... ஆனா, நம்ம அரசியலமைப்பு சட்டத்தோட எட்டாவது அட்டவணைல அந்த மொழி இல்லயே..? இந்தியாவுல தாய்மொழியா 19 ஆயிரத்து 569 மொழிகள் இருக்குன்னு 2011ல கணக்கு போட்டாங்க... அதப் பின்னாடி சரி பார்த்து அந்த எண்ணிக்கைய 1,369னு சொன்னாங்க.. ஆனா, 96.71 விழுக்காடு மக்கள் பேசுறது இந்த அட்டவணைல இருக்குற 22ல ஒண்ணாதான் இருக்கு.. அப்புறமா 10 ஆயிரம் அல்லது அதுக்கு மேற்பட்டவங்க பேசுறத எடுத்துக்கிட்டு மொழிகளோட எண்ணிக்கை 121னு சொல்லிருக்காங்க.. செம்மொழி தனிதான அங்கிள்... தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம், கன்னடம், மலையாளம் அப்புறம் ஒடியா... அவங்க சொன்ன 121ல போஜ்பூரி இருக்கா..? இருக்கு... அந்த வரிசைல அதிகமான மக்கள் பேசுறதே இந்த மொழிதான்... கிட்டத்தட்ட 5 கோடிப் பேர் பேசுறாங்க.. அட்டவணைல இருக்குற சில மொழிகள விட போஜ்பூரி பேசுவறங்க அதிகம்.. நம்ம தமிழ்ப்படம்லாம் கூட போஜ்பூரில டப்பிங் பண்ணிப் போடுறாங்க.. ஓ... இன்னிக்கு யூ டியுப்ல ஒரு போஜ்பூரி படம் பாத்துர்றேன், அங்கிள்..